சனி, 30 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்! ஜுனியர் விகடன் இதழில் தமுமுக தலைவர் பேட்டி

பேராசிரியர் ஜவாஹிருல்லா


ஜுனியர் விகடன் (நவம்பர் 3, 2011 இதழில்) தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அயோத்தி தீர்ப்பு குறித்து அளித்த பேட்டி
இடம் பெற்றுள்ளது. அதனை நன்றியுடன் பிரசுரிக்கிறோம்
அயோத்தி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்!

அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வேலையை முஸ்லிம் அமைப்புகள் அமைதி யாகச் செய்து வருகின்றன. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் என்ற அமைப்பு இது தொடர்பான ஆலோசனைகளை லக்னோவில் கூடி விவாதித்தது. அந்தக் கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து சென்று கலந்து கொண்டார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா.

''லக்னோ கூட்டத்தின் சாராம்சம் என்ன?''

''பெரும்பாலான முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தைக்கொண்ட அமைப்புதான் 'அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்'. அயோத்தி வழக்கை முஸ்லிம்கள் சார்பில் உ.பி-யின் வஃக்பு வாரியம் நடத்தி வருகிறது. அதன் பின்புலத்தில் அதை இயங்கவைப்பது, இந்த அமைப்புதான்.

நான் கலந்துகொண்ட கூட்டத்தில் தீர்ப்பு பற்றி விரிவாக அலசப்பட்டது. நம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்துக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள்பற்றி, எல்லோரும் ஒருமித்த கருத்துகளை எடுத்துவைத்தனர். 'இந்தத் தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட்டை நாடி தீர்ப்பைத் திருத்தி எழுத வேண்டும், அதற்கான பணிகளைத் தொடர வேண்டும்' என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சொத்து தொடர் பான வழக்குகளில், சந்தேகத்தின் அல்லது நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படக் கூடாது. இந்த வழக்கைப் பொறுத்த வரையில், மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 'அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம்' என்று சங்பரிவார் தரப்பில் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்குப் பிறகும்கூட 'பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்கிற கோரிக்கைகள் எழுகின்றன. முஸ்லிம் ஷரியத் சட்டம் மற்றும் அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு பேச்சுவார்த்தையை நடத்த முஸ்லிம்கள் இப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்!''

''ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாக தீர்ப்பு வழங்கியிருப்பதாகத் தெரியவில்லை யே... இரண்டு தரப்புக்கும் ஏற்ற வகையில் தானே வழங்கப்பட்டுள்ளது?''

''தன் மகன் ஹ§மாயூனுக்கு பாபர் எழுதிய உயில், டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அந்த உயிலில், 'மக்களின் வழிபாட்டுத் தலங்களை ஒருபோதும் இடித்துவிடாதே!' என்று பாபர் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு, தினசரிக் குறிப்புகளாக பாபர் எழுதிய சுயசரிதமான 'பாபர் நாமா'வில்கூட ராமர் கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. கோயில் இடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசிதாசர். அவர் எழுதிய 'ஸ்ரீராமசந்திர மானஸ்'கூட இதுபற்றி ஒரு வரியும் கூறவில்லை.

இந்த வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் சாட்சி சொன்ன 11 இந்து வரலாற்று ஆசிரியர்கள்கூட, 'கோயிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டவில்லை' என்று சான்றுகளுடன் சாட்சி யம் அளித்து இருக்கிறார்கள். சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தால், முஸ்லிம்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைத்திருக்கும். ஆனால், மத அடிப் படையில்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.''

''பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று வந்தீர்கள். அங்கே நிலைமை எப்படி இருக்கிறது?''

''பாபர் மசூதி இடிப்பதற்கு முன்பு 1980-களில் அங்கே சென்றேன். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் போனேன். அந்த இடத்தைக் கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர்களில் ஒருவரான பைசாபாத் நகரைச் சேர்ந்த காலிக் அஹ்மதுடன் சென்றேன். செல்போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பலமான சோதனைகளைக் கடந்து, மசூதி இடித்த இடத்தைப் பார்த்தேன்.

அரை மணிக்குப் பிறகு வெளியே வந்தபோது என் மனதில் தோன்றியது ஒரே ஒரு விஷயம்... '1992 டிசம்பர் 6-ம் தேதி அன்று இந்த அளவுக்குப் பாதுகாப்பு போட்டு இருந்தால், மசூதியைக் காப்பாற்றி இருக்கலாம்' என்பதுதான்.

'ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியைக் கட்டினார்' என்று இந்து அமைப்புகள் சொல்லி வருகின்றன. அப்படியானால், உ.பி. சித்ரக்கூட்டில் இருக்கும் பாலாஜி கோயில் ஒளரங்கசீப் அளித்த தானத்தில் கட்டப்பட்டதற்கு சான்றுகள் இருக்கின்றனவே... அந்தக் கோயிலையும் 'அடிமைச் சின்னம்' என்று சொல்லி சங்பரிவார் அமைப்புகள் இடிக்குமா? வெள்ளையர்களால் கட்டப்பட்ட நமது நாட்டின் நாடாளுமன்றத்தையும் அடிமைச் சின்னம் என்று சொல்லி இடிப்பார்களா?''

''முஸ்லிம்கள் என்ன தீர்வைத்தான் எதிர்ப்பார்க் கிறார்கள்?''

''நியாயத்தை அதுவும் சட்டத்தின் தீர்ப்பைத்தான் எதிர்நோக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட நிலம் குறித்த வழக்கை, ஒரு சொத்துரிமை வழக்காகப் மட்டுமே பார்க்கப்பட வேண்டும். மத மற்றும் இதர நம்பிக்கைகளைக் கொண்டு இதை அணுகக் கூடாது.''

- எம்.தமிழ்ச்செழியன்

கருத்துகள் இல்லை: