புதன், 13 அக்டோபர், 2010

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

அளவுக்கதிகமான ஏற்றுமதி காரணமாக, வெள்ளைப்பூண்டு விலை எப்போதுமில்லாத வகையில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட மலைப்பூண்டு ஒரே மாதத்தில் கிலோவுக்கு 70 ரூபாய் உயர்ந்து,தற்போது, 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் கிலோ 150 ரூபாய்க்கு விற்ற முதல்ரக பூண்டு, 40 ரூபாய் அதகிரித்து தற்போது 190 ரூபாய்க்கு விற்கிறது. 120 ரூபாய்க்கு விற்ற சாதாரண பூண்டு 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் குஜராத், மத்திய பிரதேசத்தில் தான் அதிகளவில் பூண்டு உற்பத்தியாகிறது. இங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமாக 350 டன் என்ற அளவில் இருந்த பூண்டு ஏற்றுமதி, தற்போது 1,400 டன்னாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக பூண்டு விலை எப்போதுமில்லாத வகையில் விலை உயர்ந்துள்ளது. 'பூண்டு அதிக அளவிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தால் மட்டுமே பூண்டு விலை குறையும். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே விலை குறையும்' என தமிழக மளிகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோலவே எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 48 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பாமாயில் தற்போது 52 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூரிய காந்தி எண்ணை கிலோ 57 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும், தேங்காய் எண்ணெய் 85 ரூபாயிலிருந்து 95 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய் கிலோவுக்கு 10 ரூபாய் கூடி, 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த மாதம் 6,500 ரூபாய்க்கு விற்ற 100 கிலோ மூட்டை துவரம்பருப்பு தற்போது 6,000 ரூபாயாகவும், கென்யா, தான்சான்யாவில் இறக்குமதியாகும் இரண்டாவது ரகம் துவரம்பருப்பு 5,800லிருந்து 5,000 ரூபாயாகவும் குறைந்துள்ளன. கடந்த மாதம் 7,000 ரூபாய்க்கு விற்ற முதல் ரக பாசிப்பருப்பு மூட்டை (100 கிலோ), தற்போது 6,000 ரூபாயாகவும், இரண்டாம் ரக பாசிப் பருப்பு 6,500லிருந்து 5,500 ரூபாயாகவும் குறைந்துள்ளது. அதுபோன்றே உளுந்தம் பருப்பு மூட்டை (100 கிலோ) முதல் ரகம், 7,600 லிருந்து 7,200 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 7,200லிருந்து 6,600 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது. உள்நாட்டில் அதிகரித்துள்ள விளைச்சல் மற்றும் இறக்குமதி அதிகரிப்பாலும் பருப்பு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டு, எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே செல்வது சாதாரண மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: