சனி, 9 அக்டோபர், 2010

கேரள தலைநகரில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!!

Kerala Map
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பி்ல்லை!!

நாட்டிலேயே அதிகஅளவில் படிப்பறிவு கொண்ட மாநிலமாக விளங்கும் கேரளாவுக்கு புது அவப் பெயர் கிடைத்தள்ளது. அது அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதுதான்.

நாட்டிலேயே அதிக அளவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது திருவனந்தபுரத்தில்தானாம். குறிப்பாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லையாம்.

கேரள மாநில பொருளாதார ஆய்வறிக்கைதான் (2008ம் ஆண்டுக்கானது) இப்படிக் கூறுகிறது.

கேரளாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் அளவு 15 ஆண்டுகளில் (1992லிருந்து) 338.40 சதவீதமாக உயர்ந்து நிற்கிறதாம்.

கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் ஆகியவை அங்கு கணக்கே கிடையாதாம். அந்த அளவுக்கு அதிகரித்துள்ளதாம். 1990 மற்றும் 2005ம் ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் மட்டும் நான்கு மடங்கு அளவு கற்பழிப்பும், பலாத்காரமும், இன்ன பிற பெண்களுக்கு எதிரான சித்திரவதைகளும் அதிகரித்துள்ளதாம்.

தேசிய குற்றவியல் பீரோவின் ஆவணக் கணக்குப்படி கேரளாவில் 2007ம் ஆண்டு நடந்த மொத்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட அதிகமாம்.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெஜிதா கூறுகையில், திருவனந்தபுரம் நகரில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது குறித்து ஆய்வு நடத்தியபோது இந்த விவரங்கள் தெரிய வந்தன. சக்தி பெண்கள் ஆதார மையத்தைச் சேர்ந்தவர்கள் 800 பெண்களிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர்.

காலை மற்றும் இரவு நேரத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்கள் வெளியில் செல்லும் நேரம், போகும் இடம், போகும் நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் வெளியில் செல்லும்போதும், வீடுகளுக்குத் திரும்பும்போதும் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள், கொடுமைகள் மிகப் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

திருவனந்தபுரத்தின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் மட்டுமே பெண்கள் தனியாக செல்லக் கூடிய அளவுக்கு உள்ளன. இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை. கற்புக்கும், உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதமே இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது என்றார் ரெஜிதா.

அறிவாளிகள் நிரம்பி வழியும் மாநிலத்தின் தலைநகரில் இவ்வளவு அவலம் நிரம்பி வழிவது ஆச்சரியமாக உள்ளது. திருவனந்தபுரம், சசி தரூரின் தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: