இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் பல நாட்களாக உட்பிரவேச அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் கடந்த வியாழக்கிழமை (14.10.2010) இஸ்ரேலியக் கெடுபிடிகளை மீறி காஸா சென்றடைந்துள்ளார்.
அமைச்சர் ஸ்டப் பெய்ட் ஹனூன் கடவை வழியாக காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அங்கே அவர் பல்வேறு அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரினால் கடும் சேதமடைந்துள்ள பகுதிகளையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார். காஸா மீதான இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தின் விளைவாக காஸாவின் வடக்குப் பிராந்தியத்தில் சுமார் 20 000 வீடுகள் சிதிலமடைந்துள்ளதோடு, அப்பிரதேசத்தின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாகச் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பிரமுகர்களின் தொடர் காஸா வருகை "ஹமாஸ் இயக்கமே பலஸ்தீன் மக்களின் பிரதிநிதி" என்ற அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பெற்றுத்தர வழிவகுத்து விடும் என்று காரணங்காட்டி ஃபின்லாந்தின் வெளியுறவு அமைச்சருக்கு காஸாவுக்குள் பிரவேசிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பல நாட்களாகத் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது.
இதேவேளை, ஜோர்தானைச் சேர்ந்த கால்பந்தாட்டக் குழுவினரை காஸாவுக்குள் செல்லவிடாமல் எகிப்து அதிகாரத் தரப்பு அனுமதி மறுத்துள்ளது. 'விஹ்தாத்' எனும் ஜோர்தானிய விளையாட்டுக் கழகத் தலைவர் தாரிக் கோரி இதுபற்றிக் குறிப்பிடுகையில், அம்மானில் உள்ள எகிப்தியத் தூதுவராலயத்தில் மேற்படி விளையாட்டுக் குழுவினருக்கு ரபாஹ் கடவையினூடே காஸா செல்வதற்குக் கடவுச் சீட்டுக்கள் வழங்குமாறு சுமார் 50 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்தும் எகிப்திய அதிகாரத்தரப்பு அதற்கு எத்தகைய மறுமொழியும் அளிக்கவில்லை என்று விசனம் தெரிவித்துத்துள்ளார்.
கடந்த நான்கு வருட காலமாக காஸா மீது நியாயமற்றுத் தொடரும் முற்றுகையை முறியடிக்கும் நோக்கிலும், காஸா விளையாட்டுக் கழகம் மற்றும் உள்ளூர் விளையாட்டுக் குழுக்களுடனான கால்பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்யுமுகமாகவுமே தமது குழு காஸா பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது என கோரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக