சனி, 2 அக்டோபர், 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர் - முலாயம் சிங்


லக்னோ,அக்.2:பாப்ரி மஸ்ஜிதின் உரிமைத் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கருதுவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், உ.பி.மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல், நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதில் நான் அவநம்பிக்கைக் கொள்கிறேன். தேசம் மற்றும் நீதித்துறையின் எதிர்காலத்திற்கு இது உகந்தது அல்ல." என முலாயம் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

"அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும். தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு நிராசையும், ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வும் மேலோங்கியுள்ளது.

முஸ்லிம்கள் தற்பொழுது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு கூறப்படும் என நான் எதிர்பார்க்கிறேன்.

1990 ஆம் ஆண்டில் அயோத்தியில் தாக்குதல் நடத்த முன்னேற்பாடுகள் நடக்கின்றன என நான் எச்சரித்திருந்தேன். சென்னையில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலும் இதனைக் குறித்து தெரிவித்தேன்." இவ்வாறு முலாயாம் தெரிவித்தார்.

முலாயாம்சிங் யாதவின் அறிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், மாயாவதியும் களமிறங்கியுள்ளனர். மாநிலத்தின் அமைதி சூழலை தகர்ப்பவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முலாயம் சிங்கின் பெயர் குறிப்பிடாமல் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு தனி மனிதர்களின் அறிக்கையின் மூலம் கொந்தளிப்பிற்கு உள்ளாகக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அறிக்கை வெளியிடவேண்டாம் என உ.பி காங்கிரஸ் கட்சி முலாயம் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீர்ப்பைக் குறித்து உச்சநீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டுமெனவும், தீர்ப்பில் பா.ஜ.கவிற்கும், முலயாம்சிங்கிற்கும் சாதகமான நிலையில்லாததால் இரு பிரிவினருக்கு இத்தீர்ப்பு நிராசையை ஏற்படுத்தியுள்ளதாக உ.பி. மாநில சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்ரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: