இஸ்லாத்தைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் தன்னுடைய அறிவைப் பொறுத்து அந்த மார்க்க அறிஞர் தனது அபிப்ராயத்தைக் கூறுவார். இதுதான் ஃபத்வா.
ஒரு நோயைப் பற்றியும், அதற்கான சிகிட்சையைக் குறித்தும் ஒரு மருத்துவர் கூறும் அபிப்ராயத்திற்கு ஒத்ததுதான் இதுவும். ஒரு நோய்க்கு பல டாக்டர்களும் பல சிகிச்சை முறைகளைக் கூறுவதுபோல் பல மார்க்க அறிஞர்களும் அவர்களின் அறிவைப் பொறுத்து ஒரு பிரச்சனையில் பல அபிப்ராயங்களை கூறலாம்.
இதனைத் தீர்வைத்தேடி அணுகியவர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமலிருக்கலாம்.ஒட்டுமொத்த சமூகமும் ஃப்த்வாக்களை பின்பற்றவேண்டிய எந்த வித நிர்பந்தமும் இல்லை.
ஆண்டுதோறும் பெரும்பாலும் செய்திகளுக்கு பஞ்சம் ஏற்படும்பொழுது, கர்மமே கண்ணாகயிருக்கும் பத்திரிகையாளர் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அளித்த ஏதேனும் ஃபத்வாவை கண்டுபிடிப்பர்.
முஸ்லிம்கள் பிற்போக்கானவர்கள், முஸ்லிம் அறிஞர்களுக்கு உலக அறிவே கிடையாது அவர்களெல்லாம் பழமைவாதத்தில் ஊறிப்போனவர்கள் என்பதை வெளிப்படுத்துவதுதான் அவர்களின் லட்சியமாகயிருக்கும்.
சமீபத்தில் இந்தியாவின் பிரபல ஊடகங்களில் உலாவிய ஒரு ஃபத்வாவை நீங்கள் ஆராய்ந்தால் இது புரியும். சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுதான் இந்த ஃபத்வா. திடீரென பத்திரிகைகள் ஏன் இதில் அதிகம் ஆர்வங்காட்டின என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகமாகும். ஒரு வாக்கியம்தான் ஃபத்வா. ஆனால் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் அதற்காக அதிகமான பக்கங்களையும், நேரத்தையும் செலவழித்தன.
வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்திழுப்பதற்கான அனைத்து அம்சங்களும் அந்த ஃபத்வாவில் இருப்பதாக பத்திரிகை உலக ஜாம்பவான்கள் எண்ணினார்களோ என்னவோ? பழைய ஒரு ஃபத்வாவை விவாதமாக்க பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் பெரும் முயற்சியை மேற்கொண்ட பொழுது அதன் பின்னணியில் பல காட்சிகளையும் நாம் காணநேர்ந்தது.
மே மாதம் 11 ஆம் தேதி என்.டி.டி.வி இந்த ஃபத்வா குறித்த செய்தியை ஒளிபரப்புகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் இதர சேனல்கள் அதனை வாந்தியெடுக்க ஆரம்பித்தன. கண்ணும் காதும் மூக்கும் வைத்து பல சேனல்களும் பத்திரிகைகளும் பலவாறு கூடுதலான செய்திகளையும் சேர்த்து வெளியிட்டன.
சரி ஃபத்வாதான் என்ன?
இந்தியாவின் பிரசித்திப் பெற்ற மதரஸாவான தேவ்பந்த் தாருல் உலூமிற்கு ஒருவர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கு நிவாரணம் தேடி ஒரு கடிதம் எழுதுகிறார்: 'இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒரு முஸ்லிம் பெண் வேலைக்கு செல்லலாமா? அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஹலாலா? ஹராமா?' என்பதுதான் அந்தக் கேள்வி.
இவருடைய கேள்விக்கு அளிக்கப்பட்ட ஃபத்வா இதுதான்: 'ஆணும் பெண்ணும் ஒன்றாக பணியாற்றுவதும், பர்தா இல்லாமல் உரையாடுவதும், வெளிப்படையாக நடவடிக்கைகளில் பங்கேற்பதுமான சூழலில் ஒரு முஸ்லிம் பெண்மணி வேலைப்பார்ப்பது ஹராமாகும்'.
இனி பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியை பார்ப்போம்.
வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்களுக்கெதிராக ஃபத்வா -என்.டி.டிவி
முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது - சமய் லைவ்
முஸ்லிம் பெண்கள் பொதுஇடத்தில் வேலைச செய்யக்கூடாது என்று தாருல் உலூம்- இந்தியா டுடே
இப்பொழுது இதோ வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கெதிராக ஃபத்வா- இந்தியன் எக்ஸ்பிரஸ்
முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவருடன் பணியாற்றுவது இஸ்லாத்திற்கு மாற்றமானது- அவுட்லுக்
மேற்கத்திய நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் மஞ்சள் பத்திரிகைகள் ஏன் இந்தியாவுக்கு வருவதில்லை என கேள்வியெழுப்புவோருக்கு பதில் இதுதான்: இந்தியாவில் மஞ்சள் பத்திரிகையின் இடத்தை நிரப்புவது இந்தியாவின் பிரபலமான பத்திரிகைகளாகும்.
ஃபத்வாவை ஒருமுறைக்கூடி ஆராய்வோம்:'தேவ் பந்த் முஃப்தி தனது ஃப்த்வாவில் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வது ஹராம் என்று கூறவேயில்லை. முஸ்லிம் பெண்மணி வேலைக்குச் செல்வது அல்ல இங்கு பிரச்சனை. பர்தா இல்லாமல் வெளிப்படையாக ஆணும் பெண்ணும் ஒன்றாக பணியாற்றுவதைத்தான் முஃப்தி குறிப்பிடுகிறார்.
ஆனால் முஸ்லிம் பெண் வேலைக்குச் செல்வதோ அவளுடைய வருமானமோ ஹராம் என்று ஃப்த்வாவில் இல்லை. ஆதலால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பிரபல பத்திரிகைகள் வெளியிட்ட தலைப்புச் செய்திகளுக்கும் ஃபத்வாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஒரு சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிடுமுன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புக் கொண்டு விளக்கம் கேட்கும் சாதாரண அறிவு கூட பிரபல ஊடகங்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களுக்கு தேவை சூடான செய்திகள். அதற்காக எதையும் செய்ய அவர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர்.
தொலைக்காட்சி சானல்கள் இன்னும் ஒரு படி மேலேச்சென்று 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட ஃபத்வாக்கள் குறித்தும் செய்திகளை வெளியிடுகிறது.
உ.பி.மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் இம்ரானா என்ற பெண்மணியை அவருடைய மாமனார் கற்பழித்துவிட்டார் என்றும் இனி இம்ரானா அவருடைய கணவருடன் வாழத்தகுதியில்லை என தேவ் பந்த் மதரஸா ஃப்த்வா கொடுத்ததாக கூறி ஊடகங்கள் கிளப்பிய விவாதத்தின் சூடு தணிய பல நாட்கள் ஆனது.
ஊடகங்கள் இவ்வாறு ஒரு நீண்ட போரையே இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடுத்து வருகின்றன என்ற குற்றச்சாட்டை நாம் மறுப்பதற்கில்லை.
ஏற்கனவே தகர்ந்துபோயிருக்கும் முஸ்லிம்களின் இமேஜை மேலும் கெடுப்பதுதான் இத்தகைய செய்திகள் என கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தபஸ்ஸும் கான் கூறுவதில் உண்மையுண்டு.
இவ்வாறு முஸ்லிம்களைக் குறித்த செய்திகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும் ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு சில மசாலாக்களை சேர்த்து அச்செய்திகளின் சுவையை கூட்டுகின்றன.
ஃபத்வா நல்லதோ கெட்டதோ அவற்றிற்கு முஸ்லிம் சமுதாயத்தில் ஆதரவு குறைவே என டெல்லியில் முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே ஆய்வை மேற்கொண்ட தபஸ்ஸும் கான் கூறுகிறார்.
இளைஞர்கள் மத்தியில் மிகச்சிலரே இத்தகைய ஃபத்வாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஏதேனும் ஒரு சம்பவத்தைக் குறித்து ஊடகங்கள் மார்க்க அறிஞர்களின் வாயைக் கிளறுகின்றன. இவர்களுடைய எண்ணங்களை புரிந்துக் கொள்ளாமல் அல்லது எதிரிகளின் திட்டத்தை புரிந்துக் கொள்ளாமலேயே அவர்களும் சூழலைப்புரியாமல் ஃபத்வாக்களை வழங்கிவிடுகின்றனர். இதனை ஊடகங்கள் ஒரு சமுதாயத்தின் கொள்கையாக மாற்றிவிடுகின்றது. இதுதான் இஸ்லாம் என்று அவர்கள் பிரச்சாரம் செய்ய தலைப்பட்டு விடுகின்றனர்.
சானியா மிர்சா விவகாரத்தில் இவ்வாறுதான் நடந்தது. சானியா மிர்சா அணிந்திருக்கும் ஆடையைக் குறித்து ஒரு கேள்வி எழுந்தபொழுது அவருக்கெதிராக ஒரு ஃபத்வா வெளியிடப்பட்டது. அதனை ஊடகங்கள் கோலாகலப்படுத்தின. இஸ்லாத்தில் பெண்ணிற்கு தனது ஆடையைக்கூட தேர்ந்தெடுக்க உரிமையில்லையா? எனக்கூக்கூரல் எழுப்பின.
ஆனால் இதேக்கேள்வியை சகோதரர் ஜாஹிர் நாயக்கின் கூற்றுப்படி ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் அல்லது போப்பிடம் சென்று செரீனா வில்லியம்ஸ் மற்றும் மரியா சரபோவாவின் ஆடைகளைக் குறித்து கேள்வியை எழுப்புவார்களா?
ஊடகங்களால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதுக் குறித்த ஃபத்வாவிற்கு தேவ்பந்த் விளக்கம் அளித்துவிட்டது.
ஆனால் அதற்கு முன்பே முஸ்லிம் சமுதாயத்திற்கு காயங்களை ஏற்படுத்திவிட்டன ஊடகங்கள். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சில காட்சி ஊடகங்கள் இத்தகைய ஃபத்வாக்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டு விவாதம் என்ற பெயரில் முஸ்லிம் அறிவுஜீவிகளாகவும், சமூக சேவகர்களாகவும் வேடமிட்டுத்திரியும் சிலரை அழைத்து நடத்துகின்றன. இந்த அறிவுஜீவிகளும்(?) ஏதோ மெத்தப்படித்த மேதாவிகள் போன்று உளறிக்கொட்டுகின்றனர்.
சமீபத்திய தேவ்பந்த் ஃபத்வாவிலும் இதுதான் நடந்தது.சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி சானலில் நாகரிகா கோஷின் தலைமையில் நடந்த ஃபத்வா விவாதத்தில் பங்கெடுத்த எவரும் ஃபத்வாவின் மூலத்தைக் குறித்து ஆராயவில்லை. அதனால் அவர்கள் முஸ்லிம்களைக் குறித்த தவறான கருத்துக்களை முன்வைத்தனர்.
அதாவது முஸ்லிம்கள் தனிமையானவர்கள்,அவர்களுக்கு எதார்த்த உலகத்துடன் எந்தத்தொடர்பும் இல்லை. முஸ்லிம் பெண்களை காப்பாற்றவேண்டியுள்ளது என அவசரப்பட்டு கருத்துக்கூறிய கமால் ஃபாரூக்கிற்கோ ஸாதியா தஹ்லவிக்கோ நாகரிகா கோஷின் நோக்கம் முஸ்லிம்களை காப்பாற்றுவது அல்ல என்பது புரியாமல் போனது பரிதாபம்.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கும்,மதரஸாக்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
தற்காலப் பிரச்சனைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் பொழுது சூழலை அறிந்து ஃபத்வாவை வழங்குங்கள். அவசரப்பட்டு வழங்கும் ஃபத்வாக்களால் ஒரு சமூகமே மோசமாக சித்தரிக்கப்படுவதற்கு காரணமாகி விடுகிறோம் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.
இங்கு முஸ்லிம் சமுதாயத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர்(ரலி...) அவர்கள் கூறிய கூற்றைக் குறிப்பிடுவது சாலச் சிறந்ததாகும். "எவர் ஒருவர் இஸ்லாத்தை கற்றுவிட்டு ஜாஹிலிய்யத்தை கற்கவில்லையோ அவர் இஸ்லாத்தை அலைக்கழித்துவிடுவார் என அஞ்சுகிறேன்".
முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், தலைவர்களும் பாடம் பெறவேண்டிய காலத்தால் அழியாத வரிகள் இவை.
விமர்சகன்