வெள்ளி, 14 மே, 2010

விற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது யார்?' புத்தகம்.


புதுடெல்லி:ரகசிய உடன்படிக்கையின் காரணமாகவோ அல்லது காழ்ப்புணர்வினாலோ தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட 'Who Killed Karkare' (கர்காரேயைக் கொன்றது யார்?) புத்தகம் விற்பனையில் முன்னணி வகிக்கிறது. புத்தகம் வெளியிட்டு 7 மாதத்திற்குள் 4-ஆம் பதிப்பிற்கு தயாராகி வருகிறது அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். மும்பைத் தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவுற சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது 2009 அக்டோபர் மாதத்தில் தான் மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறை ஐ.ஜியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்.எம்.முஷ்ரிஃப் எழுதிய 'கர்காரேயைக் கொன்றது யார்?' என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபரோஸ் மீடியாதான் இப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைக் குறித்த புலனாய்வுகள், புலனாய்வுத் துறைகளின் பங்கு, மும்பைத் தாக்குதலின் பின்னணிகள், அதைக் குறித்த புலனாய்வு உள்ளிட்ட விஷயங்களை இப்புத்தகத்தில் காணலாம். இந்தியாவில் நடைபெற்ற எல்லாக் குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தீவிரமாக நடைபெற்று வரும் பிரச்சாரத்திலிருந்து வித்தியாசமாக இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு பின்னணியில் பிராமண லாபி செயல்படுவதாக அப்புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் எஸ்.எம்.முஷ்ரிஃப். ஐ.பி மற்றும் ஊடகங்களின் மீதான தங்களின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அவர்கள் இதனை சாத்தியமாக்குவதாகவும் அப்புத்தகம் கூறுகிறது.

போலீஸ் வாழ்க்கையின் அனுபவங்கள், பத்திரிகை குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் எஸ்.எம்.முஷ்ரிஃப்.இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் 'உண்மையான' முகத்தை வெளிப்படுத்துவதால் தான் தேசிய ஊடகங்கள் இப்புத்தகத்தை புறக்கணிக்க காரணமாகயிருக்கலாம் என சுதந்திர பத்திரிகையாளரான சுபாஷ் கடாடே தெரிவிக்கிறார்.மேலும் தேசிய முக்கிய ஊடகங்களுக்கும் ஐ.பிக்கும் இடையிலான ரகசிய தொடர்பை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறுகிறார் சுபாஷ் கடாடே.
இப்புத்தகத்தின் 3-வது பதிப்பு தற்பொழுது விற்பனையில் உள்ளது. நான்காவது பதிப்பை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள் பதிப்பகத்தார். உருது, தமிழ் (விடியல் வெள்ளி மாத இதழில் தொடராகவும் வெளிவருகிறது), கன்னடம், மலையாளம்(தேஜஸ் பப்ளிகேஷன்) ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது.

மராத்தி, குஜராத்தி,ஹிந்தி,பெங்காளி ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 10 to 20 புத்தகங்களுக்கு ஆர்டர் வருவதாக தெரிவிக்கிறார் பதிப்பகத்தின் மாஸின் கான். மாஸின் கானின் சக பத்திரிகையாளரான கவுசர் கூறுகையில், "ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த NCPUL புத்தக கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகம் who killed karkare ஆகும். புத்தக கண்காட்சியைப் பற்றிச் செய்தி வெளியிட்ட எந்தவொரு பத்திரிகையும் அதிகம் விற்பனையான இப்புத்தகத்தைப் பற்றி எவ்வித விமர்சனத்தையும் வெளியிடவில்லை" என ஆதங்கப்படுகிறார்.

கவுசர் மேலும் கூறுகையில், தேசிய அளவிலான முக்கிய ஊடகங்களுக்கு மாற்றீடாக கருதப்படும் தெஹல்கா மற்றும் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கூட இப்புத்தகத்தைக் குறித்து ஒரு செய்தியையும் வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்.
ஆனால் மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏ.சி.பி.அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே எழுதிய 'To the last Bullet' என்ற புத்தகத்தை தேசிய முக்கிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

பயங்கரவாதத்தின் அரசியலையும், புலனாய்வில் ஏற்பட்டுள்ள பழுதுகளையும் சுட்டிக்காட்டும் 'who killed karkare' யை புறக்கணிக்கும் தேசிய பத்திரிகைகளுக்கு காம்தேவின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும், மும்பை போலீசுடனான கசப்பான அனுபவங்களையும் கூறும் 'To the last Bullet' புத்தகம் விருப்பமானதாக மாறியது எவ்வாறு என்பது தனக்கு புரியவில்லை என்கிறார் வெளியீட்டாளரான மாஸின்.
சமீபத்தில் 'தி ஹிந்து' பத்திரிகையின் விஜயவாடா பதிப்பில் மக்கள் அதிகம் விரும்பும் புத்தகங்களின் பட்டியலில் 'who killed karkare' புத்தகத்தையும் உட்படுத்தியிருந்தனர்.

கருத்துகள் இல்லை: