வியாழன், 27 மே, 2010

மாநகராட்சி பள்ளியில் படித்து மாநில முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவி ஜாஸ்மின்

Jasmine State First

ஜாஸ்மின் ‍‍வெற்றிக் களிப்பில்


ஐ.ஏ.ஏஸ். தேர்வில் வெற்றிப் பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே தனது இலட்சியம் என்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் அவரிடம் வாழ்த்துக் கூறிய தமுமுக நிர்வாகிகளிடம் கூறினார்.


நெல்லை டவுண் அருகே உள்ள கல்லணையில் எம்.பி.எல் மாநகராட்சி பள்ளியில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான் இல்லத்தரசி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த எஸ் ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.

மாணவி ஜாஸ்மின் குடும்பத்தினர்



மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.ரு 7000 மாத வருமானமாக இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.


மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.

பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இறைவனின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.இவர் செய்தியாளர்களிடம்,காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத் தெடங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார். நான் 498 மதிப்பெண்கள் வரும் என எதிர்பார்த்தேன் என்றும் அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மின் தமிழில் 98 ஆங்கிலத்தில் 99 கணிதத்தில் 100 அறிவியலில் 100 சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல்; ஆகிய மூன்று பாடங்களில் மாநில அளவில் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்று ஜாஸ்மின் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.


மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.

தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது வரை இல்லாத அளவிற்கு அரசுப்பள்ளியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பெற்று மாணவி ஜாஸ்மின் சாதனை படைத்திருக்கிறார் என்பது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இவரது வெற்றியை அடுத்து இந்தப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அளவிலா மகிழ்ச்சியில் திகைத்து போயினர். டியூசன் படிக்காமல், கான்வென்ட் பள்ளியில் படிக்காமல் கடுமையான உழைப்பு மூலம் சாதனை படைக்க இயலும் என்பதற்கு மாணவி ஜாஸ்மின் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நெல்லை டவுண் முஸ்லிம் மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார் என்ற செய்தி வந்தவுடன் முதலில் அவருக்கு தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் பாருக். மாவட்டச் ‍செயலாளர் உஸ்மான் கான் ம.ம.க. மாவட்ட பொருளாளர் ரசுல் மைதீன்ஈ நெல்லை டவுண் தமுமுக துணைத் தலைவர் தலைமையில் ஜமால். சுல்தான், நசீர், அபபக்கர், சேக், வாகித் உட்பட ஏராளமான தமுமுகவினர் நேரில் வாழ்த்துத் தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ஆகியோர் தொலைப்பேசி மூலம் மாணவி ஜாஸ்மினை வாழ்த்தினர்.


மாநிலத்தில் மூன்றாவது இடம் பெற்ற பத்து மாணவர்களில் ஒருவர் நஸ்ரின் பாத்திமா
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 493 மார்க்குகள் பெற்று 10 மாணவ மாணவிகள் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களில் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ள ஆரணியில் படித்த முஸ்லிம் மாணவி நசுரின்பாத்திமாவும் ஒருவர்

தேர்ச்சி விகிதம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவர்கள் 79. 4 சதவீதமும் மாணவிகள் 85. 5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்திற்கு மேலாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் மார்க்குகள் பெற்றுள்ளனர். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மார்க்குகளை 2 ஆயிரத்து 399 பேர் பெற்றுள்ளனர்.


ஓ.எஸ்.எல்.சி., தேர்வு பள்ளப்பட்டி யு.எச். ஒரியண்டல் அரபி பெண்கள் பள்ளி முதலிடம்
ஓ.எஸ்.எல்.சி., தேர்வு வாரியத்தில் , தேர்வு எழுதியவர்களில் கரூர் பள்ளப்பட்டி யு.எச்., ஓரியன்டல் அராபிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பமீதா பாணு, ஜயினப் சஹானஜ் ஆகியோர் 500க்கு 476 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தை 473 மார்க்குகள் பெற்று நசிஹா பெற்றுள்ளார். 3ம் இடத்தை 472 மார்க்குள் பெற்று சுகைனா பாத்திமா, முகமது ரெய்ஹான் ஆகியோர் பெற்றுள்ளனர்.

சிறப்பு உடனடி தேர்வு ஜுலை 1ம் தேதி

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேசன் பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜுலை 1ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி முடிவடைகிறது. மெட்ரிக்குலேசன் தேர்வு ஜுன் 29ம்தேதி தொடங்கி ஜுலை 9ம்தேதி முடிகிறது. ஓ.எஸ்.எல்.சி. தேர்வு ஜுன் 30ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி முடிகிறது. ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஜுன் 29ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி முடிகிறது. மறுகூட்டலுக்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. மே 31ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: