புதன், 19 மே, 2010

போபால் விஷவாயு கசிவு வழக்கு: 25 ஆண்டுகளுக்கு பின் அடுத்த மாதம் தீர்ப்பு

போபாலில் நடந்த விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பான வழக்கில், 25 ஆண்டுகளுக்கு பின், அடுத்த மாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984ல் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனர்.

இது தொடர்பாக யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன், யூனியன் கார்பைடு (இந்தியா) லிட்., யூனியன் கார்பைடு (கிழக்கு) ஹாங்காங் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும், யு.சி.சி., தலைவர் வாரன் ஆண்டர்சன் மற்றும் எட்டு இந்திய அதிகாரிகளுக்கு எதிராகவும், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு போபால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது.வழக்கு விசாரணையின் போது, யூனியன் கார்பைடு (இந்தியா) நிறுவனத்தை சேர்ந்த இந்திய அதிகாரிகள் மட்டுமே ஆஜராகினர்.

வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட மற்றவர்கள் தலைமறைவாகி (அமெரிக்காவில்) விட்டனர். விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டும், அமெரிக்காவை சேர்ந்த ஆண்டர்சனை நாடு கடத்தி, விசாரணைக்காக இந்தியா கொண்டுவர முடியவில்லை.

வழக்கு நீண்ட காலமாக தொடர்ந்து நடந்ததால், ஏராளமான மாஜிஸ்திரேட்கள் மாறி விட்டனர். 178 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 3,008 ஆவணங்கள் மற்றும் ஆடியோ, வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது இந்த வழக்கை மாஜிஸ்திரேட் மோகன் பி திவாரி விசாரித்து வருகிறார். சி.பி.ஐ. மற்றும் அரசு தரப்பு வக்கீல்களின் வாதம் சமீபத்தில் முடிவடைந்தது.

விசாரணை முடிவடைந்ததை அடுத்து, அடுத்த மாதம் 7ம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் கூறுகையில்,"இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நாங்கள் பலமுறை புறக்கணிக்கப்பட்டு விட்டோம். எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. குற்றத்துக்கு காரணமானவர்கள் யாரும் இந்த வழக்கில் தண்டிக்கப்படும் வாய்ப்பு இல்லை" என்றனர்.

கருத்துகள் இல்லை: