புதன், 19 மே, 2010

துருக்கியுடன் அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது.


டெஹ்ரான்:ஈரானின் சுத்திகரிக்கப்படாத யுரேனியத்திற்கு பகரமாக துருக்கியிடமிருந்து செறியூட்டப்பட்ட யுரேனியத்தை பெறுவதற்கான அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஈரான் அங்கீகரித்தது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மத்தியஸ்தராக பங்கேற்ற மராத்தான் பேச்சுவார்த்தையின் முடிவில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாதும், துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் உருதுகானும் நேற்று அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின்படி சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் மேற்பார்வையில் ஈரான் 1.2 டன் பகுதி செறியூட்டப்பட்ட யுரேனியத்தை துருக்கிக்கு வழங்கும். பகரமாக துருக்கி ஈரானுக்கு 120 கிலோகிராம் அணுசக்தி எரிபொருளை வழங்கும். இதனை ஈரான் மருத்துவ ஆய்வு ரியாக்டர்களில் பயன்படுத்தும்.

ஒப்பந்தத்தின் முழுவிபரத்தையும் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியிடம் அறிவித்து அங்கீகாரம் பெறவேண்டும். ஒப்பந்தத்தின் சரத்துகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாகவில்லை. ஈரானுக்கெதிராக புதிய தடையை ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கடுமையான முயற்சிகளை மேற்க்கொண்டிருக்கும் வேளையில் இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஐ.நா உத்தரவின்படி அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்ததத்திற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே துவங்கியிருந்தாலும், சில நிபந்தனைகளை அங்கீகரிக்க ஈரான் தயங்கியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது. அணுசக்தி எரிபொருள் பரிமாற்றம் ஒரே தடவையில் ஈரானில் வைத்து நடைபெறவேண்டும் என்பதில் ஈரான் பிடிவாதமாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியுறக் காரணமாகும்.

ஆனால் 20 சதவீதம் செறியூட்டப்பட்ட யுரேனியம் பரிமாற்றத்தில் துருக்கி தோல்வியுற்றால் ஈரானின் சுத்திகரிக்கப்படாத யுரேனியத்தை துருக்கி முற்றிலும் திருப்பியளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், ஈரானின் அணுசக்தி பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் வழியை மீண்டும் துவக்குவதற்கு ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாடுகளோடும், ஜெர்மனியோடும் கோரிக்கை விடுத்தார்.

புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்ட சூழலில் ஈரானுக்கெதிராக கூடுதல் தடைகளை ஏற்படுத்துவதை நியாயப்படுத்த இயலாது என துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூதோக்லு தெரிவித்தார். ஈரானுடன் துருக்கியின் பேச்சுவார்த்தை தோல்வியுறும் என அமெரிக்காவும், ரஷ்யாவும் கருதியிருந்தன. ஆனால் கடைசி முயற்சியாக பிரேசில் அதிபர் மத்தியஸ்தம் வகிப்பதற்காக ஈரானுக்கு வருகைப் புரிந்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: