உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கணினி தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு.
ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக புத்தகங்களாக, பின்னர் கணினி மூலம் உலகெங்கும் வியாபித்திருக்கிறது. அதற்காக உழைத்த உமர் தம்பிக்காக இக்கோரிக்கை இக்கடிதம்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டிணத்தில் ஜீன் 15, 1953ல் அப்துல் ஹமீது, ரொக்கையாவுக்கு மகனாய் பிறந்தவர் உமர் தம்பி.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு துபாயில் இருந்து பணியில் விருப்ப ஓய்வு பெற்று தாயகம் வந்தார். தமிழகம் வந்து மென்பொருட்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியை செய்தார். பின்னர் தமிழ் கூறும் நல்லுலகம் கணினியிலும் தடம் பதிக்க ஆரம்பித்த அக்காலத்தில் தன்னையும் அதனுடன் இணைத்துக் கொண்டார்.
தேனீ இயங்கு எழுத்துரு
உலாவிகளில் ((Browser) செயல்படும் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெஃப்ட்-ஐ முதன் முதலாகத் தமிழில் அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத போதும் கூடத் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த இணையத்தளங்களை மைக்ரோசாஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்த முடிந்தது.
தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.
உதாரணத்திற்கு www.murasoli.in முரசொலி இணையதளத்தை கணிணியில் வாசிப்பதென்றால் முரசொலி இணையதளத்தில் நிறுவப்பட்டிருக்கும் (Tamil Font) தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்த பின்னரே வாசிக்க முடியும். ஆனால் உமருடைய தேனி தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி எந்த இணையதளமாக இருந்தாலும் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தாமல் வாசிக்கலாம்.
தமிழ் இணைய அகராதி
கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார் உமர் தம்பி.
உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் :
1. AWC Phonetic Unicode Writer
2. Online RSS creator – can be used in offline as well
3. RSS செய்தியோடை உருவாக்கி
4. எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
5. தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
6. எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
7. ஒருங்குறி மாற்றி
8. க்னூ (Linex) பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
9. தேனீ ஒருங்குறி எழுத்துரு
10. வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
11. வைகை இயங்கு எழுத்துரு
12. தமிழ் மின்னஞ்சல்
13. தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
14. Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
15. தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.
உமருக்கு ஏன் அங்கீகாரம்
சொற்ப பலன்களைக் கொண்ட மென்பொருள் நிரலிகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் யுனிகோட் எழுத்துருக்களும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி எவ்வித பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தவர் உமர் தம்பி. இளம் வயதிலிருந்து தம் தாய்மொழி தமிழ் மீது நல்ல பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார் உமர். உமர் மறைந்தது, 2006 ஆம் ஆண்டு ஜூலை 12. மண்ணில் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை பெருங்கொடையினை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், உமர்.
இணையத்தில் விரைவாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பல வகையான தமிழ் வலைப்பூ பதிவுகளுக்கும், தமிழ் கணினி தொழில் நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயன்பாட்டாளர்களாலும் தமிழ் இணைய அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
கணினியில் தமிழ் மொழி அதிவிரைவில் வளர்ச்சியடைவதற்கு உமர் தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. அதுபோல் உமரின் எழுத்துருக்கள், செயலிகள், கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுரைகள் அன்றும் இன்றும் தமிழ் இணையப் பயனார்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
உமருக்கு உரிய அங்கீகாரம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கிடைக்கப் பெற்றால் முதலில் மகிழ்ச்சி அடையப் போவது இணையத் தமிழ் மக்கள் தான்.
உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டால், அது கணினித் தமிழில் சாதனைப் படைக்க எந்த அரசாங்கத்தின் உதவியின்றி தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்துவரும், செய்ய துடிக்கும் எத்தனையோ உமர் தம்பிகளை இவ்வுலகம் காணும். தமிழ் இணையத்தில் தனக்கேன்று தனித்துவத்துடன் திகழும், மென்மேலும் வளர்ச்சியடையும்.
நம் தாய்மொழி தமிழ்ச் செம்மொழியாக மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் இவ்வுலகில் பல அங்கீகாரங்களை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
அரசு உதவியின்றி தம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உமர் தம்பி போன்ற எண்ணற்ற தன்னார்வத் தமிழ் கணினி தொண்டர்களை கண்டறியப்பட வேண்டும், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
உமர் தம்பி பெயரில் விருதோ அல்லது உமர் தம்பி பெயரில் தமிழில் கணினி ஆய்வு செய்வோருக்கு கல்வி உதவித் தொகையோ அல்லது கணினித் தமிழ் ஆராய்ச்சி குழுவுக்கு பெயரோ அல்லது தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறைக்கு உமரின் பெயரையோ சூட்டினால், அது அவருக்கு செய்யும் கௌரவமாக இருக்கும்.
கோவையில் ஜீன் 23 முதல் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய முத்தமிழறிர் ஆகிய நீங்கள் ஆணை பிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தர வேண்டும் என்பதே இன்று இணையத் தமிழர்களின் விலை மதிக்க முடியாத விருப்பமாக உள்ளது.
அப்படி ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால், பெருமையடையப் போவது உமர் தம்பியல்ல... இணையத் தமிழே! இச்சாதனைக்கு வழிவகுத்திடுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்டவாறு தமுமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக