தொடர் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: ஆர்.எம்.அனீபா உள்பட 8 பேர் விடுதலை; சிறப்பு கோர்ட்டு உத்தரவு
கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஈரோட்டில் சேரன் எக்ஸ்பிரஸ், கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர். 72பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரை தேடிவந்தனர்.
அவர்களில் ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா, அப்துல் ரகீம், முபாரக் அலி, புத்தி என்கிற முகமது அலிகான், சம்ஜித் அகமது, ரியாசன் ரஹ்மான், ஆர்.எம். அனீபா ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். முகமது சுல்தான் என்பவர் இறந்து விட்டார். அஷ்ரப் தலைமறைவாக உள்ளார்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் கடந்த 13 வருடமாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி பிரேம்குமார் இன்று தீர்ப்பளித்தார். அப்போது குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் ஆர்.எம். அனீபா உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
-மாலை மலர் 21.5.2010
ரயில்களில் குண்டு வைத்த வழக்கு
குணங்குடி அனீபா உட்பட 8 பேர் விடுதலை
சென்னை
மே 22: கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி அருகே குண்டு வெடித்தது.
அதேநாளில் ஈரோடு அருகே சேரன் எஸ்க்பிரசிலும், கொல்லம் அருகே ஆலப்புழா எக்ஸ்பிரசிலும் குண்டுகள் வெடித்தன. ஒரே நாளில் நடந்த 3 குண்டுவெடிப்புகளில் 10 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஜிகாத் கமிட்டி தலைவர் குணங்குடி அனீபா, அப்துல் ரஹீம், முபாரக் அலி, ஏர்வாடி காசிம், முகமது அலிகான் குட்டி, சம்சுத் அகமது, அலி அப்துல்லா, ரியாசுதீன் ரஹ்மான், தஸ்தஹீர் ஆகிய 9பேரை போலீசார் கைது செய்தனர். அப்சல் அலி என்பவர் தலைமறைவானார்.
இவர்கள் மீது வெடிகுண்டு வைத்தது, கூட்டு சதி, கொலை உள்ளிட்ட பல பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை காலத்தில் தஸ்தஹீர் இறந்துவிட்டார். மற்ற 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. வழக்கில் 158 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரேம்குமார் நேற்று தீர்ப்பளித்தார். ‘’இந்த வழக்கில் கூட்டு சதி நடந்துள்ளது என நிரூபிக்கப்படவில்லை” என்று கூறி 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-தினகரன் 22.5.10 சென்னை பதிப்பு பக்- 6
சென்னை, மே 21: ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதாகக் கூறி இவர்கள் விடுவிக்கப்படுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1997 டிசம்பர் 6ல் திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், ஈரோடு அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இதில் ரயில் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 72 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜிகாத் கமிட்டி தலைவர் குணங்குடி ஹனீபா, ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா, அப்துல் ரஹீம், முபாரக் அலி, முகமது அலிகான், சம்ஜித் அகமது, ரியாதுர் ரஹ்மான், குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, முகமது தஸ்தகீர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டனர். இதில், முகமது தஸ்தகீர் 12-3-2000-ல் இறந்தார்.
மற்றொரு முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அஷ்ரப் அலி தலைமறைவாக உள்ளார். அவர் மீது திருச்சி நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் சிறையிலேயே 13 ஆண்டுகளாக இருந்து வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் துரைராஜும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் புகழேந்தி, சிவபெருமாள் ஆகியோரும் ஆஜராயினர்.
10 பேர் பிறழ் சாட்சியம்: கூட்டுச் சதி, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அரசு தரப்பில் 420 சாட்சிகள் குறிப்பிடப்பட்டன. இதில் 151 சாட்சிகளை விசாரித்தாலே போதுமானது என அரசு தரப்பு பின்னர் முடிவெடுத்தது. இதில் முக்கிய சாட்சிகள் 10 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். பின்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதன் அடிப்படையில்,குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆர்.பிரேம்குமார் வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில் தெரிவித்தார்.
இதையடுத்து, குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 பேர் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர். ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா ஆகியோர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
-தினமனி 22.5.10
ரெயில் வெடிகுண்டு வழக்கில் குணங்குடி ஹனிபா உள்பட 8 பேர் விடுதலை 12 ஆண்டுகளுக்கு பிறகு பூந்தமல்லி கோர்ட் தீர்ப்பு
பூந்தமல்லி,மே 22
பாபர் மசூதி இடிப்பு தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குணங்குடி ஹனிபா உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு பூந்தமல்லி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
குண்டுகள் வெடித்தன
பாபர் மசூதி இடிப்பு தினமான 6.12.1997 அன்று ஈரோடு, திருச்சி, திருச்சூர் ஆகிய ரெயில்வே நிலையங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டு விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 10 பேர் பலியானார்கள். 72 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வெடிகுண்டு விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக தேவகோட்டை அருகே அனுமந்தகுடியில் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா 15.12.1998 அன்று கைது செய்யப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றம்
அவருடன் சேர்த்து இந்த வழக்கில் ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா, அப்துல் ரஹீம், முபாரக் அலி, குட்டி என்ற முஹம்மது அலிகான், சம்ஜூத் அகமது, ரியாஸ்கர் ரஹ்மான் உள்ளிட்ட 8 பேர் வெடிப்பொருள் கையாளுதல் உள்ளிட்ட சட்டபிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரில் முகம்து சுல்தான் இறந்து விட்டார். அஷ்ரப் என்பவர் தலைமரைவாகிவிட்டார்.
கடந்த 12 வருடமாக இந்த வழக்கு பூந்தமல்லியை அடுத்த கரையான் சாவடியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வெடிகுண்டு வழக்கில் 151 சாட்சியங்களை விசாரித்தனர்.
விடுதலை
பல முறை இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. 12 ஆண்டுகளாக ஜாமீன் கூட கொடுக்காமல் தங்களை சிறையிலேயே வைத்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு 8 பேரும் புழல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று காலை 11.12 மணிக்கு வேனில் கொண்டு வரப்பட்ட குணங்குடி ஹனிபா உள்பட 8 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி பிரேம்குமார் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பை கேட்பதற்காக வெளியே கூடி இருந்த அவர்களது உறவினர்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித் தழுவினார்கள். அவர்கள் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறுகையில், "குற்றம் செய்யாத அவர்கள் வழக்கு என்ற பெயரால் 12 ஆண்டுகள் சிறையில் அடைத்து உள்ளனர். இது சட்ட்விரோதமான செயல்" என்றனர்.
-தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக