வியாழன், 27 மே, 2010

திண்டிவனம்: அமைதி திரும்புமா? ரவுடிகள் கொட்டம் அடங்குமா?

-இப்பி பக்கீர்

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று திண்டிவனம். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இப்பகுதியில் வன்னியர்களும், தலிததுகளும் அதிகளவில் வாழ்கின்றனர். திண்டிவனம் நகரத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் உள்ளனர். திண்டிவனம்&செஞ்சி நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஆரிப். இவர் மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளராக உள்ளார். இவரது கடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரமணா (எ) திகில் ரமணா, ஆட்டோ பாஸ்கர், புரட்சி(?) கண்ணன் ஆகியோர் அடிக்கடி மிரட்டி மாமூல் வாங்குவது வழக்கம்.

மாமூல் தராவிட்டால் கடையில் உள்ள பொருட்களை உடைப்பது, வாகனங்கள் கடையில் வந்து நிற்கும்போது கத்தி கலாட்டா செய்வது, வாகனங்களை நிறுத்தவிடாமல் திருப்பி அனுப்புவது என அராஜகம் செய்வது என இவர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்துள்ளன. ஒருதடவை மாமூல் தராததால் கடை உரிமையாளர் ஆரிபை தாங்கள் சாப்பிடும்வரை முட்டி போட வைத்துள்ளனர் இந்த ரவுடிகள்.

இந்நிலையில் ஆரிப் பாஷா, ம.ம.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த 1ம் தேதி இரவு மாமூல் கேட்ட ரவுடிகளிடம், தான் தற்போது ம.ம.க.வில் இருப்பதாகவும், எங்கள் நகர நிர்வாகிகளிடம் சென்று கேளுங்கள் & அவர்கள் சொன்னால் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட ரவுடிகள், 'நாங்கள் சரக்கடிக்க போறோம். இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவோம். நீ பணம் தராவிட்டால் உன்னை மட்டையாக்கி விடுவோம்'' என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

பயந்துபோன ஆரிப் பாஷா, தமுமுக & மமக மாவட்ட நிர்வாகிகளிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளரிடம் இதுகுறித்து பேசியுள்ளனர் தமுமுக நிர்வாகிகள். அவரும் தான் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

மமக நகர நிர்வாகிகளும் ஆரிப் பாஷாவின் ஓட்டலுக்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த ரமணி மற்றும் பாஸ்கர், கண்ணன் ஆகியோர், 'என்னடா உங்க சாதிக்காரங்கள வச்சு மிரட்றியா'' என்றவாறே ஆரிபை தாக்க முயற்சிக்க, அங்கிருந்த மமகவினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதை அலட்சியம் செய்த மூவர் கும்பரில் ஒருவன் ஆரிப் பாஷாவை கத்தியால் வெட்டியுள்ளான். கத்தியை கையால் தடுத்ததால் உயிர் பிழைத்த ஆரிபுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மமக நிர்வாகிகள் தாக்க வந்தவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெறும் கையுடன் வந்திருந்த நிர்வாகிகளால் கொடிய ஆயுதங்களை வைத்திருந்த கும்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் உற்சாகமடைந்த ரவுடிகள் சாப்பிட வந்த பொதுமக்களை அடித்து விரட்டியுள்ளனர். பெண்களைப் பார்த்து தகாத வார்த்தைகளில் பேசி கலாட்டா செய்துள்ளனர்.

இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் ரவுடிகள் மூவரையும் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பிக்க, ரவுடிகள் ஓட்டலுக்குப் பின்னால் ஓடியுள்ளனர். பொதுமக்களும் விடாமல் சென்று தாக்கியுள்ளனர். இதில் திகில் ரமணா மட்டும் மூர்ச்சையாகி கீழே விழுந்துள்ளான். இந்நிலையில் மமகவினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர். காவல்துறையினர் வந்து பார்க்கும்போது மூர்ச்சையாகிக் கிடந்த ரமணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமணா இறந்துள்ளார்.

இந்நிலையில் மோதல் தொடர்பாக மமக வர்த்தகரணி செயலாளர் ஆரிப் அவரது இரு சகோதரர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேரை இச்சம்பவம் தொடர்பாகத் தேடி வருகின்றனர். இதில் ஆரிபின் இளைய சகோதரர் தற்போதுதான் வெளிநாட்டிரிருந்து வந்துள்ளார். சம்பவத்திற்குத் தொடர்பே இல்லாத அவரையும் இவ்வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். மேலும் நகர மமக நிர்வாகி சாதிக் உட்பட சிலரைத் தேடுவதாகக் கூறி அவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களை மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டிவனம் காவல்துறையினர்.

இதுகுறித்து தமுமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் முஸ்தாக்தீன் கூறுகையில், 'விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரைப் பொறுத்தவரை எங்களுடன் நட்பு ரீதியாக தொடர்பில் உள்ளவர்கள். ஒருசிலர் செய்யும் இதுபோன்ற செயல்களால் தேவையில்லாத பதட்டம் உருவாகியுள்ளது. காவல்துறையினர் தேவையில்லாமல் சம்பவத்திற்குத் தொடர்பில்லாத தமுமுக, மமக நிர்வாகிகளை மிரட்டுவதையும், வீடுகளுக்குச் சென்று தரக்குறையாக நடந்துகொள்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராடுவோம்'' என்றார்.

முஸ்லிம்&தலித் சமூகத்தினரிடையே தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் வேலையை விட்டுவிட்டு திண்டிவனத்தில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: