புதன், 12 மே, 2010

குஷ்பு-முஸ்லிம்-சர்ச்சை ஞாநிக்கு மறுப்பு


-பேரா. ஹாஜாகனி
மன்னிப்போம்... மறக்க மாட்டோம்... என்ற தலைப்பில் குமுதம் 12.05.2010 தேதியிட்ட இதழில் ஞாநி எழுதியிருக்கும் ஓ பக்கங்களில் த.மு.மு.க குறித்து அவர் கூறியுள்ள கருத்துகளுக்கு மறுப்பாக இவ்விளக்கத்தைத் தருகிறோம்.

மௌனங்களை உடைத்து, மனசாட்சிகளைத் தட்டி எழுப்பும் நியாயமுள்ள எழுத்தாளர் ஞாநி, நடிகை குஷ்புவின் பாதுகாப்பான பாலுறவுக் கோட்பாட்டுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் காட்டிய பச்சைக் கொடியை உச்சிமீது வைத்து மெச்சிப் புகழ்ந்துள்ளார்.

“பாதுகாப்பான முறையில் திருமணமல்லாத வழியிலும் அல்லது திருமணத்திற்கு முன்பும், பின்பும், துணையுடனோ, பிறருடனோ பாலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று 2005&ல் நடிகை குஷ்பு கருத்து வெளியிட்டார் அதை எதிர்த்து. பா.ம.க., வி.சி.க மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் அராஜகம் செய்தார்கள். ஊர் ஊராய் வழக்கு போட்டார்கள். தங்கள் தொலைக்காட்சியில் குஷ்புவைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் இதில் மௌனம் சாதித்தன. த.மு.மு.க குஷ்புவை முஸ்லிமாகவே நாங்கள் கருதவில்லை என்றது. குஷ்புவைப் போலவே கருத்துத் தெரிவிக்கும் படைப்பாளி கவிஞர் சல்மா முஸ்லிமா? இல்லையா? என்று த.மு.மு.க அறிவிக்கவில்லை” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு த.மு.மு.க உள்ளிட்ட இயக்கங்கள் உரத்த மௌனத்தில் இருப்பதாகவும் ஞாநி தன் கட்டுரையை முடித்துள்ளார்.

நடிகை குஷ்பு வெளியிட்டது கருத்து (?) என்பதிலேயே எமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. திருமணத்திற்கு முன்னால் பாதுகாப்பான முறையில் பாலுறவு வைத்திருப்பது தவறில்லை என்பதற்கும் மாட்டிக் கொள்ளாமல் திருடினால், தப்பில்லை என்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

நடிகைகளை வைத்து ஓட்டு வாங்கலாம்? வருமானவரியைத் தவறாமல் கட்ட பரப்புரை செய்யலாம்? ஏன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரமே செய்யலாம்? என்கிற அளவுக்கு தமிழக மக்களின் நிலைமை உள்ளது. நடிக வழிபாடு மிகுந்த தமிழகத்தில் நடிகை குஷ்புவுக்கு கோவிலே கட்டப்பட்டப் பெருமையும் (?) உண்டு.

ஆகவே பிரபலமான ஒரு நடிகை ஊடகத்தில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்று கூறுவது சமுதாயத்தில் கொந்தளிப்பை உண்டாக்கவே செய்யும்.

பாதுகாப்பான உடலுறவுக்கு நடிகை குஷ்பு விடுத்த அழைப்பு கருத்துரிமை என்று கொண்டால் பா.ம.க., வி.சி.க உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்வினையை போராட்டம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வரம்பு மீறல், அராஜகம் என்பதையெல்லாம் இரு கட்சிக்கும் பொதுவில் வைக்க வேண்டும். ஆயினும், உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகு மேற்கண்ட அமைப்புகள் காப்பதாக ஞாநி சொல்லும் உரத்த மௌனத்தை முன்பே காத்திருந்தால் அந்த கருத்துக்கு இவ்வளவு பெரிய விளம்பரம் கிடைத்திருக்காது. இதுபோன்ற கேடுகெட்டக் கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதே நன்று என்பது எம் கருத்து.

த.மு.மு.க குஷ்புவை முஸ்லிமாகவே கருதவில்லை என்று கூறியதாக எழுதும் ஞாநி, அவ்வாறு கூற நேர்ந்த சந்தர்ப்பத்தை அறியாமலோ? அறிந்தோ? குறிப்பிட மறந்து விட்டார். தமிழர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதாகக் குற்றம் சாட்டும் ஞாநி தமிழகச் சமூகத்தில் தான் இருப்பதைக் காட்டுவதற்கு அப்படி செய்தாரோ? தெரிய வில்லை.

குஷ்பு, கற்பு & குறித்து பேட்டியளித்த காலத்திலேயே, அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என பல நண்பர்கள் கூறினர். நடிகை குஷ்புவின் கருத்தை நாம் பொருட்டாக மதியாததால் அதற்கு எவ்விதமான பதிலும், எதிர் வினையும் தரவில்லை.

இந்நிலையில் குஷ்புவுக்கு ஆதரவாக முஸ்லிம் பெண்கள் களமிறங்கி விட்டதாகவும், திருவல்லிக்கேணியில் பெருந்திரளான முஸ்லிம் பெண்கள் குஷ்புவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதாகவும் ஒரு நாளேடு (தினமலர்) செய்தி வெளியிட்டது.

‘தலித்காவலர்கள் குஷ்பு வீட்டிற்குப் போனார்கள் பேட்டியை வெளியிட்ட பத்திரிகை வாசலுக்குப் போகவில்லை’ என்று ஞாநி தன் ஓ பக்கங்களில் எழுதுகிறார். த.மு.மு.க&வினர் குஷ்பு வீட்டிற்கு செல்லாமல் இச்செய்தியை வெளியிட்ட (தினமலர்) பத்திரிகை அலுவலகத்தை தான் முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் திருவல்லிக்கேணி பகுதியின் பெருந்திரளான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.

குஷ்புவின் கருத்து ஒரு நடிகையின் கருத்தே அது முஸ்லிம் சமுதாயப்பெண்களின் பிரதிநிதியுடைய கருத்தல்ல. ஏனெனில் குஷ்புவை முஸ்லிமாக நாங்கள் கருதவில்லை என்றோம்-.

குஷ்புவை முஸ்லிமாக்கியே தீர வேண்டும் என்று ஞாநி ஏன் ஆதங்கப்படுகிறார். ஞாநி எப்படி வைதீக பிராமண அடையாளங்களைத் துறந்து சாதி அமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்கிறாரோ, அதே போலத்தானே குஷ்புவின் நிலையும்.


தி.மு.க பொதுக்குழுவில் கலந்துக்கொண்டவர்களை, அ.தி.மு.க.வினராகவே கருத வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயமில்லையோ அது போலத்தான் இதுவும்.குஷ்புவின் கருத்தை முஸ்லிம் பெண்களின் மனநிலை போலவும், குஷ்புவுக்கு ஆதரவாக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியிருப்பது போலவும் விஷமமாக வெளியிடப் பட்ட செய்திக்குத் தான் த.மு.மு.க எதிர்வினை ஆற்றியது.

குஷ்புவைப் போல கருத்து வெளியிட்ட கவிஞர் சல்மா? முஸ்லிமா? இல்லையா? என்று த.மு.மு.க அறிவிக்கவில்லை என்கிறார் ஞாநி.

யார்? யார்? முஸ்லிம் இல்லை என்று அறிவிப்பது த.மு.மு.கவின் வேலை இல்லை. நாங்கள் சிவசேனா, பஜரங்தள் போல பண்பாட்டு போலிஸ் அல்லது சிந்தனைப் போலிஸ் வேலைகளைச் செய்பவர்களல்ல.

குஷ்புவின் கருத்தைப் போன்ற கருத்தை நான் எங்குமே வெளியிட்டதில்லை. ஞாநி எழுதியிருப்பது முற்றிலும் பொய்யானது, என்று கவிஞர் சல்மா நம்மிடம் தெரிவித்தார். இதையும் தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.

‘வைதீகப் பார்ப்பனர்களை விட, முற்போக்குப் பார்ப்பனர்கள் டேஞ்சரானவர்கள்’ என்று ஞாநி குறித்து கட்டுரை எழுதிய தோழர் பேரா. அ.மார்க்ஸ்சின் ஆதரவுக் கருத்தையும் காழ்ப்புணர்வின்றிக் குறிப்பிட்ட ஞாநி எமது நிலைப்பாட்டையும் புரிந்துகொள்வார் என நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை: