வகுப்புவாதத்ததை தூண்டும் விளம்பர பலகைகள்: குஜராத் அரசுக்கு மாநில ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம்
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் வைக்கப்பட்டுள்ள வகுப்புவாதத்தைத் தூண்டும் விளம்பர பலகைகள் குறித்து மாநில அரசிடம் ஆளுநர் கமலா பெனிவால் அறிக்கை கோரியுள்ளார்.
சமீபத்தில் ஆமதாபாத் நகரத்தில் வகுப்பு கலவரம் நடைபெற்றது. இதில் ஒருவர் உயிர் இழந்தார். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து குஜராத் ஆளுநர் குஜராத் மாநில உள்துறை அமைச்சகத்திற்கும் காவல்துறை தலைமை இயக்குனருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் உடனடியாக குஜராத் முழுவதும் இடம் பெற்றுள்ள விளம்பர பலகைகள் குறித்து அறிக்கை தருமாறு கோரியுள்ளார்.
குஜராத் மக்களையும் காவல்துறையையும் இழிவுப்படுத்துவதற்காக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.)ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி பா.ஜ.க. நாடு முழுவதும் போராட்டம் அறிவித்த வேளையில் வகுப்பு உணர்வை தூண்டி விடும் விளம்பர பலகை முதலில் வதோதரா நகரத்திலும் பின்னர் மற்ற குஜராத்தின் பிற நகரங்களிலும் வைக்கப்பட்டன. என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்ட அப்பாவி சோராப்தீன் சேக்கை தீவிரவாதி என்றும் அவரை காங்கிரஸ் ஆதரித்து வருவதுடன் காவல்துறை அதிகாரிகளை கைதுச் செய்து சிறையில் அடைப்பதாக இந்த விளம்பர பலகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தருணத்தில் பா.ஜ.க. வகுப்புவாத உணர்வுகளை தூண்டி விடுவதாக குற்றஞ்சாட்டி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு அளித்ததைத் தொடர்ந்து 83 வயதான குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக