ஞாயிறு, 16 மே, 2010

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவித்த இந்திய மருத்துவ கவுன்சில் கலைப்பு

பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தக் கவுன்சிலுக்கு பதிலாக பிரபல மருத்துவர்களைக் கொண்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட உள்ளது.

அடுத்த ஓராண்டுக்கு அந்தக் குழு பொறுப்பில் இருக்கும் என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் சுஜாதா ராவ் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வியை முறைப்படுத்த மருத்துவக் கவுன்சிலுக்குப் பதிலாக புதிய அமைப்பை உருவாக்க அடுத்த ஒரு மாதத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் புதிதாக மாணவர்களைச் சேர்க்க சட்டவிரோதமாக அனுமதியளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கடந்த மாதம் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது இதற்கு முன்பே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதையடுத்து கேதன் தேசாய் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைப்பது என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது.தற்போது மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் 1933-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல், நாடு முழுவதும் ஒரே சீரான மருத்துவக் கல்வியை உறுதி செய்வது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை அங்கீகரிப்பது ஆகியவை இந்திய மருத்துவ கவுன்சிலின் பணிகளாகும்.
source:BBC

கருத்துகள் இல்லை: