மத்திய பிரதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய பிரதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஆகஸ்ட், 2010

குஜராத் மாடலில் மத்திய பிரதேசத்திலும் போலிஎன்கவுண்டரில் 4 இளைஞர்கள் சுட்டுக் கொலை

போபால்,ஆக26:பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறல் போன்றக் காரணங்களால் மத்திய பிரதேச மாநிலத்தில் 4 அப்பாவி இளைஞர்களை கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி குஜராத் மாடலில் போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியுள்ளனர்.

பீத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அக்கிரம சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்து இளைஞர்களை தவறானக் காரணங்களைக் கூறி அழைத்துச் சென்ற பிறகு கொள்ளைக்காரர்கள் என்ற பீதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் போலீஸ் வேடமணியச் செய்து கொலைச் செய்துள்ளது போலீஸ் குழு ஒன்று.

போலி என்கவுண்டரைக் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்க போலீசால் இயலவில்லை. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அம்ஜத்கான் என்ற ஃபவ்ஜியின் உறவினர்கள் போலீஸ் கூறும் காரணங்களுக்கெதிராக கூறுகின்றனர்.

ராஜு பன்ஸரா, உதல் படாய், ரவீந்திர உதைனியா ஆகியோர் கொல்லப்பட்ட இதர இளைஞர்கள். இளைஞர்களை கடத்திச் சென்று ராணுவ உடையை அணியவைத்ததை நிரூபிப்பதாக உள்ளது போலீசார் வெளியிட்ட புகைப்படம்.

அணியவைக்கப்பட்ட உடை எவருக்கும் பொருந்தாதது மட்டுமல்ல, ஒருவருடைய கால்ச்சட்டை அவருடைய இடுப்பின் கீழ் பெல்டினால் முறுக்கி கட்டப்பட்ட நிலையில் உள்ளது.

அம்ஜத்கான் காலுறை அணியாமல் ஷூ அணிய மாட்டார் என அவருடைய மனைவி கூறுகிறார். ஆனால் கொல்லப்பட்ட மூவருமே காலுறை அணியாமல்தான் ஷூ அணிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தோரி காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்டதுதான் போலி என்கவுண்டர் கொலைநடந்த பக்னாஸ கிராமத்தின் ஆஸான் நதிக்கரை. இங்குள்ள டவுண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எஸ்.ஸிகார்வர்(T.I) கடந்த ஓர் ஆண்டிற்கிடையில் கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி என்கவுண்டரில் கொன்றது 16 நபர்களை.

சாதாரண கான்ஸ்டபிளான இவர் T.I பதவிக்கு உயர்வுப் பெற்றதற்கு காரணம் இந்த என்கவுண்டர் கொலைகள்தான் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான பீந்த் எஸ்.பி.சஞ்சல் சேகர் மற்றும் போலீஸ் குழுக்கெதிராக கொலைக் குற்றத்திற்கு வழக்குப் பதிவுச்செய்ய போலீஸ் காரரும், அம்ஜத்கானின் சகோதரனுமான ஃபெரோஸ்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவிந்த் சிங் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 19 மே, 2010

போபால் விஷவாயு கசிவு வழக்கு: 25 ஆண்டுகளுக்கு பின் அடுத்த மாதம் தீர்ப்பு

போபாலில் நடந்த விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பான வழக்கில், 25 ஆண்டுகளுக்கு பின், அடுத்த மாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984ல் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனர்.

இது தொடர்பாக யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன், யூனியன் கார்பைடு (இந்தியா) லிட்., யூனியன் கார்பைடு (கிழக்கு) ஹாங்காங் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும், யு.சி.சி., தலைவர் வாரன் ஆண்டர்சன் மற்றும் எட்டு இந்திய அதிகாரிகளுக்கு எதிராகவும், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு போபால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது.வழக்கு விசாரணையின் போது, யூனியன் கார்பைடு (இந்தியா) நிறுவனத்தை சேர்ந்த இந்திய அதிகாரிகள் மட்டுமே ஆஜராகினர்.

வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட மற்றவர்கள் தலைமறைவாகி (அமெரிக்காவில்) விட்டனர். விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டும், அமெரிக்காவை சேர்ந்த ஆண்டர்சனை நாடு கடத்தி, விசாரணைக்காக இந்தியா கொண்டுவர முடியவில்லை.

வழக்கு நீண்ட காலமாக தொடர்ந்து நடந்ததால், ஏராளமான மாஜிஸ்திரேட்கள் மாறி விட்டனர். 178 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 3,008 ஆவணங்கள் மற்றும் ஆடியோ, வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது இந்த வழக்கை மாஜிஸ்திரேட் மோகன் பி திவாரி விசாரித்து வருகிறார். சி.பி.ஐ. மற்றும் அரசு தரப்பு வக்கீல்களின் வாதம் சமீபத்தில் முடிவடைந்தது.

விசாரணை முடிவடைந்ததை அடுத்து, அடுத்த மாதம் 7ம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் கூறுகையில்,"இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நாங்கள் பலமுறை புறக்கணிக்கப்பட்டு விட்டோம். எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. குற்றத்துக்கு காரணமானவர்கள் யாரும் இந்த வழக்கில் தண்டிக்கப்படும் வாய்ப்பு இல்லை" என்றனர்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம்கள் நீக்கம்

ஹாக்கி விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் பெற்று பின் அரசியல்வாதியான அஸ்லம் ஷேர்கான் சமீபத்தில் பத்திரிக்கை பேட்டியின் போது தான் எம்பி யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.கட்சி வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம் பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கும் முயற்சியில் பா.ஜ. அரசு ஈடுபட்டு வருவதாக பகிரங்க குற்றம் சாட்டிய அவர், தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக போபால் நகரத்தில் 20வது வார்டு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1260 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த முஸ்லிம் வாக்காளர்கள் நிச்சயமாக பா.ஜ.கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என பி.ஜே.பி நம்புவதால் இத்தகய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தூர், உஜ்ஜைன் பகுதிகளிலும் இதே முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நியாயமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பிரதேசத்தை குஜராத்தாக மற்றும் எந்த வேலையிலும் பி.ஜே.பி. ஈடுபடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் தான் மத்திய பிரதேசத்தில் கடந்த முறை பி.ஜே.பி. வெற்றி பெற்றது என்றும் இம்முறையும் அவ்வாறு நடந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.