புதன், 6 மே, 2009

திராவிடக் கட்சிகளைப் புறக்கணிக்கும் சிறுபான்மை மக்கள்

இப்பி பக்கீர்


பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் பல்வேறு சமுதாய அமைப்புகளின் ஆதரவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றன. காலம் காலமாக திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வோட்டு வங்கிகளான முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாய ஓட்டுக்கள் இந்த தடவை திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.விற்கு கிடைப்பது சந்தேகமே. ஓட்டுக்களை மட்டுமே போட வேண்டும், அரசியல் அதிகாரம் பெற முயற்சிக்கக் கூடாது என்கின்ற திராவிடக் கட்சிகளின் நயவஞ் சகத்தனத்தை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால்தான் தமிழக முஸ்லிம்களின் பேராதரவு பெற்ற தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள்.


காலம் காலமாக திராவிடக் கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவுக்குத்தான் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பேராதரவு இருந்து வந்தது. மதமாற்ற தடைச் சட்டம், பாசிச சங்பரிவாரத்துடன் உறவு என அதிமுக தலைவி ஜெயலலிதா வின் தவறான போக்கினால் சிறுபான்மை மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக அதிமுகவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இதனால் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை தனிப்பெரும் உரிமையோடு பெற்று அதிகாரத்தை அனுபவித்து வந்தது திமுக.


அதிகாரத்தை அனுபவிப்பது மட்டுமே தனது கொள்கையாக, பதவியைப் பெறு வது மட்டுமே தனது பிறவிப் பயனாக திமுக கருதி வந்தது. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் எல்லாம் பெரும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னால் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.


தமிழகத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தது திமுக, அதற்கு பிரதி பலனாக கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் கடுமையாக உழைத்து திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் வெற்றியை பெற்றுத் தந்தது தமுமுக. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தனி இடஒதுக்கீடு கோரிக் கையை கிடப்பில் போட்டது திமுக.


பல்வேறு போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகளுக்குப் பின்னால் காஞ்சி மாவட்டம் தாம்பரத்தில் நடந்த இடஒதுக்கீடு மாநாட்டில், கொட்டும் மழையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், இடஒதுக்கீடு தராவிட்டால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என இறுதி எச்சரிக்கையை விடுத்ததால் மட்டுமே கருணாநிதி இடஒதுக்கீட்டை வழங்க சம்மதித்தார்.


இது வரலாற்று உண்மை. ஆனால் எவ்வித பெரிய அளவு போராட்டங் களும் இல்லாமல் அருந்ததி இன மக்கள் உள்ஒதுக்கீடு பெற்றதையும் நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.


இதுதான் கருணாநிதியின் துரோக வரலாறு. சிறுபான்மை மக்களை ஓட்டு போடும் இயந்திரங்களாகத்தான் கருதி வந்தார் கருணாநிதி. அதனால்தான் அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டி தமுமுகவின் அரசியல் பிரிவாக சிறுபான்மை மக்களின் ஆதரவோடு மனிதநேய மக்கள் கட்சி உருவானது. அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மனிதநேய மக்கள் கட்சி ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளைக் கேட்பதும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதும் தாங்கள் ஆண்டாண்டு காலமாக அனுப வித்து வந்த பதவி சுகத்துக்கு ஆபத்து என்பதால்தான் ம.ம.க.வுக்கு சீட்டு இல்லை என்று ஒதுக்கித் தள்ளினார்.


ஆனால், மனிதநேய மக்கள் கட்சியை ஒதுக்கியது சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த ஓட்டுக்களை ஒதுக்கித் தள்ளியதற்கு ஒப்பானது என்று இப்போது உணர்ந்து வருகிறார். ஆனால் காலம் கடந்துவிட்டது. முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயங்களின் லட்டர்பேடு அமைப்புகளையும், தேர்தல் நேரத்து காளான் தலைவர்களையும் பக்கத்தில் இருத்தி படம் காண்பித்தாலும் சிறுபான்மை மக்கள் அதை நம்பத் தயாரில்லை.


மனிதநேய மக்கள் கட்சி பாராளு மன்றத் தேர்த­ல் மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. ம.ம.க.வின் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் தென்காசியில் போட்டியிடுகிறது. ம.ம.க.வின் அனைத்து வேட்பாளர்களுக் கும் முஸ்லிம்களின் சமூக அமைப்புகள், ஜமாத்துகள், முக்கியப் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுபோல கிறித்தவ மக்களின் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம் மற்றும் சமூக அமைப்புகள், பாதிரிமார்கள், சர்ச்சுகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு தங்கள் பேராதரவைத் தந்துள்ளன. மேலும் தலித் அமைப்புகளும் ம.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ம.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் திமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ம.ம.க. போட்டியிடாத மற்ற இடங்களிலும் திமுக, அதிமுகவுக்கு எதிரான அலையே உருவாகி வருகிறது என கள நிலவரம் கூறுகிறது.


ஆண்டாண்டு காலம் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வந்த திமுகவுக்கும், எப்போதுமே சிறுபான்மை மக்களைக் கண்டுகொள்ளாத அதிமுகவுக்கும் சிறுபான்மை மக்கள் இந்தத் தேர்தலில் பாடம் புகட்ட தயாராகி விட்டார்கள் என்பதை வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

கருத்துகள் இல்லை: