பதினைந்தாவது நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, கடந்த முறையைவிட சற்றே கூடுதல் பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. காங்கிரசை பொறுத்தவரையில் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் சிறு துரும்பையும் அசைக்கவில்லை என்பது சிறு குழந்தையும் அறியும். காங்கிரஸின் இந்த துரோகத்தை முன்வைத்துதான் தமிழகத்தில் காங்கிரசை ஆதரிக்கமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பின்பு 'மாவட்ட முடிவு' என்று மாறி காங்கிரசை ஆதரித்தார்கள். இது ஒருபுறமிருக்க, ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தருமா? தராதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தாலும், குறைந்த பட்சம் தனது மந்திரி சபையில் கூட முஸ்லிம்களுக்கு சரியான பிரதிநித்துவம் வழங்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மொத்தம் 79 மந்திரிகள் இதுவரை பதவி ஏற்றுள்ளனர். இதில் முஸ்லிம் மந்திரிகள் எண்ணிக்கை வெறும் ஐந்துதான். இந்த ஐந்தும் கூட அதிகாரமுள்ள கேபினட் அமைச்சர்களா? என்றால் இருவர் தான் கேபினட் அமைச்சர்கள். ஒருவர் இணையமைச்சர்[தனிப்பொறுப்பு] மற்ற இருவர் வெறும் இணையமைச்சர்கள். மொத்தம் 29 முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளநிலையில், அளிக்கப்பட்ட மந்திரிகளின் சதவிகிதம் வெறும் 5 .8 சதவிகிதம்தான்.
சரி! முஸ்லிம்களின் ஆபத்துபான்டவர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் கருணாநிதியும், அவருக்கு வெண்சாமரம் வீசும் முஸ்லிம் அமைப்புகளும் இருக்கும் நிலையில், திமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாத நிலையில், இப்போது மத்திய அரசில் திமுக மூன்று கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட எழு அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. திமுகவில் தான் முஸ்லிம் எம்பிக்கள் இல்லையே பின்பு எப்படி பதவி வழங்கமுடியும் என்று சில 'வெண்சாமரங்கள்' கேட்கலாம். ஆனால் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அப்துர்ரஹ்மான் முஸ்லிம் லீக் அமைப்பை சேர்ந்தவர் என்றாலும், அவர் திமுகவின் உறுப்பினராகி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். நாடாளுமன்றத்தில் அவர் திமுக உறுப்பினராகவே கருதப்படுவார். கருணாநிதிக்கு உண்மையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பரிவு இருக்குமானால் அப்துர்ரஹ்மானை அமைச்சராக்கி இருக்கலாம். ஆனால் அவர்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு இதயத்தில் இடம் தந்துவிட்டாரே!
தமிழக காங்கிரஸில் வாசனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது வரவேற்க தக்கதுதான்.ஆனால் நீண்டகாலமாக காங்கிரசில் இருக்கும் ஜே.எம். ஹாரூன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். காரணம் என்ன? மற்ற சமுதாயத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டால் அடுத்த தேர்தலில் அந்த சமுதாய மக்கள் ஒன்றுபட்டு தங்களின் எதிர்ப்பை வாக்குகள் மூலம் காட்டுவார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டால் அப்படி ஒரு நிலை வராது என்பது அனைத்து அரசியல் கட்சிகளும் அறிந்த உண்மை. ஏனெனில் இந்த அரசியல்வாதிகள் என்னதான் முஸ்லிம்களை புறக்கணித்தாலும், அவர்களுக்கு வெண்சாமரம் வீச அமைப்புகள் என்ற போர்வையில் சிலர் இருக்கிறார்கள். ஒருவர் கைவலித்து விசிரியை கீழே வைத்தால், அடுத்த தலைவர் வீச தயாராக இருக்கிறார்கள்.
வாழ்க சமுதாய தலைவர்கள்! வளர்க! இயக்கங்கள்!! வாழ்க தலையாட்டும் என் சொந்தங்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக