செவ்வாய், 5 மே, 2009

வக்பு வாரிய தலைவராக இருந்தபோது ஊழல் செய்தேனா? - ஹைதர் அலி பேட்டி

சி.பி.ஐ. வேண்டுமானால் விசாரிக்கட்டும்
வக்பு வாரிய தலைவராக இருந்தபோது ஊழல் செய்தேனா?
ஹைதர் அலி பேட்டி


சென்னை, மே.5-

வக்பு வாரிய தலைவராக இருந்தபோது ஊழலில் ஈடுபடவில்லை என்றும், தேவை என்றால் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் ஹைதர் அலி கூறினார்.

தேர்தல் அறிக்கை

முன்னாள் வக்பு வாரிய தலைவரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான செ.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னையில் நேற்று அவர் வெளியிட்டார்.

பின்னர், ஹைதர்அலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை மக்களுக்கு குடியிருப்பு

நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், ஒரு வருடத்திற்குள் மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பேன் என்று உத்தரவாதம் தருகிறேன். அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு குடியிருப்பு கட்டித்தருவேன்.

மத்திய சென்னை தொகுதியில்தான் சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வணிக வளாகம் அமைத்து தருவேன். கூவம் நீரை சுத்தப்படுத்தி, அந்த தண்ணீரை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

நாங்கள் வெற்றி பெற்றால், மத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத அரசு ஆட்சி அமைக்க உதவுவோம். இடதுசாரிகள் கட்சியுடன் சேர்ந்து இதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.

நான் வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, ஊழல் செய்ததாக சிலர் கூறுகிறார்கள். சி.பி.ஐ. வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்தே நான் விலகிக்கொள்கிறேன்.

இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.

நன்றி : தினத்தந்தி

கருத்துகள் இல்லை: