ஞாயிறு, 17 மே, 2009

ஃபினிக்ஸ் பறவையை போல் உயிர்த்தெழுவோம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஃபினிக்ஸ் பறவையை போல் உயிர்த்தெழுவோம்



நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்-குர்ஆன்)

நமது தாய்க்கழகமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நம் முஸ்லிம் சமுதாயத்திற்காக பற்பல இன்னைகளையும், கரடுமுரடான பாதைகள் பலவற்றையும் கடந்து வந்து, கடந்த 14 ஆண்டுகளாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி நடை போடுவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கல்வி விழிப்புணர்வு, பொதுநலசேவைகள், குருதிக்கொடைகள், உரிமைமீட்புப் போராட்டக்களங்கள் என்று நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நமது கழகம் ஆற்றிய அளப்பறிய தியாகங்களை தற்போது நினைவு கூறுமளவிற்கு எவரும் எளிதில் மறந்து விடக்கூடிய விஷயமன்று. தனது வெற்றிப்பயணங்களின் மற்றொரு மைல்கல்லான முஸ்லிம்களின் தன்னிகரற்ற சக்தியை அரசியல் களத்தில் நிலைநாட்டுவதற்காக, நமது சமுதாயத்தின் நீண்ட நாளைய உள்ளக்குமுறலை அரசியல் களத்திலும் மனிதநேய மக்கள் கட்சியாக பிரதிபளித்தது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பொருளாதார சிக்கலுக்கிடையில், தமிழக அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், முஸ்லிம்களின் கடந்த காலங்களைப் போல் திராவிடக்கட்சிகளிடம் ஒருசீட்டுக்காக மண்டியிட்டு மடிபிச்சைக் கேட்கும் அளவிற்கு இழிநிலையில் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அல்லாஹ்வின் துணையோடு, நம் சமுதாய அடலேறுகளின் அயராது உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு தனி அரசியில் களம் கண்டோம் - அல்ஹம்துலில்லாஹ்.

காரணம் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு இன்னல் என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நிகலும் என்ற புளித்துப்போன வீரவசனங்களை இச்சமுதாயம் இனியும் கேட்கத் தயாரில்லை என்பதை உணர்த்துவதற்காகவும்,

சட்டம் இயற்றும் அவைகளில் இடமில்லை என்றாலும் என் சவலைப்பிள்ளைகளுக்கு என் நெஞ்சத்தில் என்றும் இடமுண்டு என்ற பழைய பஞ்சாங்க பசப்பு வார்த்தைகளால் இனி முஸ்லிம்களை கோமாளிகளாக ஆக்கிட முடியாது என்பது நிரூபிப்பதற்காகவும்,

நமது சமுதாயத்தின் தன்மானம் காப்பதற்காக, திமுக, அதிமுக என்ற பணம் மற்றும் படை பலங்கள் பல கொண்ட கூட்டணிகளை எதிர்த்து 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் கால் பதித்தோம்.


ஜனநாயத்தை பணநாயகம் ஆட்சி புரியும் நம் தாய்த்திருநாட்டில், 2 மாதங்களில் ஒரு அரசியில் கட்சியை துவங்கி 3வது மாதத்தில் நாடளுமன்றம் செல்வது என்பது எட்டாக்கனி என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், அராஜகமும் அடக்குமுறைகளும் அரங்கேறிய 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட நான்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே என்ற எண்ணம் நம் சகோதரர்கள் பலருக்கு சோர்வை அளித்திருக்கலாம். அத்தகைய நல்ல உள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.

அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:112)

நிச்சயமாக எவர்கள் ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 46:13)

அன்புச் சகோதரா! ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும''; என்ற தாரக மந்திரத்தை இலட்சியமாக உணர்த்தும் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமது இலட்சியம், நமது கொள்கை, நமது இறுதி இலக்கு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்ற உயரிய சுவர்க்கத்தை அடைவதுதானே தவிர வேறில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் கால் பதிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்யவும், பின்தங்கியுள்ள நம் முஸ்லிம் சமுதாயத்ததை முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியே அல்லாமல் வேறில்லை.

அன்புச் சகோதரா! என்று நாம் மனிதநேய மக்கள் கட்சி என்ற தனி அரசியல் களம் கண்டோமோ அன்றே தமிழக முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளுக்கு அடிமைகளல்ல என்று நிரூபித்ததில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

பணபலத்திற்கும், படைபலத்திற்கு இந்த சமுதாயம் அடங்கிவிடாது, மாறாக ஃபினிக்ஸ் பறவையை போல மரணத்திலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆற்றல் நமக்குண்டு என்பதை தமிழக அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தலில் வெற்றி கண்டிருக்கிறோம்.

பதவி வெறிகொண்ட இத்திராவிடக் கட்சிகள் நம்பிரச்சாரத்தைக் கண்டு தோல்வி பயத்தால் நம்மை பேரம் பேசுமளவிற்கு, நம் சகோதரர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துமளவிற்கு நம்மை கண்டு அஞ்சியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

நாம் ஒரு கூட்டணியின் வெற்றிக்காக களம் இறங்கினால் 100 சதவிகித வெற்றிக்காக அவர்களக்காக உழைக்கவும் தெரியும், அதே நேரத்தில் அவர்கள் நம்மை கிள்ளுக் கீரையாக நினைத்தால் அவர்களையே எதிர்த்து களம் காணவும் முடியும் என்பதை உணர்த்தியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் விட மேலாக, நம் சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுக்காக மட்டுமே, தூய எண்ணத்தோடு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாடுபட்டதற்கு, அயறாது உழைத்ததற்கு நாளை மறுமையிலே வல்ல அல்லாஹ்விடம் நற்கூலி பெறவிருப்பதை எண்ணித்தான் மிகவும் அகமகிழ்கிறோம்.

அன்புச் சகோதரா! இவ்வுலகில் வெற்றி தோல்லி என்பதெல்லாம் இறைவிசுவாசங்கொண்ட முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு விஷயத்தில் தோல்வியடைந்தால் நாம் தவறான நிலையில் இருக்கிறோம் என்பது பொருளல்ல. இதுதான் இஸ்லாம் நமக்குணர்த்தும் உன்னதமான பாடம்.

அல்லாஹ்வின் முழுபாதுகாப்பிலும், வஹியின் தொடர்பிலும் இருந்த அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் தோல்வியடைந்தார்கள், அவர்கள் பற்கள் உடைக்கப்பட்டு அவர்களின் திருமுகம் கோரையாக்கப்பட்டது. இன்னும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக 13 ஆண்டுகள் மக்காவில் உழைத்த அண்ணலார் அவர்கள், இஸ்லாமிய அரசையோ, முஸ்லிம்களை பாதுக்ககாக்கும் கட்டமைப்பையோ உருவாக்க முடியவில்லை, இறுதியில் மக்காவை விட்டே அடித்து விரட்டப்பட்டார்கள்.

வெளிப்படையாக தோல்விபோன்று காட்சியளித்த அந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் தவறான சிந்தாந்தம், முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வியடைந்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா?(நவ்வூதுபில்லாஹ்). அவைகளெல்லாம் தோல்விகளல்ல. மாறாக பின்னர் வரவிருந்த பல வெற்றிகளை சுவைக்கும் அளவிற்கு முஸ்லிம்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றிய அல்லாஹ்வின் சோதனைகள் அல்லவா அவைகள். இவ்வாறே முஸ்லிம்களாக நாம் பலவகையிலும் சோதிக்கப்படுவோம் என்று வல்ல இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக!. பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 2: 155-157)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்-குர்ஆன் 3: 186)


மக்களே! தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பார்கள், நாம் மேற்குறிப்பிட்டது போன்று நாம் அடைந்திருக்கும் பல வெற்றிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு படிக்கற்களாக மாற்றுவோம் - இன்ஷா அல்லாஹ். நம் சக முஸ்லிம் சகோதரர்களின் நிந்தனைகளை அலட்சியம் செய்வோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் சமுதாயமாக இருக்கட்டும். இனி தமிழக அரசியல் அரங்கின் நம் அடுத்த இலக்கு சட்டம் இயற்றும் அவையான தமிழ சட்டமன்றத்தை வெற்றி கொல்வதே. அதற்காக இன்றே உனது பணிகள் தொடரட்டும், வாழ்த்துகிறது மனிதநேய மக்கள் கட்சி.


முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3 : 200)

கருத்துகள் இல்லை: