சனி, 23 மே, 2009

மருத்துவமனைக்கு செல்லும் மங்கையர்களே உஷார்!!

டாக்டர் பிரகாஷ் என்பவரை நினைவிருக்கிறதா..? சில ஆண்டுகளுக்கு முன்னால், தனது மருத்துவமனைக்கு வந்த பெண்களை மயக்கி அல்லது மிரட்டி ஆபாச படமெடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். அவருக்கு கோர்ட்டு 10 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த டாக்டர் பிரகாஷ் என்பவரின் இந்த கீழ்த்தரமான நடவடிக்கையிலிருந்து பெண்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் படிப்பினை பெறவேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. பொதுவாக நல்லபெண்கள் தங்களை மற்ற ஆண்கள் தொட அனுமதிப்பதில்லை.அதே நேரத்தில் மருத்துவம் என்று வந்துவிட்டால் ஆண் டாக்டரை சந்திக்கும் நிலைவந்தால் அந்த டாக்டர் தொடும்போது அதை அனுமதிக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. நல்ல மருத்துவர்கள் தங்களை நாடிவரும் பெண்களை நோயாளியாக மட்டுமே பார்ப்பார்கள். அதே நேரத்தில் டாக்டர் பிரகாஷ் போன்ற கீழ்த்தரமான மருத்துவர்கள் பெண்களை பெண்களாக மட்டுமே பார்ப்பார்கள். அந்த பெண்களின் இயலாமையை, பலவீனத்தை பயன்படுத்தி காரியம் சாதிக்க முற்படுவார்கள். அதற்கு மருத்துவமனையில் அதிக வாய்ப்பும் உண்டு. பெண்களை சோதிக்கிறேன் என்ற பெயரில் அவர்களின் உணர்வுகளை தூண்டுவது, அங்கே சோதிக்கணும் இங்கே சோதிக்கணும் என்று ஆடைகளை நெகிழ்த்துமாறு கூறுவது, வாய்ப்புகளை பயன்படுத்தி சில்மிஷம் செய்வது, அவர்களை எப்படியேனும் வலையில் வீழ்த்தி காரியம் சாதிப்பது இப்படியான செயல்களை செய்யும் பிரகாஷ்கள் மருத்துவத்துறையில் உண்டு. எனவே பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இயன்றவரை பெண் மருத்துவர்களை நாடி தங்களின் நோய்க்கு நிவாரணம் பெறுவது சிறந்ததும் பாதுகாப்புமாகும்.

மேலும்,ஆண் மருத்துவரை சந்திக்கும் நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டால் மருத்துவமனைக்கு செல்லும்போது தனியாக செல்லாமல் கணவரையோ, அல்லது உடன் பிறந்தவர்களை, அல்லது உறவினர்களில் எவரையேனும் உடன் அழைத்து செல்லவேண்டும். பரிசோதனையின் போது தங்களுடன் வரும் உறவினர்களை உடன் வைத்துக்கொள்ளவேண்டும். தனிமையில் பரிசோதிப்பதற்கு இயன்றவரை தடை விதிக்கவேண்டும். குறைந்த பட்சம் மருத்துவரோடு ஒரு செவிலியராவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

மருத்துவரிடம் நோய் பற்றி மட்டுமே பேசவேண்டும். 'ஒங்க கணவர் எங்க இருக்கார்-என்ன வேல பாக்குறார்' என்று நைசாக மருத்துவர்கள் விசாரிக்கும்போது, என் வீட்டுக்காரார் வெளிநாட்டுல இருக்கார்- மூணு வருசத்துக்கு ஒரு வாட்டிதான் வருவார் என்று கூறக்கூடாது. ஏனெனில், பிரகாஷ் போன்ற கெட்ட எண்ணம் உள்ளவர்கள் உங்களின் இந்த தனிமையை பயன்படுத்தி, தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் நிலையை ஏற்படுத்தி, அதன்மூலம் நெருக்கத்தை உண்டாக்கி காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். அதுமாதிரி மருத்துவர்களிடம், நாங்க வறுமையில் இருக்கிறோம். எங்க வீட்டுக்காரர் அன்னாடம் கூலி வேலை பாக்குறவரு என்று உங்கள் வறுமையையும் சொல்லக்கூடாது. ஏனெனில், வறுமையை கருவியாக்கி வழுக்கிவிழ வைப்பவர்களும் உண்டு.

மருத்துவமனையில் ஏதேனும் கேமராக்கள் இருக்கிறதா என்பதை பார்வையை ஒரு சுற்று சுழற்றி கண்காணிக்கவேண்டும். அதோடு இயன்றவரை குடும்ப டாக்டர் வைத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். மேலும், தொடர்ந்து ஒரே டாக்டரிடம் சென்று ஒரு அறிமுகத்தை ஏற்ப்படுத்தி கொள்வதையும் கைவிடவேண்டும். ஏனெனில், டாக்டர்கள் உங்களிடம் நற்பெயர் எடுப்பதன் மூலமும் நட்பை வளர்ப்பதன் மூலமும் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் வாய்ப்பு அதிகம்.

மேலும், முஸ்லிம் பெண்கள் கண்டிப்பாக பர்தாவோடு செல்லுதல் அவசியம். அதுமட்டுமன்றி, ஆபரேஷன், பிரசவம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினை நீங்கலாக, வேறு எதற்காகவும் பர்தாவை அகற்றுமாறு மருத்துவர் கூறினால் அதை புறக்கணிக்கவேண்டும். நல்லவர்களையும் தவறிழைக்கத்தூண்டும் ஆடைகளை அணிந்து செல்வதை கண்டிப்பாக விட்டுவிடவேண்டும்.

வேறு இடத்தில் இருந்து குடிபெயர்ந்து புதிய இடத்தில் குடியேறியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தால் அருகில் உள்ள வீடுகளில் அந்த மருத்துவமனை பற்றியும், அதில் பணியாற்றும் மருத்துவர் பற்றியும் விசாரித்துக்கொள்ளவேண்டும். இவ்வாறாக, கணினியுகத்தில் வாழும் நாம் இயன்றவரை கவனமாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம் என்பதை முஸ்லிம் பெண்கள் உணரவேண்டும். அதோடு, 'சேலை மீது முள் விழுந்தாலும்-முள் மீது சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பதை மனதிலே இருத்திக்கொண்டு எந்த காரியத்தையும் செய்ய முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை: