முஸ்லிம்கள் தங்களது அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க முயலும் காலமிது. இந்தியா முழுவதும் சிறுபான்மை சமூகத்தினரிடையே தங்களது அரசியல் உரிமையை மீட்டெடுக்க தங்களது முதல் கட்டப் பணிகளை துவக்கிவிட்டனர்.
இந்தியா முழுவதும் உரிமை முழுக்கம் கேட்கத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிப் பாதை மிகவும் சுவாரசியமானது மட்டுமல்ல, புரட்சிகரமானதும் கூட.
எல்லை தாண்டி வந்த பங்களாதேஷ் அகதிகளைப் பிடித்து விசாரிக்கிறோம் என்ற பேரில் அஸ்ஸாமில் வாழும் அப்பாவி அஸ்ஸாமியர்களைக் கைது செய்து துன்புறுத்தியது. சட்டவிரோதக் கைதுகள், சித்திரவதைகள் தொடர்ந்தன. எல்லைப்புற பகுதிகளில் வாழும் அப்பாவி அஸ்ஸாமிய முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்ட வெகுண் டெழுந்தது அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி. இயற்கைப் பேரிடரிலும் அஸ்ஸாமிய முஸ்லிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். வருடந் தோறும் ஏற்படும் பெரும் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து நடுவீதிக்கு வரும் நிலை ஏற்பட்டது. பேரிடரை எதிர்கொண்டு வீடிழந்த அப்பாவி அஸ்ஸாமிய மக்களுக்கு மறுவாழ்வுக்கு ஆவன செய்து சாதனைப் படைத்தது.
அத்தோடு அஸ்ஸாமிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இதுவரை ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த காங்கிரஸ், நேற்றுவரை ஆட்சி சுகம் அனுபவித்து மக்களுக்கு ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் வழங்கிய பாரதீய ஜனதா, அஸ்ஸாம் கனபரிஷத் போன்ற கட்சிகளுக்கு எதிராக தீவிர அரசியல் களம் கண்டது.
அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மாபெரும் வெற்றிக்கு வலுவான சான்றாக ஒரு குறிப்பிட்ட அம்சத்தை குறிப்பிடுகிறார்கள். கலவரங் களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததால் மாநில அரசு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கிவந்த நிலையில், அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கடும் போராட்டங் களுக்குப் பின் கலவரங்களில் பலியாகும் அப்பாவிகளுக்கு தலா எட்டு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு வருவதைக் கூறி அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியை நெகிழ்ச்சி யுடன் பாராட்டுகிறார்கள்.
அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிப் பாதைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் முக்கிய இடம்பெற்றுத் திகழும் அக்கட்சித் தலைவர் போட்டியிடும் மக்களவைத் தொகுதிகளின் நிலவரத்தைப் பார்ப்போம்.
அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மவ்லவி பத்ருதீன் அஜ்மல் துப்ரி மக்களவைத் தொகுதியில் காங்கிரசுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறார். காங்கிரஸ் தற்போதைய எம்.பி. அன்வர் ஹுஸைன் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகையுடன் சூறாவளி சுற்றுப் பிரச்சாரம் செய்து வருகிறார். இருப்பினும் காங்கிரசுக்கு இங்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
காங்கிரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்திய மவ்லவி பத்ருதீன் அஜ்மல் சில்சார் தொகுதியில் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சில்சார் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த அஸ்ஸாம் கனபரிஷத் பாஜக கூட்டணி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது வேறு வழியே இல்லாமல் பாஜக கூட்டணி ராஷ்ட்ரவாதி சேனா என்ற கட்சியின் அருண்தாஸ் என்பவரை ஆதரிக்க வேண்டிய நிலை. இவர் பிரபலமில்லாத வேட்பாளராதலால் இங்கும் காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறார் பத்ருதீன் அஜ்மல்.
மவ்லவி பத்ருதீன் அஜ்மல் போட்டி யிடும் மற்றொரு தொகுதியான துப்ரியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 4 லட்சம் வாக்குகளை இக்கட்சி முன்பே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. துப்ரி சட்டமன்றத் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினராக மவ்லவி பத்ருதீன் அஜ்மல் பதவி வகித்து வருகிறார். அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய் மற்றும் அமைச்சர் ரகீப் ஹுசைன் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெற்றி பத்ருதீனுக்குத்தான் என அடித்துச் சொல்கிறது களம்.
அபூசாலிஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக