திங்கள், 18 மே, 2009

இனிவரும் தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமுமுகவின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் அறிக்கை:


ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் உரிமை பெறவேண்டும், அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரப் பிரதிநிதித்துவம் வேண்டும், அரசியலில் லஞ்சத்தையும், ஊழலையும், மதவாதத்தையும் வேறுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த மகத்தான லட்சியங்களை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் களமிறங்கியது.


மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. இத்தொகுதிகளில் ம.ம.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கட்சி தொடங்கி மூன்று மாதங்களில் நான்கு தொகுதிகளில் மிகப்பெரிய சக்திகளை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி களம் கண்டது. தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டாலும் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்ந்த லட்சியங்கள் எதிர்காலத்தில் வெல்ல இடையறாது பாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தத் தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறை மீது பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எந்தவொரு பொத்தானை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கு செல்லும் நிலை பல தொகுதிகளில் ஏற்பட்டது போல மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது.


மின்னணு தொழில்நுட்பத்தில் முன்னேறிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தியாவில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.

கருத்துகள் இல்லை: