ஞாயிறு, 10 மே, 2009

ம.ம.க.வுக்கு வாக்களிக்கக்கூடாது என்ற வாதமும்,வரிசையில் நிற்கும் கேள்விகளும்!

முன்னுரை;
தமிழகத்தில் திராவிடக்கட்சிகளால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், ஏனைய தொகுதிகளில் மற்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. இதில், ம.ம.க. மற்றும் பி.ஜே.பி போட்டியிடும் தொகுதிகளில் 'களமிறங்கி' பணியாற்றி அவர்களை மண்ணை கவ்வ வைப்போம் என்று சூளுரைத்துமதவாத பி.ஜே.பியையும், மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ம.ம.கவையும் ஒரேதட்டில் வைத்து எடைபோடும் த.த.ஜ., ம.ம.க.எனும் த.மு.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது? என்ற பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த பிரசுரம் பற்றி பதிலளிக்கவேண்டியது சம்பத்தப்பட்ட த.மு.மு.க.வின் கடமை எனினும், கருத்துரிமை எல்லா முஸ்லிம்களுக்கும் இருக்கிறது என்ற அடிப்படையில் அந்த பிரசுரம் சம்பந்தமான எமது கருத்துக்களை இதில் வரிசைப்படுத்தியுள்ளோம். எமது இந்த கருத்து முஸ்லிம்களுக்கு ஆதரவான கருத்தேயன்றி, த.மு.மு.க.வுக்கு ஆதரவானதல்ல. ஏனெனில், இஸ்லாம் அல்லாத இயக்கமும் எமக்கில்லை! இறைத்தூதர்[ஸல்]அவர்கள் அல்லாத தலைவரும் எமக்கில்லை!!
...............................................................................................
தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் இந்தமுடிவை[தி.மு.க.வை ஆதரிப்பது] எடுத்துள்ளன. வாஸ்தவம்தான்! ஆனால் ஒரு வித்தியாசம்!! த.த.ஜ.வைப்போல் முற்றிலும் தி.மு.க.வை ஆதரிக்கவில்லை. ம.ம.க. போட்டியிடும் தொகுதிகள் நீங்கலாக, மற்றதொகுதிகளில்தான் தி.மு.க.வை,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தேசிய லீக் (நிஜாமுதீன்), இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம் போன்ற முஸ்லிம் அமைப்புகள் ஆதரிக்கிறது. எனவே அவர்கள் த.த.ஜ.போன்று முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை.
தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க கூட்டணியில் சேர்வதை மறுப்பதற்கில்லை என்று அண்ணா தி.மு.க.தலைவி அறிவித்துவிட்டார். திமுக வெற்றிபெறுவதைவிட அண்ணா திமுக வெற்றிபெறக்கூடாது என்பது முஸ்லிம்களின் முக்கியமான இலக்காக இப்போது மாறிவிட்டது.
ஒரு சின்ன வித்தியாசம்! அண்ணா திமுக வெற்றிபெறக்கூடாது என்ற முஸ்லிம்களின் இலக்கிற்கு, தேர்தலுக்கு பின் அண்ணாதிமுக பி.ஜே.பி யுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்ற காரணம்அல்ல. ஏனெனில் தேர்தலுக்கு பின்னால் என்ன நடக்கும் என்பது அல்லாஹ் மட்டும் அறிந்தவன். எனவே முஸ்லிம்களை அண்ணா தி.மு.க.புறக்கணித்ததால்தான் அண்ணா தி.மு.க.வெற்றி பெறக்கூடாது என்பது முஸ்லிம்களின் இலக்கு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சரி! ஒரு வாதத்திற்கு, தி.மு.க. தேர்தலுக்கு பின் பி.ஜே.பி.யுடன் உறவுகொள்ளாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? கடந்த காலங்களில் திமுக, பி.ஜே.பியுடன் கூட்டனிகண்ட கட்சிதானே!
தமிழகத்தின் எந்த தொகுதியிலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்று திரண்டு தமுமுக வேட்பாளரை ஆதரித்தாலும் அவரால் வெற்றிபெற முடியாது. ஏனெனில் எந்த தொகுதியிலும் முஸ்லிம்கள் ஐம்பது சதவிகிதம் அளவுக்கு இல்லை. தமுமுக வேட்பாளர் வெற்றிபெற முடியாது எனும்போது இவர்கள் பிரிக்கும் ஒவ்வொரு ஓட்டும் அண்ணா திமுகவுக்கே வெற்றிபெற உதவும்.இது பாஜக ஆட்சி ஏற்படவே துணை செய்யும்.
முஸ்லீம் சமுதாயம் பலவீனமானது என்று அரசியல்வாதிகளுக்கு அடையாளம் காட்டுவதுபோல் உள்ளது இவர்களின் இந்த அறிவிப்பு.தேர்தல் களம் காணும் எந்த ஒரு கட்சி வேட்பாளரும் அவர் சார்ந்த சமுதாயம் ஐம்பது சதவிகிதம் இருக்கிறார்களா என்று பார்த்து போட்டியிடவில்லை.சாதாரண சுயேட்சை வேட்பாளர்கூட வெல்வோம் என்ற நம்பிக்கையில்தான் போட்டியிடுகிறார். மேலும், நமது ஓட்டுக்கள் குறைவாக இருந்தால்கூட தோற்றுவிடுவோம் என நினைப்பது கோழைத்தனமாகும். மேலும் இறைவன் நாடினால், சின்னசிறு கூட்டத்தை கொண்டு பென்னம்பெரும் கூட்டத்தை ஜெயிக்கவைப்பான். மேலும் பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் த.த.ஜவின் நிலைப்பாடு எனில்,மணிசங்கர் அய்யர் நீங்கலாக, மற்ற தொகுதிகளில் காங்கிரசை ஆதரிக்காததுஏன்? காங்கிரஸ் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டது எனவே காங்கிரசை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று த.த.ஜ. கூறவருமானால், மணிசங்கர் அய்யரும் பாண்டிச்சேரி வேட்பாளரும் அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தானே! அவர்களை மட்டும் ஆதரிப்பதேன்? தமிழகத்தில் காங்கிரசை த.த.ஜ. ஆதரிக்காததால் காங்கிரஸ் தோற்று[?] அந்த தொகுதிகளில் அண்ணா திமுக கூட்டணி வென்றுவிட்டால் அப்போது பி.ஜே.பி ஆட்சிக்கு உதவியதாக ஆகாதா?
யாருக்கோ போடுகிற ஓட்டை முஸ்லிம்களுக்கு போட்டால் என்ன என்பதும் முக்கிய கேள்வியாக எடுத்து வைக்கப்படுகிறது.இவர்கள் வெற்றி பெறபோவதில்லை என்ற நிலையில், இவர்களுக்கு வாக்களிப்பது முஸ்லிமுக்கு அளிக்கும் வாக்காக அமையாது.மேலும், கடந்த காலத்தில் முஸ்லீம் என்பதற்காக ஆதரித்து முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிரார்களா என்பதை நாம் நினைத்துபார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
அடுத்த நொடியில் நடப்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பிரச்சாரம் செய்யும் த.த.ஜ, ம.ம.க. வெற்றிபெறவே செய்யாது என்று அறுதியிட்டு உறுதியாக கூறுவது எந்த மறைவான ஞானத்தின் அடிப்படையில்? சரி! கணிப்பின் அடிப்படையில் சொன்னோம் என்று த.த.ஜ. கூறவருமானால், அரசியலில் மாபெரும் தலைவர் என்று அறியப்பட்ட காமராஜரை ஒரு பெ. சீனிவாசன் வென்ற வரலாறும், அசைக்கமுடியாத தலைவி என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவை சாதாரண ஜி.சுகவனம் என்பவர் தோற்கடித்த வரலாறும் உண்டு. எனவே த.த.ஜ. ஜோசியம் சொல்வதை விடவேண்டும். மேலும், கடந்த காலங்களில் த.மு.மு.க. முஸ்லீம் வேட்பாளரை ஆதரித்து முன்மாதிரியாக திகழவில்லையாம்! எனவே த.த.ஜ.வும் இவர்களை புறக்கனித்ததாம்!! சரி! கடந்த காலங்களில் முஸ்லீம் வேட்பாளரை ஆதரிக்காது த.மு.மு.க செய்த மிகப்பெரிய தவறுதான். அதே தவறை நீங்களும் செய்வீர்களா? நீங்கள் முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரித்து ஒரு அழகிய முன்மாதிரியை ஏற்படுத்தவேண்டியதுதானே? இந்த விசயத்தில் ஏன் த.மு.மு.கவை பின்பற்ற நினைக்கிறீர்கள்?
முஸ்லீம் இயக்கம் என்றால் ஒரு சீட்தான் என்ற கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டவே புறப்பட்டுள்ளோம் என்று த.மு.மு.க.வினர் கூறுகின்றனர்.இதுவும் சந்தர்ப்பவாதமே தவிர எள்ளளவும் உண்மையில்லை.
திமுக ஒரு சீட்டு தர முன்வந்தபோது அதை ஏற்க மறுத்தது நாடறியும் எனவே உண்மையை மறைக்கமுடியாது.
சமுதாயத்தின் மானம் காக்கவே களம் இறங்கியுள்ளோம் என்று த.மு.மு.க கூறுகின்றது அதுவும் பொய்யான வாதமே!
த.மு.மு.க நினைத்திருந்தால் தி.மு.கவிடமிருந்து ஒரு தொகுதியையும், காங்கிரஸ் தரப்பிலிருந்து கவுரவமான velinaattu தூதர் போன்ற பதவியையும் பெற்றுக்கொண்டு சமுதாயத்தை அரசியல் கட்சிகளிடம் அடகு வைத்திருக்கமுடியும். ஆனால் அதை உதறித்தள்ளிவிட்டு, இருந்த வக்புவாரிய தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து சமுதாயத்தின் மானத்தை காத்தது உண்மையே! ம.ம.க. நான்கு தொகுதிகளிலும் ஜெயிக்கும் இன்ஷா அல்லாஹ். ஒருவேளை தோற்றாலும் அவர்கள் வெற்றிவீரர்களே! ஏனெனில், சமுதாயத்திற்காக அவர்கள் பதவியை துறந்தவர்கள்.
சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்ட இவர்கள் அதில் உண்மையாளர்களாக இருந்தால் கடந்த காலத்தில் சமுதாயத்தின் நம்பிக்கையை பெரும் வகையில் தங்களது நடவடிக்கையை அமைத்திருக்கவேண்டும். வக்பு வாரியத்தலைவர் என்ற பதவி கிடைத்ததும் இவர்கள் போட்ட ஆட்டம் என்ன? முறைகேடு என்ன?
வக்புவாரிய தலைவர் பதவியை கொண்டு ஹைதர் அலி முறைகேடு செய்தார் என்பது உண்மையானால், கடந்த காலங்களில் அவர்மீது த.த.ஜ. வழக்கு தொடுக்காது ஏன்? இப்போதும் ஹைதரலி அவர்கள், நான் முறைகேடு செய்தேனா என்று சி.பி.ஐ.விசாரணைக்கும் தயார் என்கிறார். கருணாநிதியிடம் சொல்லி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு ஹைதர் அலி அவர்களின் ஊழலை அம்பலப்படுத்த த.த.ஜ. தயங்குவது ஏன்? இதில் வேடிக்கை என்னவெனில், ஒரு வாதத்திற்கு ஹைதர் அலி அவர்கள் சில விஷயங்களில் தவறு செய்தார் என்று வைத்துக்கொண்டாலும், திருச்சி வக்பு நிலத்தை ஆக்கரமித்து அறிவாலயம் எழுப்பிய கருணாநிதி கட்சியை ஆதரிப்பதுஎப்படி? உங்கள் வாதப்படி தாரை வார்த்த ஹைதர் அலி குற்றவாளி அவர் எதிர்க்கப்படவேண்டியவர் என்றால், ஆக்கிரமித்த கட்சியையும் அல்லவா எதிர்க்கவேண்டும்? மாறாக ஆதரிப்பது ஏன்?

எனவே, முஸ்லீம் சமுதாயமே! வார்த்தை ஜாலங்களையும், வாய்ப்பந்தலையும் நம்பி ஏமாந்து, சமுதாயத்தை மீண்டும் திராவிடக்கட்சிகளிடம் அடமானம் வைத்து விடாதீர்கள். மனிதநேயமக்கள் கட்சி உள்ளிட்ட நம் சமுதாய வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்! இவர்கள ஜெயிப்பார்களா? தோற்பார்களா? என்று ஆய்வு செய்யாதீர்கள். ஏனெனில், வெற்றியையும்-தோல்வியையும் தருவது இறைவனின் அதிகாரத்திற்குட்பட்டது. மறவாதீர் ரயில் இன்ஜின்!!
தேங்க்ஸ் டு :

கருத்துகள் இல்லை: