செவ்வாய், 19 மே, 2009

தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை


மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணிகளையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும்.

ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை.

உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதியில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக்காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது.

'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி நாளிதழில் மே 14 அன்று வந்த செய்தி தனியாக உள்ளது).

மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோவிலில் பூத் ஒன்றில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது கை சின்னத்தில் ஒலி எழுப்பியது. உடனே ஜே.எஸ்.ரிஃபாயி தலைமையிலான குழு ஒரு புகார் கொடுத்த பிறகே அது சரிசெய்யப்பட்டது. அதுபோல் பாபநாசம் அருகே ஒரு கிராமத்தில் இதே குற்றச்சாட்டை மக்கள் கூறிய பிறகே அது சரிசெய்யப்பட்டது.
நமது கவனத்திற்கு வராமல் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த சதி நடத்தப்பட்டிருந்தது என்று தெரியவில்லை.
ஆளும் கட்சியினர், அரசு ஊழியர்களின் உதவியுடன் பல தில்லுமுல்லுகளை செய்ததாக சில பத்திரிகையாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

ம.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் நமது வாக்குகளை பத்தில் ஒரு பங்காக குறைத்து காண்பிக்க திட்டமிட்டு சதி செய்திருக்கிறது ஆளும் கட்சி.

எதிர்காலத்தில் முஸ்லிம்கள் வலுவான அரசியல் பேரம் செய்யக் கூடாது என்பதற்காக இச்சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

நாம் பல பூத்துகளில் நமது சகோதரர்களை ஏஜென்டுகளாக போட்டிருந்தோம். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் போட்ட வாக்குகள் கூட காணாமல் போய், அங்கே பூஜ்யம் வாக்குகள் என உள்ளது. இது நமது குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
அதுபோல் பா.ம.க.வை ஏழு தொகுதிகளிலும் தோற்கடிக்க திட்டமிட்டு தில்லுமுல்லுகள் நடத்தப்பட்டிருக்கிறது.

மதுரையில் அழகிரிக்கு கடும் போட்டியைக் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சியைப் பழிவாங்கும் விதத்தில் கன்னியாகுமரி தொகுதியில் அக்கட்சி 'டெபாசிட்' இழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மார்க்சிஸ்டுகளின் கோட்டை மட்டுமல்ல, அதிமுகவின் வலுவான பகுதியுமாகும்.
திமுகவை கடுமையாக எதிர்க்கும் வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். வைகோ தொகுதியில் பதிவான வாக்குகளை விட கூடுதலான 22 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்டு வைகோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தா.பாண்டியன் தொகுதியில் தலைக்கு 1000 ரூபாய் பணம் வினியோகிக்கப்பட்டு கட்சி சாராத வாக்காளர்கள் தா.பாண்டியனுக்கு எதிராக கடைசி நேரத்தில் திசை திருப்பப்பட்டனர்.

முதலில் 330 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரம், பிறகு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாயாஜாலமும் நடந்துள்ளது. திடீரென எங்கிருந்தோ வந்த தொலைபேசியினால் சிதம்பரம் வெற்றி பெற்றுவிட்டதாக கொஞ்சமும் மனசாட்சியின்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமுமுக நிர்வாகிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட ரயில் எஞ்சினுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்று கூறுவதை நம்ப முடியாமல் வாக்களித்தவர்கள் குமுறுகிறார்கள்.

முஸ்லிம்களின் எழுச்சியை அச்சுறுத்தும் வகையில் மத்திய சென்னை தொகுதியில் திமுகவினரால் நடத்தப்பட்ட கலவரம் பலரையும் வாக்குச்சாவடி பக்கம் போகவிடாமல் தடுத்துவிட்டது.

மத்திய சென்னையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப் பதிவு அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட முடியாத பலகீனமான நிலையில் உள்ளது.

நமது இக்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் அனைத்தும் அம்பலமாகும்.

-தமிமுன் அன்சாரி

கருத்துகள் இல்லை: