புதன், 27 மே, 2009

தமிழகம் மதசார்பற்ற மாநிலமா...??

நமது இந்திய தேசம் பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் வாழும் மத சார்பற்ற நாட்டு என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். அதிலும் குறிப்பாக நமது தமிழகம் பெரியார் வழிவந்த திராவிட கட்சிகளால் ஆளப்படுவதோடு 'மத சார்பற்ற' மாநிலம் என்றும் நாம் நம்பி வருகிறோம். ஆனால் மத சார்பற்ற மாநிலமான தமிழகத்தின் முத்திரையை நீங்கள் பார்த்தால் அதில்,
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றிருக்கும். மத சார்பற்ற தன்மையை நிலை நாட்டவேண்டிய அரசு, தனது செயல்பாடுகளில் அதை பேணுவதில்லை.

சமீபத்தில் கூட புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்படும் இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டதாகபத்திரிக்கைகளில் பார்த்தோம். தடுக்கவேண்டிய அரசே அறிவிக்கப்படாத மத சடங்கை பின்பற்றும் நிலையில், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த துறைகளின் செயல்பாடுகளை சொல்லித்தெரியவேண்டியதில்லை.அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த வழிபாட்ட்டுத்தளங்களோ, படங்களோ இருக்கக்கூடாது என்று சட்டம் உள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில் சாமி படங்கள் மாலை போட்டு வைக்கப்பட்டிருப்பதும், தினமும் காலையில் அதற்கு பூஜைகள் செய்யப்படுவதையும் காணலாம். இதுபோக சில அரசு அலுவலகங்கள் மற்றும் சில காவல் நிலையங்களில் மினி கோயில்கள் இருப்பதையும் காணலாம். விதிவிலக்காக எம்மதமும் சம்மதம் என்று மும்மத படங்களையும் வைத்திருப்பார்கள். இதுபோக எந்த அரசு அலுவலகங்களிலும் முஸ்லிம்களின்/கிறிஸ்தவர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் மறக்காமல் ஆய்த பூஜை கொண்டாடப்படுகிறது.இதுபோக அரசு பேருந்துகளில் ஓட்டுனர்-நடத்துனர் எந்த மதத்தை சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த மதத்தின் படம் மாட்டப்பட்டுள்ளதையும் காணலாம்.

இவை ஒருபுறமிருக்க, சேலம் அருகே மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் குறைய வேண்டி போலீசார் கிடா வெட்டி பூஜை செய்துள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த பூஜையில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.பூஜையின் போது இனிமேலாவது கொலை வழக்குகள் குறைய வேண்டும் என்று போலீசார் நெஞ்சுருக வேண்டிக் கொண்டனர். பூஜைக்கு பிறகு கிடா கறியை போலீசார் பகிர்ந்து கொண்டனர்.போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை செய்த சம்பவம் சரக போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆக்கத்தை இங்கு நாம் எழுதியதற்கு காரணம் எந்த மதத்தின் மீதான காழ்ப்புனர்வினாலும் அல்ல. ஒரு மத சார்பற்ற நாட்டில்அரசு இயந்திரங்கள் மதத்தின் அடையாளத்தோடு இயங்கக்கூடாது. அவ்வாறு இயங்கினால் மத சார்பற்ற தன்மை அடிபட்டுபோகும் என்பதை விளக்கவே இந்த ஆக்கம். அரசு புரிந்துகொண்டால் சரி!

கருத்துகள் இல்லை: