சென்னை, மே 22: மனித உரிமை பணியாளர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், அவர்களை சித்ரவதை செய்வதை கண்டித்தும் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.
மனித உரிமைக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் தன்னார்வ பணியாளர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு தொல்லை கொடுத்து வருவதாக அந்த அமைப் பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த அமைப்பைச் சேர்ந்த ரங்கராஜன், அப்துல் சபிக், கமாலுதீன் மற்றும் அதன் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ரமேஷ் பாபு, உமாபதி, ஜெயச்சந்திரன், டி.வி.எஸ். மணி, முருகேசன், தயாளமூர்த்தி, ராஜமாணிக்கம், வளன் மற்றும் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி, ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் மனித உரிமை இயக்கத்தின் லூசியா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வேல்முருகன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
போலீசாரின் அத்துமீறல்களால் தங்கள் இயக்க பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மறியலில் கலந்துகொண்ட அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக