புதன், 21 அக்டோபர், 2009

இன்ஷூரன்ஸில் இப்படியும் ஒரு மோசடி

அலர்ட் ஆன ஆக்ஷன் செல்... அமுக்கப்பட்ட போலி ஏஜென்ட்கள்!

''தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் பிரீமியம் செலுத்த வேண்டிய நபர்களிடம் இருந்து பிரீமியம் தொகையை வசூலித்து, அதற்குப் போலியாக ரசீது கொடுத்து ஏமாற்றுகிறது ஒரு கும்பல். இவர்களுக்கும் அந்த தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கும் உண்மையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது' - நமது ஆக்ஷன் செல்லுக்கு அக்கறையுடன் இப்படி தெரிவித்திருந்தவர் நெல்லை மாநகர த.மு.மு.க. தலைவர் உஸ்மான்கான்.

விசாரணையில் இறங்கினோம். நமது விசாரணையில் கிடைத்த தகவல்களை நெல்லை மாவட்ட காவல்துறையிடமும் பகிர்ந்து கொண்டோம். அதைத் தொடர்ந்து அந்த நூதன மோசடி கும்பலை கைது செய்திருக்கிறது நெல்லை மாவட்ட காவல் துறை!

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் டுபாக்கூர் ஏஜென்ட் ஒருவரிடம், தான் கட்டவேண்டிய பிரீமியம் தொகை பத்தாயிரத்தைக் கொடுத்து அதற்கான ரசீதும் வாங்கியிருந்தார். அவரிடம் இருந்த ரசீதை சம்பந்தப்பட்ட தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நாம் செக் பண்ணியபோது, அந்தத் தொகை அங்கு வரவு வைக்கப்படவே இல்லை! உடனே நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கண்ணப்பனிடம் இதைக் கொண்டு சென்றோம். அதிர்ந்துபோன டி.ஐ.ஜி., உடனடியாக நாங்குநேரி டி.எஸ்.பி-யான அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினார். விளைவு, மோசடி கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில், இந்த மோசடியில் இரண்டு பிரபல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானதால், அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் நம்மிடம் பேசினார். ''இன்ஷூரன்ஸ் மோசடி குறித்து ஜூ.வி. தகவல் கொடுத்ததுமே தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினோம். அப்போது மாரிமுத்து என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரிச்சப்போ, 'கலெக்ஷன் ஏஜென்ட் தேவை'னு பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ஒரு மாசத்துக்கு முன்பு இந்த வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னார். இன்ஷூரன்ஸ் பிரீமியம் வசூல் செய்வது மட்டுமே இவருக்கு வேலை. இவருக்கு தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றின் பெயரில் போலியாக அடையாள அட்டையையும் கொடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் முழுவதும் இவரை வெச்சு லட்சக்கணக்கில் வசூல் செஞ்சிருக்காங்க. இவரும், 'மோசடி கும்பலுக்காக வசூல் செஞ்சுகுடுக்கிறோம்' என்ற விவரமே தெரியாமல் சின்ஸியராக வேலை பார்த்திருக்கிறார். அப்பாவி மக்களை ஏமாற்றும் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பலபேரை வெச்சு மோசடி வசூலில் ஈடுபட்டிருக்கு...'' என்றவர்,

''குறிப்பிட்ட ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த மேலதிகாரிகள் சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக கூண்டோடு விலகியிருக்காங்க. அந்த தனியார் கம்பெனியை பழிவாங்கணும்னு நினைச்ச அவங்க, ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு இன்ஷூரன்ஸ் கட்டுறவங்களோட பெயர், முகவரியை சுலபமா எடுத்திருக்காங்க. பிறகு தனியாக ஏஜென்ட்களை நியமிச்சு அந்த நிறுவனத்தின் பாலிசிதாரர்களை தொடர்புகொண்டு பணத்தை கலெக்ட் பண்ணியிருக்காங்க. இப்படி கிடைச்ச பல லட்ச ரூபாயை தங்களுக்குள் பங்கு போட்டிருக்காங்க.

இந்த மோசடி வெளியில் தெரிஞ்சாகூட அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியாதபடி புத்திசாலித் தனமா நடந்திருக்காங்க. அதாவது, கலெக்ஷன் வேலைக்கு ஆள் தேவைன்னு புதுச்சேரியில் பத்திரிகை விளம்பரம் குடுத்துருக்காங்க. அதோடு, வேலை தேடி வந்தவர்களிடம் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ்களை வாங்கி அதை வெச்சி, சிம் கார்டுகளையும் வாங்கியிருக்காங்க. நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கும்பகோணம்னு இவங்களோட எல்லை விரிஞ்சு கிடக்கு. பஜாஜ் அலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் சுமார் 20 பேர் இந்த கும்பலுக்கு உடந்தையா இருந்திருக்காங்க. முதல் கட்டமா நெல்லையில் 'இண்டியா இன்ஃபோ லைன்' என்ற பெயரில் ஏஜென்ஸி நடத்திவந்த ஜெபராஜ், ஆஃபின் அந்தோணி ராஜ், ஆனந்த்குமார், சதீஷ்குமார் ஆகியோரை கைது செஞ்சிருக்கோம். இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியப் புள்ளி ஒருத்தன் மும்பையில் இருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு. அவனையும், தமிழகம் முழுவதும் இவர்களின் நெட்வொர்க்கில் இருக்கும் கும்பலையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்!'' என்றார்.
கும்பகோணம், கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இதேபோன்ற மோசடி நடந்திருப்பது கொஞ்சகாலத்துக்கு முன்பே போலீஸுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், மோசடி கும்பலை கண்டுபிடிக்க முடியாததால், இவர்களை நம்பி வேலைக்குச் சேர்ந்த அப்பாவிகள் மீது மட்டும் வழக்குப் போட்டு முடித்திருக்கிறார்கள். இதனால், மோசடிப் பேர்வழிகளுக்குத் துணிச்சல் அதிகரித்து, தொடர்ந்து பல நகரங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்!

இந்த மோசடி குறித்து பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ''நெல்லையில் யாரோ சிலர், போலியான ரசீதுகளைக் கொடுத்து எங்களது வாடிக் கையாளர்கள் சிலரிடம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் வசூலிச்சிருக்காங்க. அந்தப் பணம் எங்களுக்கு வந்து சேரவில்லை. கடந்த ரெண்டு மாசமா நெல்லை பகுதியில் இதேபோல் நிறைய கம்ப்ளெய்ன்ட்ஸ் வந்துச்சு. எங்களது நிறுவனத்தைத் தவிர வேறு யாரிடம் பணம் குடுத்திருந்தாலும் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதை அவங்ககிட்ட விளக்கிச் சொல்லி அனுப்பி வெச்சோம். அதன்பிறகும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்தால், நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று சொன்னார்கள்.

''சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு, தங்களது வாடிக்கையாளர்களை இப்படியொரு கும்பல் மோசடி செய்வது முன்பே தெரிந்திருந்திருக்கிறது. அப்படி இருந்தும் குறைந்தபட்சம், போலீஸில் புகார் செய்ய வேண்டும் என்ற அடிப்படை உணர்வுகூட இந்த நிறுவனங்களுக்கு இல்லாமல் போனது. இது ஒரு செய்தியாக வெளியில் வந்தால் தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்குமே என்று சுயநலமாக நினைக்கிறார்களே தவிர... அப்பாவிகள் ஏமாந்துபோகாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லையே...'' என்று போலீஸுக்குள் வருத்தப்படுவதும் காதில் விழுகிறது.

- ஆண்டனிராஜ்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

நன்றி: ஜுவி

கருத்துகள் இல்லை: