திங்கள், 19 அக்டோபர், 2009

கரிக்கட்டையான உயிர்களும்; கருணைத் தொகையுடன் கடமையை முடித்துக்கொண்ட அரசும்!



ஒருவரின் சந்தோசம் எப்போது உண்மையான சந்தோஷமாக மாறும் என்றால், இவரின் சந்தோசம் அடுத்தவருக்கு துக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்போதுதான். அந்த வகையில் திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் விபத்தோடும், உயிர்-பொருள் இழப்புகளோடும் முடிவதை பார்க்கிறோம். அதற்கு காரணம் பட்டாசுகள்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. வெறுமனே தீபத்தை வீட்டில் ஏற்றிவைத்து தீப ஒளிதிருநாளாக கொண்டாடும் காலத்தில் இதுபோன்ற விபத்துகளோ, உயிரிழப்புகளோ ஏற்ப்பட்டதில்லை. என்றைக்கு வண்ண வண்ண கலர்களுடனும், விதம்-விதமான ஒளியையும் எழுப்பும் பட்டாசுகள் மூலம் தீப ஒளித்திருநாள் 'தீபாவளி' யாக மாறியதோ அன்று தொடங்கிவிட்டது இந்த விபத்துகள். ஒவ்வொரு தீபாவளிக்கு முன்பும் காவல்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சில கடைகளை சோதிப்பதும், பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்ற பத்திரிக்கை பேட்டியும் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் வழக்கம்போல் விபத்துகள் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு கூட பள்ளிப்பட்டு என்ற ஊரில் அனுமதியின்றி நடத்தப்பட்ட பட்டாசு விற்பனையகத்தில் நடந்த தீவிபத்தால் சுமார் 32 பேர் கரிக்கட்டையாக ஆன செய்தி கல் நெஞ்சையும் கரைய வைக்கும். அரசு வழக்கம்போல் இறந்தவர்களுக்கு உதவித்தொகை அளித்ததோடு, சிலரை கைது செய்து, சில அதிகாரிகளை சஸ்பென்ட் செய்துள்ளது. கொஞ்ச நாளில் இந்த செய்தி மக்களால் மறக்கப்படும் . பிறகு வழக்கம்போல் அனுமதியில்லா பட்டாசு தொழிற்சாலைகளும் இயங்கும், அனுமதியில்லா கடைகளும் முளைக்கும், உயிர்-பொருள் இழப்புகளும் தொடர்கதையாகும். இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன? மக்களை பாதுகாக்கும் கடமையில் உள்ள அரசு, பாதிப்புக்கு பின்னால் களிம்பு தடவுவதை வாடிக்கையாக கொள்வதனால் எந்த பயனும் ஏற்படாது. மாறாக பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்ற ஆணிவேரை கண்டறிந்து அழிக்கவேண்டும். அந்தவகையில் இந்த பட்டாசு தொழிலை முற்றிலுமாக தடை செய்ய அரசு முன்வரவேண்டும். மேலும், தீபாவளியன்று பட்டாசு வெடித்து கொண்டாடும் மனநிலையில் உள்ள மக்கள், நம்முடைய சில நிமிட சந்தோஷத்திற்கு விலைமதிப்பற்ற உயிரை பலர் இழக்க செய்யும் இந்த பட்டாசு தேவையா என்பதை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

பட்டாசை தடை செய்ய அரசும், பட்டாசை பகிஷ்காரம் செய்ய மக்களும் முன்வராதவரையில் பள்ளிப்பட்டு போன்றவைகள் மெகா சீரியலாகத்தான் தொடரும் என்பதில் ஐயமில்லை.



படம் நன்றி;தினத்தந்தி

கருத்துகள் இல்லை: