ஞாயிறு, 18 அக்டோபர், 2009

பொது இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டத் தடை!ஓர் அலசல்


தெருவோர சர்ச்
வழிபாடு நடத்த தடை செய்யப்பட்ட வேலூர் கோட்டை பள்ளிவாசல்
திடீர் கோவில்கள்

-இனியவன்

குஜராத்தில் பொது இடங்களில் கோவில்கள் கட்டுவது பெருகி சாலைப் போக்குவரத்துக்கே பிரச்சினை என்ற சூழ்நிலையில் கோவில்களை அகற்ற கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றம், சட்டவிரோதக்கோவில்களை இடிப்பதற்கு நகராட்சிகளுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் ஷர்மா அடங்கிய பெஞ்ச், இது நாடு முழுவதும் உள்ள பிரச்சினை என்ற அடிப்படையில் இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளின் கருத்தும் தருமாறு கேட்டது.

இதுகுறித்து பல்வேறு மாநில உள்துறைச் செயலாளர்களின் கருத்துக்களைப் பெற்று மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால்சுப்ரமணியன் நீதிமன்றத்திற்கு அளித்தார். அனைத்து மாநிலங்களும் பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்பதில் ஒருமித்தக்கருத்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பொது இடங்களில் கோயில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நம்நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டிருப்பது கோயில்கள்தான். எவ்வித சட்டப்பூர்வமான அனுமதியும் பெறாமல் தாங்கள் விரும்பிய இடத்தில் கோயில்களைக் கட்டலாம் என்ற நிலை நிலவுகிறது. சாலைகள், பொது இடங்கள், அரசு அலுவலக வளாகங்கள் (நீதிமன்ற வளாகங்கள் உட்பட), ஏன் சாலையில் இருக்கும் மைல் கல், மரம் ஆகியவற்றைக்கூட கோயில்களாக மாற்றுவது என இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் சாதாரணமாக செயல்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கட்டப்படும் இந்தக் கோயில்களுக்கு விழா வேறு நடத்தி அதில் அரசியல்வாதிகள், காவல்துறையினர் உட்பட அனைவரும் பங்கெடுப்பதும் சாதாரணம்.

ஏற்கனவே மன்னர்கள், செல்வந்தர்கள் என பலராலும் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில்கள் ஏராளமாக நம்நாட்டில் இருந்து வருகின்றன. இதில் பல கவனிப்பாரற்று பாழடைந்து நிற்கின்றன. இவற்றை கவனிப்பதற்கு நேரமில்லாதவர்கள் அல்லது நடந்து சென்று சாமி கும்பிட்டால் கால் வலிக்கும் என்று நினைப்பவர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் உடனே தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கோயில்களை அமைத்துக் கொள்கின்றனர். வருமானத்துக்கும், விளம்பரத்துக்கும் கோவில்களைக் கட்டுபவர்கள் ஒரு ரகம்.

லட்சக்கணக்கான கோயில்கள் இதுபோன்று நம்நாட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவற்றை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டும்கூட இதுவரை எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அலுவலக வளாகங்களில் சாதாரணமாக கோவில்கள் கட்டப்படுவதும், அதை அரசு அதிகாரிகளே திறப்பு விழா செய்வதும்தான் வேதனை. திண்டிவனத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த சட்டவிரோத பிள்ளையார் கோவிலை அகற்றக்கோரி பேரா. கல்யாணி போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் போராடியதும் அதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தமிழகத்தில் நடந்த அவமானகரமான விஷயங்கள்.

இந்துக்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும் தாங்கள் இதில் சளைத்தவர்கள் அல்ல என்று கிளம்பி இருக்கிறார்கள். சட்டவிரோத சர்ச்சுகள் ஆங்காங்கே முளைத்து வருகின்றன. மலைக்குன்றுகளில் சிலுவைகளை நடுவது, வரைவது, புறம்போக்கு இடங்களில் கட்டிடங்கள் என இந்து சகோதரர்களுக்கு போட்டியாக கிறிஸ்தவர்கள் களம்கண்டு வருகின்றனர்.

இதில் முஸ்லிம்களின் நிலைதான் வித்தியாசமானது. சட்டப்பூர்வமாக சொந்தமான பாபர் மஸ்ஜிதையே இழந்துவிட்டு நிற்கின்ற சமுதாயம் இது. முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான பலகோடி மதிப்புள்ள வக்ஃபு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. டெல்லி மற்றும் நாடு முழுவதும் புராதனமான பல பள்ளிவாசல்கள் தொல்பொருள் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை வழிபாட்டுக்கு விடமறுக்கும் அவலம் இந்தியாவில் நடந்து வருகிறது.

நாட்டிலேயே வழிபாட்டுக்கு மறுக்கப்படும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான். எந்தவொரு சர்ச்சும், கோயிலும் அந்தந்த மதத்தவர்கள் வழிபடக்கூடாது என்று அரசால் பூட்டிவைக் கப்படுவதில்லை. (சாதிச் சண்டையால் சில கோவில்கள் மூடப்படுவது தனி).
உதாரணமாக வேலூர் கோட்டையில் இந்துக் கோவிலும், கிறிஸ்தவர்களின் சர்ச்சும் வழிபாட்டுக்காக திறந்துவிடப்பட்டு வழிபாடுகள் நடந்துவரும் சூழ்நிலையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொழுகைக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. தமுமுக தலைமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பள்ளிவாசலைத் திறந்துவிடக் கோரி போராட்டங்கள் நடத்தியும் இன்னும் மவுனம் காக்கிறது மத்திய அரசு. இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திரம்.

தமிழகததில் மட்டுமல்ல, இந்திய அளவிலும்கூட பள்ளிவாசல் கட்டுவதற்கு முறையாக நிலத்தை வாங்கி அதில் கட்டிட அனுமதி வாங்கி சட்டப்பூர்வமான வழிகளில் வழிபாட்டுத்தலங்களை அமைப்பது முஸ்லிம்கள் மட்டும்தான் என்பதை அடித்துச் சொல்ல முடியும். ஆனால் வேதனையான விஷயம் என்னவென்றால், சட்டப்பூர்வமான கட்டிடத்திலேயே மைக் வைக்கக்கூடாது, வழிபாடு நடத்தக்கூடாது என அதிகாரிகளும், சங்பரிவார கும்பல்களும் தடை போடுவதுதான். தென்காசி, காரைக்கால் என தமிழகத்தில் பல ஊர்களில் முஸ்லிம்கள் தங்கள் சட்டப்பூர்வமான நிலத்தில் பள்ளிவாசல்களைக் கட்ட முடிவதில்லை. கட்டிடங்களை விரிவுபடுத்த முடிவதில்லை. சென்னை ராயபுரம் உட்பட பல இடங்களில் மைக்கில் பாங்கு சொல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
சட்டவிரோதக் கோவில்களைக் கூட இடிக்க வேண்டும் என்று இதுவரை எந்த முஸ்லிமும் சொன்னதுமில்லை, அதற்காக வழக்கு தொடர்ந்ததுமில்லை. ஆனால் பள்ளிவாசல்கள் கட்டக்கூடாது என்று சங்பரிவார கும்பல்கள் நீதிமன்றங்களில் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எந்த அளவுக்கு செயல்படுத்தப்படப்போகிறது. காவிமயமான அரசு அதிகாரவர்க்கம், மதச்சார்பற்ற என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத பெரும்பான்மை மக்கள், வழிபாட்டுத்தலங்களை வைத்து அரசியல் செய்யும் அயோக்கிய அரசியல் கும்பல் இவர்களெல்லாம் இருக்கும்வரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவது கடினம்தான்.

இருக்கின்ற சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் அவை எந்த மதத்தினருக்கு உரியதாக இருந்தாலும் அவற்றை பாரபட்சமில்லாமல் அகற்ற வேண்டும். எந்த மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களும், நினைவுச் சின்னங்களும் இனி பொது இடங்களில் அமைக்கப் படுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. இதில் கடுமை காட்டி கடமை தவறாமல் அரசுகள் நடந்தால் மதச்சார்பற்ற இந்தியா என்று சொல்வதில் நாம் கொஞ்சமாவது பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: