செவ்வாய், 20 அக்டோபர், 2009

எம்.பி.க்களின் இலங்கைப் பயணம் பலன் தருமா?

இலங்கைத் தமிழர்களின் அவல நிலையைக் கண்டு வேதனைப்படாத இதயங்களே இருக்க முடியாது. ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்ற நீண்ட விவாதத்தினால் ஈழ மக்களின் துயரம் தீரப் போவதில்லை. அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை.


எது எவ்வாறாயினும் ஈழ மக்களின் துயரம் என்று தீரும் என்ற ஏக்கம் சமாதானம் நாடும் அனைத்து நெஞ்சங்களிலும் நிறைந்து இருக்கிறது.

ஈழ மக்களின் துயரம் தீர என்னதான் வழி. முள்வேலிகளுக்குப் பின்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை மீட்கும் வழிதான் என்ன? இங்கு இருக்கும் ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிங்கள அரசை கடுமையாகத் தாக்குவது, மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்வது என வார்த்தைப் போர் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஈழத் தமிழர் சோகத்தைக் குறைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கை சென்றது.

ஈழத்தமிழர்களின் அவலத்தைத் தீர்க்கும் முதன்முயற்சியாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம் பார்க்கப்பட்டது.
எம்.பி.க்கள் குழுவினரின் பயணத்திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதலும் இலங்கை அரசின் அனுமதியும் ஈழத் தமிழர் துயர் நீக்கும் விவகாரத்தில் முன்னேற்றத்தின் முதற்படியாகவே பார்க்கப்பட்டது.

முகாம்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உணர்வுகளை பல்வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அவையின் விதிமுறைப்படி 10 வீடுகளுக்கு ஒரு கழிப்பறை, ஒரு குடும்பத்திற்கு 30 லிட்டர் குடிநீர் கொடுக்கப்படுகிறது முகாம்களிலேயே பள்ளிக்கூட வசதி உள்ளது. வவுனியாவில் 'மானியம் ஃபார்ம்' என்ற விவசாய நிலம் ஒதுக்கப்பட்டு விவசாயம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது முகாம்களில் உள்ளவர்களை உறவினர்கள் பார்க்க அனுமதி உண்டு என்றெல் லாம் கூறப்படுகின்றது.

முகாம்களை விட்டு சொந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என துடியாய் துடிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.
முகாம்களில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் வெளிவந்திருக்கின்றன.

'தயவு செய்து எங்களை சொந்த மண்ணுக்கு அனுப்புங்கள். கையேந்தி பிழைக்கும் வாழ்க்கை எங்களைக் கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது'' என்று ஈழ மக்களின் வேதனை, அங்கு அரங்கேறிய கண்ணீர் காட்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவரித்திருக்கின்றனர்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணத்திற்கு பிறகு 58 ஆயிரம் தமிழர்கள் முகாம்களிலிருந்து அனுப்பப்பட உள்ளனர் என்பது ஒரு சிறு ஆறுதல்தான்.

தி.மு.க. லி காங்கிரஸ் கூட்டணி கடசியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் சென்றதைவிட அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் இடம் பெறும் வகையில் இலங்கை பயணம் அமைந்திருந்தால் சில சர்ச்சைகளை தவிர்த்திருக்க முடியும்.

முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் சொந்த மண்ணிற்கு அனுப்பப்பட வேண்டும். ஈழ மக்களின் வாழ்வில் வசந்தம் மலரச் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம், அதற்கு ஒப்புதல் வழங்கிய மாநில அரசின் செயல், வாழ்த்து வழங்கிய மாநில அரசின் நோக்கம் தமிழக எம்.பி.க்களை முகாம்களைப் பார்வையிட அனுமதித்த இலங்கை அரசின் எண்ணம் போன்றவை உண்மையானவையாக கருத முடியும். இல்லையெனில் நாளைய வரலாறு இதனை படுதோல்வியாகவே பதிவு செய்யும்.

கருத்துகள் இல்லை: