செவ்வாய், 27 அக்டோபர், 2009

ஜார்கண்ட் - தேர்தல் தேதியை தள்ளிப் போட முஸ்லீம்கள் வேண்டுகோள்

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முஸ்லீம்களும் சில அரசியல் கட்சிகளும் கூறியுள்ளன.

ஜார்கண்ட் மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான தேதியை தேர்தல் ஆணையம் நவம்பர் 27 ஆக முடிவு செய்துள்ளது. இது ஹஜ்ஜுப் பெருநாளின் முந்தைய நாள் என்பதாலும் வெள்ளிக்கிழமை (ஜும்மா) என்பதாலும் ஜார்கண்ட் முஸ்லீம்கள் இதனை வன்மையாக கண்டித்துள்ளனர்.

இந்த தேதிகளை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

முஸ்லீம்களின் இந்த கோரிக்கையை காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோட்சா ஆகிய அரசியல் கட்சிகளும் ஆமோதித்துள்ளன.

கூடவே பா.ஜ.க வும் இந்த தேதியினை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றது. நவம்பர் 27 சுப முகூர்த்த நாள் என்பதால் என்றும் அதிகமான திருமணங்கள் அன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் தேர்தல் பாதிக்கப்படும் என்றும் அக்கட்சி கருதுகிறது.

கடந்த ஞாயிறு 28 இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்த தேதியில் தேர்தல் நடத்தப்படுவதினால் முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தேர்தல் ஆணையத்திடமும், பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்ததேதி மாற்றப்படவில்லை என்றால் தாங்கள் தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப் போவதாக கூறினர்.

ஐந்து கட்டங்களில் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் நவம்பர் 27 ல் தொடங்கி டிசம்பர் 18 ல் முடியும். இந்த டிசம்பர் 18-ம் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் அந்த தேதியினையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து ஜார்கண்ட் ஹஜ் கமிட்டியின் தலைவர் ஹாஜி ஹுசைன் அன்சாரி கூறுகையில், "தேர்தல் ஆணையம் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையினை கணக்கில் கொள்ள வேண்டும், நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 18 ஆகிய இரண்டு தினங்களும் வெள்ளிக்கிழமை வருகின்றதால் அந்த இரு தினங்களையும் மாற்ற வேண்டும்" என்று கூறினார்.

ஜார்கண்ட் தஞ்சிமின் தலைவர் ஷம்செர் ஆலம் இது குறித்து கூறுகையில், "நாங்கள் இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் இந்த தேதி மாற்றப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர் கூறினார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லீம்கள் இரண்டு மணி நேரம் ஜும்மா தொழுகைக்காக செலவிடுவார்கள்" என்றும் அவர் கூறினார்.

நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா.

கருத்துகள் இல்லை: