ஞாயிறு, 4 அக்டோபர், 2009

காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம்


உன்னைப்போல் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முஸ்லிம்களைக் குறித்து நச்சுக் கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், யாரை யார் தீவிரவாதி என்று சொல்வது என்பதற்கு விவஸ்தை வேண்டாமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுமனிதன் (காமன்மேன்),சட்டத்தை கையிலெடுக்கும் செயலை நியாயப்படுத்தும் இப்படத்தில் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்-அவர்களால் பாதிக்கப்படும் அனைவரும் இந்து காமன்மேன் என்ற நச்சுக்கருத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை அநியாயத்துக்கு விமர்சனம் எழுதி, தேவையற்ற பில்டப் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக்கி விட்டார்கள்!

கமல் விடுவிக்கக்கோரும் நால்வரும் தீவிரவாதிகளாம்! அவர்களில் மூவர் காஃபீர்களைக் கொல்வதற்காக நேர்ந்து விடப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள். ஒரேயொருவர் அப்பாவி தீவிரவாதி! ஆம்! தீவிரவாதிகளென்று தெரியாமல் தெரியாத்தனமாக RDX சப்ளை செய்ததால் அப்பாவி தீவிரவாதி!

சினிமாக்களில் தீவிரவாதிகளைத் தட்டிக்கேட்பவர்கள் எல்லோருமே ஓர் அம்பியாகவோ அல்லது முஸ்லிமல்லாத காமன் மேன்களாக இருப்பது நெருடுகிறது. ஒருசமயம் முஸ்லிம்களில் காமன் மேன் (COMMON MAN) இருக்கக்கூடாது என்று எங்காவது சட்டம் உள்ளதோ என்னவோ?!


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தைரியமாகக் கண்டித்தும், இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட மருதநாயகம் என்ற யூசுப்கான் குறித்து படமெடுக்கப்போவதாக பிலிம்காட்டிய கமல், இடையில் நாத்திகராகி, ரங்கராஜ நம்பியாக தசாதவதாரமெடுத்து ஐம்பதாண்டுகள் திரையுலகில் கொட்டைபோட்டு சேரவேண்டிய இடத்திற்கு சரியாகச் வந்துள்ளார் எனுமளவுக்கு "உன்னைப்போல் ஒருவனில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான காவிவசனங்களை மானாவரியாக தூவியுள்ளார்.

தீவிரவாதிகளென்றால் பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதாவது ஒரு 'கான்' ஆக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபைமீறி, இதில் சொல்லப்படும் தீவிரவாதிகளெல்லாம் இந்திய முஸ்லிம்கள். படம் முக்கால்வாசி எடுத்த பிறகே காமன்மேனின் கோபத்திற்கான காரணம் சொல்லப் படவில்லை என்று உறுத்தியதோ என்னவோ பெஸ்ட் பேக்கரி படுகொலை, கற்பினிப் பெண்ணைக் கருவறுத்தது என குஜராத் பயங்கரவாதத்தையும் சேர்த்து தன்னை நடுநிலையாளராக நடிக்க முயற்சித்துள்ளார் என்றாலும் பரவலான நச்சு வசனங்களால் சாயம் வெளுத்துவிட்டது!

காமன்மேனுடன் போனில் கெஞ்சும் போலீஸ் கமிஷனர், நம்நாட்டிலுள்ள எத்தனையோ தீவிரவாதிகளை எப்படி தண்டிப்பாய்? என்று கேட்கும்போது சீட்டுக் குலுக்கிப்போட்டதில் தற்போதைக்கு இந்த நால்வரின் பெயர்களே வந்தன என்று சொல்கிறார். அத்வானி, நரேந்திரமோடி, பால்தாக்கரே, பிரவீன் தொக்காடியா முதல் பிரஞ்யாசிங் வரை நீளும் பட்டியலில் சீட்டுக்குலுக்கிப் போடாமலேயே தேர்வு செய்திருக்கலாமே என்றும் கேட்கத் தோன்றுகிறது.

குஜராத்தில் கருவருத்துக் கொல்லப்பபட்ட நான்கு மாதக் கற்பினியைக் காப்பதற்கு நாட்டில் எத்தனையோ கிருஷ்ணன்கள் இருந்தும் ஒரேயொரு கிருஷ்ணன்கூட முன்வரவில்லையே என்று நேர்மையாக ஆதங்கப்படும் காமன்மேன் கமல், தீவிரவாதிகளை முஸ்லிம்களாகவே காட்டியிருப்பது யாருடைய நிர்ப்பந்தமோ தெரியவில்லை!

சூத்திரன் கொலை செய்தால் கொன்றவனுக்கு மரணதண்டனை! பார்ப்பனன் கொலைசெய்தால் குடுமிக்கு மட்டுமே மரணதண்டனை என்று ஹேராமில் காட்டிய கமலுக்கு கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

"..................உயிருக்கு உயிர்,கண்ணுக்குக் கண்,மூக்குக்கு மூக்கு,காதுக்கு காது, பல்லுக்குப் பல்; காயங்களுக்குச் (சமமான) காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்............................................."(குர்ஆன் 005:045)

thanks to :

கருத்துகள் இல்லை: