உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் விருது, சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் என்பவர் நினைவாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை அறிவியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், வேதியியல் போன்ற பல்வேறு துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ரவீந்தரநாத் தாகூர், சர்சிவி ராமன் உள்ளிட்ட பலர் இந்த நோபல் விருதுகளை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கூட தமிழரான வெங்கட்ராமன் அவர்கள் வேதியியல் துறை சாதனைக்காக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தகுதியான விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் நிலையில், 'நெல்லுக்கு பாயும் நீர் சில நேரங்களில் புல்லுக்கும் பாயும்' என்பதைப்போல், 2009 ஆண்டு நோபல் விருது பெறுவோர் பட்டியலில் அமெரிக்கக் அதிபர் ஒபாமாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒபாமா எந்த துறையில் சாதித்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது..?
அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.இதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரக் ஒபாமா, அணு ஆயுத பரவலை சர்வதேச ரீதியில் தடுத்ததற்காகவும், சர்வதேச நாடுகள் இடையே நல்லெண்ணத்தை உருவாக்கியதர்காகவும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறதாம். அணுஆயுத பரவலை ஒபாமா தடுக்க முற்பட்டது உண்மைதான். அது எங்கே என்றால் தனது நாட்டில் அல்ல. மாறாக இரான்- இராக் போன்ற நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதாக இவரது முன்னோர் புஷ் விட்ட புரூடாவை வழிமொழிந்து அதை தடுப்பதாக காட்டிக்கொண்டார் அவ்வளவுதான். தனது நாட்டில் உள்ள அணு ஆயுதம் குறித்து இதுவரை அமேரிக்கா வாய்திறந்துள்ளதா..? புஷ் காலத்தில் இவ்வளவு அணுஆயுதங்கள் இருந்தன. அதை நான் இவ்வளவாக குறைத்துவிட்டேன் என்று ஒபாமா சொன்னாரா? சரி! அணுஆயுத பரவலை தடுக்க பாடுபட்டதனால் இவருக்கு அமைதிக்கான விருது என்றால், புஷ்ஷால் தொடங்கிவைக்கப்பட்டு இவரால் தொடர்ந்து நடத்தப்படும் போரால், இராக்கிலும், ஆப்கானிலும் மக்கள் அமைதியிழந்து, உயிரையிழந்து,உடமைகளை இழந்து, மானத்தை இழந்து, கணவனற்ற விதவைகளாக பெண்களும், தகப்பன் இல்லா அனாதைகளாக குழந்தைகளும் அமைதியிழந்து தவிக்கிறதே! இத்தகைய 'அமைதி' யை ஏற்படுத்த ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்களை ஒதுக்குவதும், ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானுக்கு இன்னும் அதிக படை அனுப்ப திட்டமிடுதலும்தான் ஒபாமா செய்த அமைதிக்கான பணியா..? அதற்காகத்தான் அவருக்கு விருதா..? எம்மக்களின் மரண ஓலம் உங்களுக்கு அமைதியாக தெரிகிறதா? எனவே ஒபாமா அமைதிக்கான நோபல் விருதை பெற எப்போது தகுதியுடையவர் ஆவார் என்றால், தனது ஆக்கிரமிப்பு படைகளை முஸ்லீம் நாடுகளில் இருந்து வெளியேற்றி விட்டு, அவரவர் நாட்டை அவரவர் சுயமாக ஆளக்கூடிய நிலையை உருவாக்கிவிட்டு பிறகு நோபல் மட்டுமல்ல உலகில் எந்தெந்த விருதுகள் உண்டோ அத்துனையையும் பெறட்டும் நாமும் வாழ்த்துவோம்-வரவேற்போம்.
மேலும், ஒபாமா நோபல் விருதுபெருவது பலதரப்பிலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. குறிப்பாக தமிழக அளவில் அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஒபாமா இதுவரை எதையும் சாதிக்கவில்லை. அவரது கொள்கைகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை உலகம் இன்னும் பார்க்கவில்லை. இது அவசரத்தில் முன்பாகவே அவருக்கு கொடுக்கப்படும் விருது என்றே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
நாம் அறிந்தவரை நோபலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் விமர்சிக்கப்படுவது ஒபாமாவாக்கத்தான் இருக்கும் என்று கருதுகிறோம். மேலும் சம்மந்தப்பட்ட ஒபாமாவே தனக்கு விருது கிடைத்தது வியப்பளிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக