சனி, 26 செப்டம்பர், 2009

உன்னைப் போல் ஒருவன்:ஒரு நடுனிலையாளனின் நியாயமான கேள்வி

இது உன்னைப் போல் ஒருவன் விமர்சனமல்ல
உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் வெளியிடப்பட்டதிலிருந்து பலதரப்பட்ட விமரிசனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில விமரிசனங்கள் அது ஒரு அப்பட்டமான இந்துத்துவா என்கிற பார்ப்பனீயத்தின் பிரச்சாரப் படம் என்றும் மற்ற சில விமர்சனங்கள் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் (மரண தண்டனை மூலம்)தண்டிக்கப்படாமல் உயிரோடுதான் இருக்கிறார்கள், அதன் காரணமாக மனம் குமுறும் ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம் என்கிறது.

நான் இன்னும் உன்னைப் போல் ஒருவனை பார்க்காததால் (இன்னும் எந்த புண்ணியவானும் இணையத்தில் ஏற்றவில்லை) அப்படத்தை என்னால் விமரிசிக்க இயலவில்லை. ஆனால் திரைப்படத்தை இணையத்தில் பலரும் அலசி கிழித்துவிட்டதால் இப்பதிவிற்கு போதிய விடயங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அது மட்டுமில்லாமல் வெட்னஸ்டே வை நான் ஏற்கனவே பார்த்திருப்பதால் இது அறிமுகமான கதைக்களம்தான்.

வெட்னஸ்டே படத்தைப் பார்த்த நடுநிலையாளர்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கே அந்தப் படத்தில் இந்துத்துவ சாயல் சற்றும் தட்டுப்படாது. அப்படம் உண்மையிலேயே ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடாகதான் இருந்தது. ஆனால் உன்னைப் போல் ஒருவன் வெட்னஸ்டேயின் கதைக்களத்தில் இருந்து தடம் மாறி சில நச்சுக் கருத்துகளை வெளிப்படுத்தும் படமாக எடுக்கப்பட்டதாகவே உணரமுடிகிறது. உதாரணமாக குஜராத் கலவரத்தில் தன் மூன்று மனைவியரில் ஒருவரை இழந்தவரிடம் ”அதுதான் மிச்சம் இரண்டு இருக்கிறதே” என்கிற குதர்க்க வசனம். அடிப்படையில் Bigamy பற்றி பேச கமலுக்கு நிச்சயமாக அருகதை கிடையாது. இதற்கு மேல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.


இஸ்லாமியர் என்றாலே நான்கு மனைவிகள் இருப்பார்கள் என்கிற ஒரு கருத்தை படம் பார்க்கும் மக்கள் மீது திணிக்கும் முயற்சியாகவே இது படுகிறது. முஸ்லிம்களிடையே பலதார மணம் என்பது வளைகுடா நாடுகளில்தான் அதுவும் செல்வந்தர்களிடம்தான் பரவலாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பலரும் சமூக பொருளாதார அளவீடுகளில் கீழ்நிலையில்தான் இருக்கிறார்கள். பிழைப்பதற்கே கடினமான சூழ்நிலையில் அவர்கள் பலதார மணம் புரிகிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. எனக்கும் பல இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோ அல்லது அவர்கள் குடும்பத்திலோ யாருக்குமே ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் முடித்ததாக நான் அறிந்தவரை இல்லை. மேலும் பதிவுலகத்திலேயே பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேர் பலதார மணம் புரிந்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?. அப்படி பலதார மணம் புரிந்த இஸ்லாமியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் இஸ்லாமிய தனிநபர் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பலதார மணம் புரியும் சலுகையை எனக்கு தெரிந்து முஸ்லிம்களை விட அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்தி நடிகர் தர்மேந்திரா, ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர் சந்தர் மோகன் போன்ற ஹிந்துக்கள்தான். இவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதற்காகவே பேருக்காக மதம் மாறியவர்கள்.

தீவிரவாதத்திற்கு தீவிரவாதம்தான் பதில் என்றால் இந்தியாவில் பல தீவிரவாத இயக்கங்கள் அதைதானே செய்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போலதான் உன்னைப்போல் ஓருவன் (வெட்னஸ்டே வில் இந்த மாதிரி வசனங்கள் இடம் பெற்றதாக எனக்கு நினைவில்லை) 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மும்பையில் பல முஸ்லிம்கள் இந்த்துத்துவா வெறியர்களால் கொல்லப்பட்டு அந்த தீவிரவாதத்திற்கு பழிவாங்கும் விதமாக 1993 மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழும் வரை இந்தியாவில் குண்டு வெடிப்புகள் காஷ்மீரில் மட்டும்தான் நிகழ்ந்ததாக நான் நாளிதழ்களில் படித்து வந்திருக்கிறேன். 1993க்கு முன் இந்தியாவில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது என யாரேனும் சொல்ல இயலுமா?

உன்னைப் போல ஒருவனில் குண்டுவைத்தவனை குண்டுவைத்துக் கொல்வதுபோல மும்பை, குஜராத், ஒரிசா கலவரங்களில் ஈடுப்பட்டவர்களையும் அவர்களை தூண்டிவிட்டவர்களையும் அதே போல பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்வாரா கமல். வெட்னஸ்டேயில் இது போன்ற காட்சிகள் இல்லை என நீங்கள் கேட்கலாம். ஆனால் கமல்தான் வெட்னஸ்டேயை அப்படியே எடுக்கவில்லையே? எடுத்திருந்தால் இத்தனை விமரிசனங்கள் எழுந்திருக்காதே!

இந்தியாவில் சிறுபாண்மையினருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கு வக்காலத்து வாங்க ஜெரிமி பெந்தாமை துணைக்கு அழைப்பவர்கள் அதே ஜெரிமி பெந்தாமின் கருத்தை மலேசியாவில் ஒடுக்கப்படுகிறோம் என்று போராடும் ஹிந்தராஃப் அமைப்பிடம் போய் சொல்வார்களா? இவர்களின் ஆதரவு இலங்கையில் தமிழர்களை இனவொழிப்புக்கு ஆட்படுத்தும் சிங்கள வெறியர்களுக்கும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சகோதரர்களில் வாயில் மலத்தை திணித்த சாதிவெறியர்களுக்கும், காவிரி பிரச்சினையின்போது பெங்களூரில் தமிழர்களில் உயிர்களை உடைமைகளையும் சூறையாடிய கன்னட வெறியர்களுக்கும் உண்டு என்றே நம்புகிறோம். ஏனென்றால் இந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அப்பகுதியின் சிறுபாண்மையினர்தான்.

இவர்களின் கருத்துபடிப் பார்த்தால் இந்தியாவில் சாதிரீதியாக பார்த்தால் பார்ப்பனர்கள்/பனியாக்கள் மைனாரிட்டி. வர்க்கரீதியாக பார்த்தால் அம்பானிகளும், டாடாவும், மிட்டலும் மைனாரிட்டி.மொழிரீதியாகப் பார்த்தால் (மத்திய அரசு உயர்பதவியில் இருக்கும்) மலையாளிகள் மைனாரிட்டி.தொழில் அடிப்படையில் பார்த்தால் பொட்டித் தட்டும் ஐ.டிக்காரர்கள் மைனாரிட்டி.

இவர்களுக்கு எல்லாம் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்கிற உணர்வு வராதபட்சத்தில் முஸ்லீம்களும் தலித்துகளும் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று நினைப்பது ஏன் என்று விளக்க முன் வருவார்களா? குறைந்தப்பட்சம் அவர்களுக்கு மும்பை, அகமதாபாத் டெல்லிப் போன்ற நகரங்களில் அவர்கள் விரும்பும் இடங்களில் வீடு வாங்கதான் உதவ முடியுமா?

படைப்பாளியின் படைப்புக்களைதான் விமரிசிக்கவேண்டும் அவர்களின் பிறப்பை வைத்து அவர்களது படைப்புகளை விமரிசிக்கச் கூடாது என்பது மிக மிக நியாயமான வாதம். இதே கருத்தை ஓவியர் எம். எஃப் ஹூசைனை அவரது சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தி அவர் இந்தியாவிற்கு திரும்ப முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளியிருக்கும் பார்ப்பனீய கிரிமினல்களிடம் போய் சொல்லிவிட்டு உடலில் காயம்படாமல் திரும்பி வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். தஸ்லீமா நஸ்ரினை நாடு கடத்திய வகாபிய கிரிமினல்களுக்கும் எம்.எஃப் ஹுசைனை நாடு கடத்திய பார்ப்பனீய கிரிமினல்களுக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. அதேபோலதான் மதத்தின் பெயரால் குண்டுவைப்பவனும் தாயின் வயிற்றிலிருந்து கருவை கிழித்தெடுத்து கொல்பவனும். இருவருமே தீவிரவாதிகள்தான். இவர்களை ஒரே தட்டில்தான் எடைப்போட வேண்டும்.

வெட்னஸ்டே யில் நான்கு பேரையுமே தீவிரவாதிகளாகதான் காட்டியிருப்பார்கள். அதனால்தானோ என்னவோ அப்படத்திற்கு அதிகமாக விமரிசனங்கள் எழவில்லை. ஆனால் உன்னைப் போல் ஒருவனில் தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்துத்துவா தீவிரவாதிகள் என தரம் பிரித்துவிட்டு அதில் ஒரு தரப்பினரை கடுமையாக கண்டித்துவிட்டு இன்னொரு தரப்பினரை பேருக்காக கண்டித்திருப்பது (சோ கலைஞரை கடுமையாக விமர்சித்து, அம்மாவை பேருக்காக விமரிப்பது போல) விமரிசனங்களை எழுப்பவே செய்யும்.
நன்றி:உறையூர்காரன்

1 கருத்து:

Barari சொன்னது…

thaslimaa nasreenai kanniya padththuvathil uraiyoorar karuththil uoor suththi avarkalukku udan paada?