செவ்வாய், 1 செப்டம்பர், 2009

ஜின்னாவின் நிறைவேறாத 2 ஆசைகள்

அல்லாஹ் பிச்சை

[ 1939-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ஜின்னா, "இந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் முஸ்லிம் லீக் நண்பர்களே! அந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் நண்பர்களே! உங்கள் முன்னால் கிடக்கும் முட்டுக்கட்டைகளைத் தூக்கி எறியுங்கள்! கட்டிக்கொண்டிருக்கும் உங்கள் கைகளை விரித்து எடுங்கள். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுங்கள். உண்மையான வெற்றி உங்களைத் தேடி வரும்'' என முழங்கினார்.]

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர் முகமது அலி ஜின்னா. அவர் இங்கிலாந்தில் படித்தவர். தாதாபாய் நௌரோஜி, சி.ஆர்.தாஸ், கோகலே, திலகர், காந்திஜி, நேருஜி, நேதாஜி, சர்தார் பட்டேல் போன்ற இந்திய தேசத்தின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். அவர் இரண்டு அழகிய மாளிகைகளை தனது அயராத முயற்சியால் எழுப்பினார்.

அவற்றில் ஒன்று மும்பை மௌண்ட் பிளசண்ட் சாலையில், தான் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட அழகிய வீடு. இன்னொன்று தனது மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும், அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவுடனும் வாழவேண்டும் என்ற லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய பாகிஸ்தான் ஆகும்.

மும்பையில் அவர் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட மாளிகை மிகவும் அழகியது. பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டது. மேல்நாட்டுப்பாணியில் நவீன வசதிகள் கொண்டது. நேர்த்தியான வராந்தாக்கள் உடையது. பரந்துவிரிந்த அழகிய மலர்த்தோட்டம் சூழ்ந்தது. இந்த அரண்மனையை வடிவமைப்பதிலும், கட்டுவதிலும், பராமரிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார் ஜின்னா.

இந்த அழகிய மாளிகையில் தான் 1944 செப்டம்பரில் காந்தி - ஜின்னா பேச்சுவார்த்தை நடந்தது. இங்கு வந்து தான் நேதாஜி, ஜின்னாவுடன் உரையாடினார். பண்டித ஜவாஹர்லால் நேரு 15-8-1946 அன்று இங்குதான், ஜின்னாவுடன் தேசவிடுதலைக்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தார். இங்கு தான் ஜின்னாவின் ஒரே குழந்தை, தீனா, 15-8-1919 அன்று பிறந்தார். இப்படி வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாளிகை இது. தான் வசிப்பதற்காகவே, அணு அணுவாகப் பார்த்துக்கட்டிய மாளிகையில், தொடர்ந்து வசிக்க முடியாமல், பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்பதற்காக கராச்சி சென்றது, ஜின்னாவின் துரதிர்ஷ்டமே!

ஜின்னா கராச்சிக்குச் சென்ற பின்பு அந்த மாளிகை பூட்டியே கிடந்தது. அதுசமயம் மும்பையில் மிக அதிகமான இட நெருக்கடி. ஆகவே வாடகைக் கட்டுப்பாடு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அந்த மாளிகையை அரசு பயன்பாட்டுக்கு எடுக்கலாமா? என மத்திய அரசை, மும்பை மாநில அரசு தொடர்ந்து வேண்டியது. செய்தி அறிந்த பண்டித நேருவோ, "ஜின்னாவின் அனுமதி இல்லாமல், எவரும் அதைத் தொடக்கூடாது'' என்றார். அத்துடன் அப்பொழுது பாகிஸ்தானில் இந்திய அரசின் தூதராகப் பணிபுரிந்த ஸ்ரீபிரகாசாவை அழைத்து, ஜின்னாவை நேரில் சந்திக்கும்படியும், அவர் அந்த மாளிகை பற்றி என்ன நினைக்கிறார், எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை அவரிடமிருந்து அறிந்து தனக்குத் தெரிவிக்குமாறு பணித்தார்.

ஸ்ரீபிரகாசா இக்கேள்வியை எழுப்பியவுடன், ஜின்னா அதிர்ச்சி அடைந்தார். "ஸ்ரீ பிரகாசா! என் இதயத்தில் அடிக்காதீர்கள்! என் இதயத்தில் அடிக்க வேண்டாம் என்று ஜவஹரிடம் சொல்லுங்கள். இதை ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்துக் கட்டியிருக்கிறேன் நான். இதுபோன்ற வீட்டில் யார் வசிக்க முடியும் தெரியுமா? எவ்வளவு நேர்த்தியான வராந்தாக்கள்? ஒரு சிறிய ஐரோப்பியக் குடும்பம் அல்லது பண்பட்ட இந்திய இளவரசர் ஒருவர் வசிக்கத் தகுந்த வீடு இது. நான் மும்பையை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. மறுபடியும் திரும்பிச் சென்று அந்த வீட்டில் வசிக்கும் காலத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்''~என்றார் ஜின்னா.

நீங்கள் மறுபடியும் மும்பைக்குச் சென்று வசிக்க விரும்புகிறீர்கள் என்பதை நான் எனது பிரதமர் (நேருஜி) இடம் சொல்லலாமா? என ஸ்ரீபிரகாசா கேட்க, அதற்கு ஜின்னா "ஆம்! நிச்சயமாகச் சொல்லலாம்'' என்றார். இவ்விவரம் பிரதமர் நேருஜிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரோ "ஜின்னாவின் மனதை நான் அறிவேன்; அவ்வீட்டில் எவரும் கைவைக்கக் கூடாது. ஜின்னாவின் பதில் வரும் வரை காத்திருப்போம்'' என்றார். இது ஜின்னாவுக்கு ஸ்ரீபிரகாசாவால் தெரிவிக்கப்பட்டது.

ஜின்னா, இறுதியாக 16-8-1948 அன்று ஸ்ரீபிரகாசாவுக்குப் பதில் எழுதுகிறார். "இவ்விஷயத்தில் ஜவாஹர்லாலும், நீங்களும் மிகவும் கனிவோடும் கவனத்தோடும் நடந்தமைக்கு நன்றி. இவ்வீட்டை அமெரிக்க அரசின் தூதுவர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடலாம். அவர்கள் வெள்ளையர்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் வீட்டைக் கவனமுடன் பாதுகாப்பார்கள் என்பதால்தான்'' என்று.

அவர் கடிதம் எழுதியது 16-8-1948 அன்று. ஆனால் அதற்கு அடுத்த 1 மாதத்திற்குள்ளாக 11-9-1948 அன்று மறைந்துவிட்டார்!

''என் இறுதிக்காலத்தில் மும்பைக்குச் செல்வேன். நான் ஆசையுடன் கட்டிய அந்த அழகிய மாளிகையில் வசிப்பேன்! இதை என் அன்புக்குரிய ஜவாஹர்லாலிடம் சொல்லுங்கள்'' என்றார் ஜின்னா. மும்பையின் அந்த அழகிய வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஜின்னாவின் முதல் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது!

ஜின்னா எழுப்பிய இரண்டாவது மாளிகை, இந்தியாவை உடைத்து பாகிஸ்தானை உருவாக்கியது. இதன் மூலம் அவரைப் பிரிவினைவாதி என்றும், பிடிவாதக்காரர் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாதி என்றும் இந்தியர்கள் குறை சொல்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாதவர். காங்கிரஸோடு சமரசம் செய்வதிலேயே காலம் கடத்தியவர். இஸ்லாமியர் நலனில் அக்கறை காட்டாதவர் - என்று பாகிஸ்தானியர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆங்கிலேயருக்கு அனுசரணையாகச் செயல்படவில்லையே. காங்கிரûஸ எதிர்ப்பதில் கடுமை காட்டவில்லையே~ என்று அன்றைய ஆங்கிலேய அரசு குறைபட்டுக் கொண்டது.

இப்படி அனைத்துத் தரப்பினரின் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டவர்தான் ஜின்னா. ஆனால் உண்மையில் அவர் ஒரு தேசியவாதி. சமயச்சார்பற்றவர். ஒன்றுபட்ட இந்தியாவைப் பாதுகாக்க நினைத்தவர்.

ஒரு வலுவான தேசியவாதியாக, உண்மையான காங்கிரஸ்காரராகத் தான் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் ஜின்னா. காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார் அவர். "நான் முதலில் இந்தியன். அதன் பிறகுதான் நான் இஸ்லாமியன்'' எனக் கருதினார்.

கோகலேயின் ஆலோசனைப்படிதான் ஜின்னா முஸ்லிம் லீகில் சேர்ந்தார். அடிப்படை மதவாதிகளிடமிருந்தும், ஆங்கிலேயர்களின் அரவணைப்பிலிருந்தும், முஸ்லிம் லீகைக் காப்பாற்றி காங்கிர
úôடு நல்லுறவை வளர்க்க வேண்டும் என்பதுதான் அவர் முஸ்லிம் லீகில் சேர்ந்ததன் நோக்கம்.

ரஹமத் அலியின் பாகிஸ்தான் பிரிவினைத்திட்டத்தை அவர் ஏளனம் செய்தார். இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அப்துல்லா ஹரூன் 1938-ல் முஸ்லிம் லீக் மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவாக அப்துஸ் சத்தார் கைரி, அப்துல் மஜீத் சிந்தி ஆகியோர் கொண்டு வந்த தீர்மானங்களைத் தனது வாதத் திறமையால் தோற்கடித்தார்.

1939-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ஜின்னா, ""இந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் முஸ்லிம் லீக் நண்பர்களே! அந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் நண்பர்களே! உங்கள் முன்னால் கிடக்கும் முட்டுக்கட்டைகளைத் தூக்கி எறியுங்கள்! கட்டிக்கொண்டிருக்கும் உங்கள் கைகளை விரித்து எடுங்கள். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுங்கள். உண்மையான வெற்றி உங்களைத் தேடி வரும்'' என முழங்கினார்.

இப்படி இந்திய தேச ஒற்றுமை பற்றிப் பேசிய ஜின்னா, 1940 ஜனவரி முதல் பிரிவினைப் பாதையில் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார் என்பது, ஜின்னாவின் இந்தியா பாகிஸ்தானின், சோக வரலாறாக முடிந்தது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? தேச விடுதலைக்கான பேச்சுவார்த்தையில், தான் ஓரம் கட்டப்படுவதாக அவர் நினைத்தார்; தேச மக்கள் அனைவரின் சார்பாகவும் பேசும் உரிமையும், தகுதியும் காங்கிரஸýக்கு மட்டுமே இருப்பதாக ஆங்கிலேய அரசு சொல்வதை அவர் ஏற்க மறுத்தார்.

இஸ்லாமியர்கள் சார்பாகப் பேசுவதற்குத் தனக்கு மட்டுமே தகுதி உண்டு; தன்னை மட்டுமே அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினார். இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறுவதற்காகவும், அவர்களின் ஒரே பிரதிநிதி தான்தான் என்பதை நிலைநாட்டுவதற்காகவும், ஜின்னா முதல்முறையாக மதத்தை (இஸ்லாம்) முன்வைத்துப் பேசத் தொடங்கினார். அவருக்கு ஆதரவு வளரத் தொடங்கியது.

காங்கிரஸ் ஜின்னாவை மதிப்பதற்கும், பிரிட்டிஷார் ஜின்னாவுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் இந்த உத்தி பயன்பட்டது. ""அவரது உள்ளார்ந்த உண்மையான நோக்கம் பிரிவினை அல்ல; இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை முஸ்லிம் லீக் ஆட்சி செய்ய வேண்டும்; ஒன்றுபட்ட இந்திய ஆட்சியில், ஜின்னாவுக்கு ஒரு முக்கிய பொருத்தமான பதவி வழங்கப்பட வேண்டும்'' என்பதுதான். அவரது உள்நோக்கத்தை அவரால் செயல்படுத்த முடியவில்லை.

முதல் சுதந்திர தினப் பேருரையில் "காலப் போக்கில் இங்கே வாழும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அரசியல் பொருளாதார ரீதியில், இந்துக்களாக அல்லது இஸ்லாமியர்களாக இருக்க மாட்டார்கள்; இத்தேசத்தின் குடிமக்களாகத்தான் இருப்பார்கள்'' என்றார் ஜின்னா. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக பாகிஸ்தானை உருவாக்க முடியவில்லையே என ஏங்கினார்; மனவேதனைப்பட்டார்; நோய்வாய்ப்பட்டார்; அதன்பின்பு அவர் நீண்டநாள் வாழவும் இல்லை. இவ்வாறு சமயச் சார்பற்ற ஜனநாயக நாடாக பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற ஜின்னாவின் கனவும் நிறைவேறாமல் போய்விட்டது.

இறுதிக் காலத்தில் ஜின்னா மனவேதனையால் துன்புற்றபோது, துயரத்தோடு அவர் கூறுகிறார்: "பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம் நான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டேன். தில்லிக்குத் திரும்பிச் சென்று கடந்த காலத்தில் நடந்த தவறுகளை மறந்து, மன்னித்து, மீண்டும் சகோதரர்களாக இருப்போம் என்று ஜவாஹர்லாலிடம் கூற விரும்புகிறேன்''~என்று.

இப்படி மும்பையில் தான் கட்டிய அழகிய மாளிகையில் இறுதிக் காலத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறவில்லை; பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக அமைக்க வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறவில்லை! இப்படி தான் நினைத்ததை நிறைவேற்ற முடியாத மனிதராகவே ஜின்னா மறைந்தார்.

ஆனாலும் நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மிகப்பெரிய தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை மறுக்க இயலாது.

நன்றி: தினமணி

[NEWS TODAY - டெல்லியில் 15வது புத்தக விழாவை மத்திய கம்பெனி விவகாரத்துறை இணை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதைத் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 6ம் தேதி வரை நடக்கும் இப் புத்தக விழாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜஸ்வந்த் சிங்கின் ''Jinnah-India, Partition, Independence'' வாதம் என்ற நூலை வாங்க வாசகர்களிடையே பெரும் ஆர்வம் காட்டுவதாக புத்தக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ]

கருத்துகள் இல்லை: