வியாழன், 10 செப்டம்பர், 2009

துபாய் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கியது











துபாய்: 2800 கோடி செலவில் 4 வருடமா நடைபெற்ற பணி பூர்த்தியான நிலையில் அரபு நாடுகளில் முதன்முதலாக ட்ரைவர் இல்லாத மெட்ரோ சர்வீஸ் நேற்று இரவு (செப்.09/09) துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பச்சைகொடி காண்பித்து துவங்கி வைத்தார்.








ஷேக் செய்யத் சாலையிலிலுள்ள மால் ஆஃப் எமிரேட்ஸில் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஷேஹ் முஹம்மது மெட்ரோ ரெயிலை பொதுமக்களுக்காக திறந்துக்கொடுத்தார்.

நாளை காலை முதல் பயணிகளுக்காக மெட்ரோவின் கதவுகள் திறக்கும். பணிகள் நிறைவடைந்த 10 ஸ்டேசன்களில் ரெயில் ஓடும். துபாய் சர்வதேச விமானநிலையத்தின் அருகிலிலுள்ள ராஷிதியா ஸ்டேஷனிலிருந்து ஜெபல் அலி வரையிலான ரெட்லைனிற்கு 52 கி.மீ நீளம். இந்தவழியில் 19 ஸ்டேசன்களின் பணி பிப்ரவரியில் முடிவடையும்.

மிட்சுபிஷிஹெவி இண்டஸ்ட்ரீஸ், ஒபயாஸி, கஜிமா கார்ப்பரேஷன், யாபி மார்க்கஸி, மிட்சுபிஸி ரெயில்வே உள்ளிட்ட உலகின் பிரபல 5 கம்பெனிகளும், 150 சிறிய கட்டுமான கம்பெனிகளும், 30 ஆயிரம் தொழிலாளர்களும் இணைந்து சாதனை வேகத்தில் துபாய் மெட்ரோவை பூர்த்தியாக்கியுள்ளனர்.

கிஸைஸ் முதல் துபாய் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்களை சுற்றி ஜித்தாஃபில் முடிவடையும் கிரீன் லைன் மார்ச் மாதத்தில் பயணிகளுக்காக திறக்கப்படும். ஒரு மணிநேரத்தில் 6 ரெயில்களில் 3858 பயணிகளுக்கு தற்ப்போது பயணம் மேற்க்கொள்ளலாம். வி.ஐ.பி, சாதாரண நபர்கள், பெண்கள் குழந்தைகள் என 3 விதமான வகுப்புகள் துபாய் மெட்ரோவில் உள்ளது. தற்ப்போது 6 லட்சம் பேருக்கு தினமும் பயணம் செய்ய இயலும்.

2020 முதல் இது 18 லட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் 17 சதவீதம் குறையுமென்றும் கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் 1.7 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணத்திற்காக இந்தியர்கள் பலரும் பெருநாள் விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.