ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சர்ச் அனாதை இல்லத்தில் 2 பெண்கள் கற்பழிப்பு- பாதிரியார் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சர்ச் வளாகத்தில் உள்ள அனாதை இல்லத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கற்பழித்த குற்றத்திற்காக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தில் சத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அனாதை இல்லம் உள்ளது. இதை சாது இமானுவேல் என்ற பாதிரியார் நடத்தி வந்தார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் முன்பு வசித்து வந்தவர் கீதா. இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இல்லத்தை விட்டு வெளியேறினார். பாதிரியார் சாது இமானுவேல் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்டதால் கீதா வெளியேறியதாக தெரிகிறது.

இருப்பினும் அவ்வப்போது இங்கு வந்து இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்குவது கீதாவின் வழக்கம்.

அதுபோல சமீபத்தில் அவர் வந்தபோது அவரை அணுகிய இரண்டு பெண்கள், தங்களை பாதிரியார் இமானுவேல் பாலியல் ரீதியாக மிகுந்த தொந்தரவுகள் செய்து வருவதாகவும், இருவரையும் அவர் கற்பழித்து விட்டதாகவும் கூறி கதறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கீதா, உடனடியாக ஜஸ்ட் டிரஸ்ட் என்ற என்ஜிஓ அமைப்பைத் தொடர்பு கொண்டார்.

அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

மாவட்ட எஸ்.பி. சாரங்கனிடம் புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இல்லத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பாதிரியாரைக் கைது செய்தனர்.

மேலும் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி. சாரங்கன் கூறுகையில், சாது இமானுவேல் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

மேலும் அதில் ஒரு பெண்ணை ஆறு மாதங்களுக்கு முன்பு செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்துள்ளார்.

தனது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத போது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இல்லத்தில் உள்ள பெண்களை ஈடுபடுத்தி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வது அவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சர்ச்சுக்குள்ளும் கூட இந்த மாதிரியான வேலைகளை அவர் செய்து வந்துள்ளார்.

அந்த இல்லத்தில் தங்கியிருந்த எட்டு இளம் பெண்கள் மற்றும் 2 சிறுவர்களை மீட்டுள்ளோம்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்த சர்ச்சையும், அறக்கட்டளையையும் அவர் நடத்தி வருகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

கற்பழிப்புப் புகார் கொடுத்த இரு பெண்களும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனாதை இல்லம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: