வியாழன், 17 செப்டம்பர், 2009

நோன்பு பெருநாள் - ஈகைத் திருநாள்!

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.


நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள்.
அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை.
அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள்.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

கருத்துகள் இல்லை: