செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஜின்னா விவகாரம் - பெரியாருக்கு முரண்படும் கலைஞர்



-செந்தமிழ்ச்செல்வன்

இந்திய அரசியல் தலைவர்களில் மிக மூத்தவரான கலைஞர் கருணாநிதி, ஜின்னாவைப் பற்றி புதிய சர்ச்சைக் கிளப்பியிருக்கிறார். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பொதுவாழ்வில் உள்ள மிகச் சொற்பமான தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதி, வார்த்தை அழகுக்காக உண்மைகளை ஊமையாக்குவது வேதனைக்குரியது.

கேள்வியும் அவர் அளித்த பதிலும்
கேள்வி: ''ஜின்னாவைப் பற்றி முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதே?
பதில்: ''அப்போது நாட்டின் பிரிவி னைக்கு வித்திட்டார். இப்போது பாரதீய ஜனதா பிரிவினைக்கு வித்திட்டுள்ளார்''.

நாட்டுப் பிரிவினைக்கு ஜின்னா வித்திட்டார் என்பது இந்து மகாசபை, ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகிய மதவாத இயக்கங்கள் பரப்பிவிட்ட அவதூறு.
பெரியாரின் பெருந்தொண்டனாக தன்னைக் கூறும் முதலமைச்சர் கருணாநிதி, அதே கூற்றை எதிரொலிப்பது சரியா?

ஏற்கனவே அவதூறு கூறியவர்களில் சிலரே திருந்தி உண்மைகளைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் போது, பழைய பொய்யை பகுத்தறிவாளர் பரப்புவது சரியா?

பெரியார் திராவிடர் கழகம் 2001ம் ஆண்டில், பொள்ளாச்சியில் நடத்திய மாநில மாநாட்டில் சிறப்புரையாற்றிய திமுகவின் வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன், நாட்டுப் பிரிவி னைக்கு ஜின்னா காரணமில்லை என்பதற்கு சரஞ்சரமாகச் சான்றுகளைத் தந்தார். அதில் ஒன்று,

''கவிஞர் இக்பால், முஸ்லிம்களுக்காக ஒரு தனி தேசம் தேவை என்று கூறு கிறாரே என்று ஜின்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்க, 'ஒன்றுபட்ட இந்தியா' என்பதில் உறுதியாக இருந்த ஜின்னா, Don't you know poets are dreamers?' கவிஞர்கள் கனாக்காரர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? என்று பதிலுக்கு கேட்டாராம்.

கட்சிப் பேச்சாளருக்குத் தெரிந்த செய்தி கலைஞருக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் வார்த்தைகயாடுகிறாரா தெரியவில்லை.
'வித்திடுதல்' என்றால் முதன்முதலாக ஒரு கருத்தை விதைத்தல் என்று பொருள். நாட்டுப் பிரிவினை என்ற கருத்தை முதலில் விதைத்தவர்கள் யார்?
ஜின்னா அல்ல. அன்றைய இந்து மகாசபைத் தலைவர்கள்தான்.

1933ல் இந்து மகாசபை தலைவராக இருந்த பாய்பரமானந்தர், பிரிட்டிஷ் இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என முதன்முதலில் சொன்னவர்களில் முதன்மையானவர்.

''இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ் தான் முதலியவற்றோடு இணைந்து ஒரு மாபெரும் 'முஸல்மான் பேரரசு' உருவாக் கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கு வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள் அங்கு போய்விட வேண்டும்'' என்றார்.இந்த யோசனை 1905ம் ஆண்டி லேயே தனக்கு உதித்துவிட்டதாக பாய் பரமானந்தர் கூறினார்.

1937ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போதைய இந்து மகாசபை தலைவர் சாவர்க்கர், ''இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம், மற்றது இஸ்லாமியரின் தேசம்'' என்றார்.

இப்போது சொல்லுங்கள். தேசப் பிரிவினைக்கு வித்திட்டது யார்? இரட்டை தேசக் கோட்பாட்டை (Two Nation theory) கண்டுபிடித்தது யார்?

ஜின்னா மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்
1. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம் களுக்கு மூன்றில் ஒரு பங்கு பிரதி நிதித்துவம்,
2. பஞ்சாப் மற்றும் வங்கத்தில் முஸ்லிம் களுக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்,
3. சிந்து, பலுசிஸ்தான் மற்றும் வட மேற்கு எல்லை மாகாணம் என மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங் களை உருவாக்குதல்.

ஜின்னா முன்வைத்த கோரிக்கைகள் திராவிட இயக்கத்தின் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையைக் கொண்டவை.எனவே, ஜின்னாவின் திட்டத்தை அறிவு ததும்பும் திட்டம் என தந்தை பெரியார் பாராட்டினார். அண்ணாவுடன் சென்று ஜின்னாவை சந்தித்தும் பேசினார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் ஜின்னாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர்.
தேஜ் பகதூர் சப்ரு போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் மாநாட்டில் வெளிப் படையாகவே ஜின்னாவின் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். (பேரா. அ. மார்க்ஸின் 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' நூலில் விரிவான விவரங்கள் உள்ளன).

இந்து மகாசபைத் தலைவர்களும், காங்கிரஸில் ஊடுருவியிருந்த இந்துத்துவாவாதிகளும் அன்று செய்த சதிதான் தேசப் பிரிவினை.இன்றும் இறந்து போன ஜின்னா வந்து பாஜகவை சின்னாபின்னமாக்கவில்லை. அங்குள்ள பல கோஷ்டியினர் ஜின்னாவைக் கருவியாக்கி, கதை நடத்துகிறார்கள் அவ்வளவே.டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள், நகைச்சுவைக்காக ஜின்னா பாஜகவைப் பிரித்து விட்டார் என்று எழுதின.

மாநில முதலமைச்சர், இந்தியாவின் மூத்த தலைவர், இப்படிக் கூறலாமா?

கருத்துகள் இல்லை: