புதன், 2 செப்டம்பர், 2009

ஜஸ்வந்த் நூலுக்குத் தடை - குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஜஸ்வந்த் சிங் நூலுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜின்னா குறித்து ஜஸ்வந்த் சிங் எழுதிய சர்ச்சை நூலை குஜராத் அரசு தடை செய்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலை ஜஸ்வந்த் சிங் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்திருப்பதாகவும் குஜராத் அரசு கூறியுள்ளது.

இந்தத் தடையை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜஸ்வந்த் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது ..

அவசர கோலத்தில், முறையான அறிவிப்பு ஏதும் இல்லாமல் நூலைத் தடை செய்துள்ளதன் மூலம் அடிப்படை பேச்சுரிமையை குஜராத் அரசு தடுத்துள்ளது.

இந்த தடை சட்டவிரோதமானதாகும். வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஐந்து வருட கால ஆய்வுக்குப் பின்னர் இந்த நூலை எழுதியுள்ளேன்.

நூலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையின் மூலம் சிந்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சாத்தானிக் வெர்சஸ் நூலுக்கு தடை விதித்த செயலுடன் இதை ஒப்பிடலாம் என்று கூறியிருந்தார் ஜஸ்வந்த் சிங்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குஜராத் அரசு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜஸ்வந்த் சிங் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பாலி நாரிமன், சோலி சோரப்ஜி ஆகியோர் ஆஜரானார்கள்

கருத்துகள் இல்லை: