மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் அ. மார்க்ஸ், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் கோ. சுகுமாரன், திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர் த. கந்தசாமி, மனித உரிமை ஆர்வலர் மு. சிவகுருநாதன், புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ம. இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு புதன்கிழமை முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை நேரில் ஆய்வு செய்தது.
பின்னர், இக் குழு திருவாரூரில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முத்துப்பேட்டையில் கடந்த 15 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே மோதல், பதற்றம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விநாயகர் ஊர்வலம் முஸ்லிம்கள் வசிக்காத மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, பிரச்னைக்குரிய பேட்டை பெரிய பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பட்டுக்கோட்டை சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது. இது, நீதிமன்றத்தின் ஆணைக்கும் அதன் நோக்கத்துக்கும் புறம்பானது.
உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்து அமைப்பினர் ஒரு கட்டத்தில் மாற்றுப் பாதைக்கு ஒப்புக் கொண்டதாகவும், ஊர்வலத்தை ஒத்திவைப்பதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தும், இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் முத்துப்பேட்டைக்கு வந்து ஊர்வலத்தை நடத்த வலியுறுத்தியதும் எங்களது ஆய்வில் தெரிய வந்தது. இத்தகைய பதற்றம் நிறைந்த சூழலில் ராம. கோபாலனை முத்துப்பேட்டைக்குள் காவல் துறை அனுமதித்தது கண்டிக்கத்தக்கது.
ஊர்வலத்தை இருள் சூழ்வதற்குள் முடிக்க நிர்பந்திக்காமல், இரவு 8 மணி வரை முஸ்லிம் தெருக்கள் வழியாகச் செல்வதற்கு அனுமதி அளித்தது பதற்றத்துக்கு மேலும் வழிவகுத்தது. இது நிர்வாகத்தின் கவனக்குறைவையே காட்டுகிறது.
எனினும், 15 ஆண்டு காலமாக ஊர்வலம் சென்ற பேட்டை பகுதி வழியாக ஊர்வலம் செல்வது தற்போது தடுக்கப்பட்டுள்ளது வரவேற்கக்தக்கது. அதே சமயம், இந்த பிரச்னையில் அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தொடர்பு இல்லாதது போல் ஒதுங்கியிருப்பது வருந்தத்தக்கது.
இந்த பிரச்னையில் சட்ட வழிகளை ஆராய்ந்து, நீதிமன்றத்தை நாடுவது குறித்து உரிய ஆலோசனைகளை உண்மை அறியும் குழு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக