ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லதல்ல... தமுமுக தலைவர் உரை.


மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாட்டில் தமுமுக தலைவர் உரை.

சென்னை : "பண்புள்ளவர்கள் அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது, நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நல்லொழுக்கம் உள்ளவர்களும் அரசியலுக்கு வந்து, மக்கள் சேவை ஆற்ற முடியும் என்பதை நிலைநாட்டவே மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்படுகிறது,'' என்று, மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழாவில் த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் எம்.ஹேச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசியதாவது.


தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று நடந்த மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாட்டில் த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் டாக்டர் MH ஜவாஹிருல்லா அவர்கள் பேசியதாவது:


தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசியக் கட்சிகள், 55 மாநிலக் கட்சிகள், 827 பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன.நாள்தோறும் தேர்தல் ஆணையத்திற்குப் புதிதாகப் பதிவு செய்வதற்காக இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வருவதாக அறியப்படுகிறது. நாட்டில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லாத நிலையில், புதிதாக மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உள்ளது. நமது மக்கள் இன்னும் பல தளங்களில் சுதந்திரத்தைப் பறிகொடுத்த நிலையில் உள்ளனர். தற்போதைய பார்லிமென்டில் உள்ள 522 உறுப்பினர்களில் 120 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்களில் 40 பேர் மீது கொலை, பாலியல் பலாத் காரம் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நல்லவர்கள், நல்ல பண்புள்ளவர்கள் அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கியே இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இது, நமது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நல்லொழுக்கமுள்ளவர்களும் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும்; ஆற்ற முடியும் என்பதை நிலைநாட்டவே மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் மக்களில் 45 கோடி பேர், அதாவது, மக்கள் தொகையில் 41.6 சதவீதம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் வதாக உலக வங்கி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலகில் உள்ள ஏழை மக்களில் 33 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், அதிக வருமானம் உடையவர்களில் முதல் 10 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்தை அனுபவித்து வருகின்றனர்.நமது நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வருவாய் நாளொன்றுக்கு 20 ரூபாயைத் தாண்டவில்லை. இந்த அவல நிலையை நீக்க, ஏழை எளிய மக்களின் தேவைகள், சட்டமியற்றும் அவைகளில் வலிமையாக ஒலிப்பதற்காகத் தான் மனிதநேய மக்கள் கட்சி உதயமாகிறது.நமது நாட்டு அரசு மக்களுக்குச் செய்யும் செலவில் ஒரு ரூபாய்க்கு வெறும் 15 பைசா மட்டுமே அடித்தட்டு மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறிப்பிட்டார்.

காந்தியடிகள், "இந்த உலகில் எல்லாருக்கும் தேவையானது போதுமான அளவு உள்ளது. ஆனால், பேராசைக்கு அளவே இல்லை' என்று குறிப் பிட்டார்.லஞ்சம் புற்றுநோய் போல் ஒரு சமுதாயத்தை வீழ்த்தி விடும். லஞ்சம் வாங்குபவர் அதைக் கொடுப்பவர் மற்றும் அதற்கு வழிவகுப்பவர் ஆகியோரை இறைவன் சபிப்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நமது நாடு, கல்வி, காவல், நீதித்துறை, சுகாதாரம் உள்ளிட்ட மக்களுக்குச் சேவை செய்யும் அரசுத் துறைகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு லஞ்சத்தின் அளவு 21 ஆயிரத்து 68 கோடி ரூபாய் என்று இருப்பதாக, "டிரான்ஸ்பரன்சி இண்டர் நேஷனல்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த அவலப் போக்கை தலைகீழாக மாற்றி, லஞ்ச லாவண்யமற்ற இந்தியாவை உருவாக்குவதற்காகத் தான் மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் எம். ‍ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

கருத்துகள் இல்லை: