புதன், 4 பிப்ரவரி, 2009

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பற்றிய விபரக் குறிப்பு!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கவிருக்கும் பி. அப்துல் சமது அவர்கள் காஞ்சி மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர். 39 வயது நிரம்பிய அப்துல் சமது பருவ வயதலிருந்தே பொது வாழ்வில் ஈடுபட்டவர். அப்துல் சமது, பழனிபாபா அவர்களின் சுண்டியிழுக்கும் பேச்சால் கவரப்பட்டார். அவரது தலைமையிலான ஜிஹாத் அமைப்பில் நண்பர்களோடு இணைந்து பணியாற்றியதன் மூலம் நேரடி சமுதாயப் பணியில் குதித்தார். நாளடைவில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் சூறாவளியாய் வீச, அதில் தீவிரம் கொண்டபோது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொடக்கம் அவரது தேடலுக்கு களமாய் அமைந்தது.


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது பொருளாளர் மற்றும் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது (வலமிருந்து இடம்)


புதுப்பட்டினம் கிளை பொறுப்பாளர், காஞ்சி மாவட்ட செயலாளர், காஞ்சி மாவட்டத் தலைவர் என பணியாற்றி மாநில தொழிலாளர் அணியின் செயலாளராகவும் பணியாற்றினார். ஜூன் 2006 முதல் அவர் மாநிலச் செயலாளராகவும் பொறுப்பேற்று பணி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருளாளராக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். இளையான்குடி ஜாஹிர் உசேன் கல்லூரியில் எம்.காம். படித்த ஹாருண் ரஷீது, இளையான் குடியில் 1995ல் தமுமுக தொடங்கப்பட காரணமானவர்களில் ஒருவராக இருந்தார். இளையான்குடி நகர செயலாளராக பணிபுரிந்தவர், குடும்பத்தோடு சென்னையில் குடியேறியதும் முழுநேர இயக்கப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


மாணவரணியின் மாநில துணைச் செயலாளர், அதன் மாநில பொருளாளர் பதவிகளை வகித்த அவர், மாநில மருத்துவ சேவை அணியின் செயலாளராகவும் பணியாற்றினார். செப்டம்பர் 2007 முதல் மாநில துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். தற்போது 35 வயதைப் பூர்த்தி செய்திருக்கும் ஹாருண் ரஷீது கணக்கியல் கம்பெனி ஒன்றையும், 'இளையான்குடியான் மடல்' என்ற மாத பத்திரிகையையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாஹிர் உசேன் கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக 2005 முதல் 2008 வரை மூன்றாண்டுகள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: