ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

முஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த மோடியின் இன்னொரு முகமூடி


அகமதாபாத்: முஸ்லீம்களின் வெறுப்பு வளையத்திலிருந்து பாஜகவையும், தன்னையும் மீட்டு வெளியே கொண்டு வரும் புதிய தந்திரமாக, குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரியை முதல்வர் நரேந்திர மோடி நியமித்துள்ளதாக கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த சபீர் கந்தவாவாலா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உருவான 50 ஆண்டுகளில் முஸ்லீம் அதிகாரி ஒருவர் டிஜிபி பதவிக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு இருந்து வந்த டிஜிபி பி.சி.பாண்டேவுக்குப் பதில் சபீர் புதிய டிஜிபியாகியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இந்த பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபி பதவிக்கு மோடி கொண்டு வந்திருப்பது, பாஜக மற்றும் மோடி ஆகியோருக்கு முஸ்லீம் மக்களிடையே நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் தந்திரமாகவே கருதப்படுகிறது.

அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மோடியின் இந்த நியமனம் ஒரு அரசியல் மற்றும் மத ஸ்டண்ட் ஆகவே கருதப்படுகிறது.

சபீர், ஷியா முஸ்லீம் சமுதாயத்தின் தாவூதி போஹ்ரா பிரிவைச் சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பல ஆண்டுகளாகவே மோடிக்கு ஆதரவாக உள்ளவர்கள்.

1973ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான சபீர், கோத்ரா வன்முறை தொடர்பான வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2007ம் ஆண்டே இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை மாநில அரசு நிராகரித்து விட்டது.

கடந்த வாரம்தான் டிஜிபி அந்தஸ்துக்கு சபீர் உயர்த்ப்பட்டார். ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் சபீரை டிஜிபியாக்கியிருக்கும் சமயம்தான் மோடி மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.

மாயா சர்ச்சையிலிருந்து மீளும் முயற்சி ...

காரணம், மோடி அமைச்சரவையில், மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக உள்ள மாயா கோட்னானியால் ஏற்பட்டுள்ள களங்கத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே சபீரின் நியமனத்தை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.

2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது மாயா கோத்னானி நடந்து கொண்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை உள்ளது. அப்போது நடந்த கலவரத்தில் மாயா மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையிலும் உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார் மாயா. இதையடுத்து பி்ப்ரவரி 2ம் தேதி இவரை தலைமறைவு குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்க்பட்ட சிறப்பு புலனாய்வுப் படை அறிவித்தது.

மாயா மீதான வழக்கு என்ன?

2002ம் ஆண்டு நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின்போது நரோடா பாடியா பகுதியில் ஒரு கும்பல் அங்கிருந்த முஸ்லீம்களைத் தாக்கியது.

அப்போது அங்கு நடந்த வன்முறையைத் தூண்டி அரங்கேற்றியவர் மாயா கோத்னானி என்பது சிறப்புப் புலனாய்வுப் படையின் குற்றச்சாட்டு.

அது மட்டுமல்லாது கண்ணில் படுபவர்களையெல்லாம் கொல்லுமாறும், பொருட்களை சூறையாடுமாறும், பெண்களைக் கற்பழிக்குமாறும் வன்முறைக் கும்பலுக்கு மாயா உத்தரவிட்டார் என்பதுதான் மிக மிக முக்கியமான குற்றச்சாட்டு.

மாயாவுடன், வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் படேலும் என்பவரும் இணைந்து இந்த வன் கொடுமையை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நரோடா பாடியா பகுதியில் நடந்த வன்முறையில் மட்டும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த 106 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.

இந்த கொடுமையான வன்முறையை நேரில் பார்த்த சாட்சிகளி்ல் ஒருவரான ஷெரீப் மாலிக் என்பவர் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில், மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோர்தான் அந்த வன்முறைக் கும்பலுக்கு நேரடியாக தலைமை தாங்கி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அவர்கள்தான் அந்தக் கும்பலை கொலை செய்யவும், பொருட்களை சூறையாடவும், கற்பழிக்கவும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர்.

வன்முறைக் கும்பலிடம் தனது வண்டியில் வைத்திருந்த மண்ணெண்ணை கேன்களை எடுத்துக் கொடுத்து தீவைத்துக் கொளுத்துமாறு உத்தரவிட்டார் மாயா என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட மாயா நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல்இருந்து வந்தார். ஜனவரி 19 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையின்போதும் அவர் சம்மன் அனுப்பியும் வரவில்லை.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.

இதையடுத்து மாயா தலைமறைவாகி விட்டார். பின்னர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.

தேடப்படும் குற்றவாளியாக மாயா அறிவிக்கப்பட்டதும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என மோடிக்கு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவரோ அதை நிராகரித்து விட்டார். மாயாவும், நான் அப்பாவி, ராஜினாமா செய்ய மாட்டேன் என்று விட்டார்.

கொடும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு, முன்ஜாமீனும் மாயாவுக்குக் கிடைத்ததால் கோத்ரா வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் பெரும் கொதிப்பும்,அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபியாக்கியுள்ளார் மோடி. எனவே இந்த நியமனம் முற்றிலும் அரசியல் சாயம் கொண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை ஐஸ் வைக்கும் செயல் என குஜராத் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த முயலும் மோடியின் இன்னொரு முகமூடிதான் இந்த டிஜிபி நியமனம் என்றும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: