இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகடாக்டர் ராமதாஸ் அபாண்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என்றும் குறிப்பிட்டு அந்த பேட்டி முக்கியமான நாளிதழ்களில் முக்கியதுவத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.
ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.
அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்.
தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.
நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.
அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
- காயல் மகபூப்.
மாநில செயலாளர்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக