முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி புது தில்லியில் இந்திய இஸ்லாமிய மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய மாநாடு. இதில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சையது சகாபுதீன் உரையாற்றுகிறார்.
புது தில்லி, பிப். 1: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறைந்தது 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலித்துகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.
"முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுக் குழு' சார்பில் தில்லியில் இட ஒதுக்கீடுக்கான தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முஸ்லிம் மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் சிறுபான்மையின மதத்தினர் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் தொடர்பான நீதிபதி மிஸ்ரா கமிஷன் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மிஸ்ரா கமிஷன் அடிப்படையாக பரிந்துரைத்துள்ளது. அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
இட ஒதுக்கீடில் உள்ள 50 சதவீதம் என்ற உச்ச வரம்பை நீக்குவதற்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றதை நாடவேண்டும் என்று மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடை அமல்படுத்தும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்ற முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
"கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பதை வரவேற்ற லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பாஸ்வான், 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற உச்சவரம்பை நீக்கவேண்டும்' என்றார்.
"ஒதுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோருகிறோம். ராணுவம், நீதித்துறை, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சையது சகாபுதீன் வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அகமதி கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் தேவவிரத பிஸ்வாஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
thanks to : http://adiraipost.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக