செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

மனிதநேய மக்கள் கட்சி 7ம் தேதி தாம்பரத்தில் துவக்கம்




சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவக்கப்படுகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.

இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில்,

தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்படும். துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.

கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை 2007-ம் ஆண்டே சமர்ப்பிக்கப்பட்டும் இதுவரை பாராளுமன்றத்தில் வைக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் உள்ள 36 முஸ்லிம்களும் இதனை வலியுறுத்த தவறிவிட்டனர்.

இந்த பரிந்துரையை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்.

ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: