திங்கள், 2 பிப்ரவரி, 2009

பாரீர்!பாரீர்!! முஸ்லிம்களுக்கு மு.க.,அரசு செய்த சாதனை பாரீர்!


இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளஉள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், முஸ்லிம்களுக்கு தி.மு.க அரசு செய்த சாதனைகள் பட்டியலை குறிப்பிட்டுள்ளார்.அதில் பெரும்பாலானவை சமுதாயத்திற்கு எவ்வித பயனுமளிக்காதவை என்பது குறிப்பிடத்தக்கது.

* மீலாது நபிக்கு அரசு விடுமுறை.

மீலாதுநபி என்பது நபி[ஸல்]அவர்கள் பிறப்பை குறிப்பதாகும்.அதை முஸ்லிம்களில் சிலர் அனுஸ்டித்துவருகிறார்கள். ஆனால் அந்த நாளில்தான் நான் பிறந்தேன் என்றோ,அந்தநாளை கொண்டாடுங்கள் என்றோ எங்கள் தலைவர் நபி[ஸல்]அவர்கள் கட்டளையிடவில்லை. முஸ்லிம்களுக்கு இருபண்டிகைகள் மட்டுமே! அவை ஈகைத்திருநாள், தியாகத்திருநாள் ஆகும். இவையல்லாத வேறு பெருநாட்கள் அல்லது கொண்டாடக்கூடிய நாட்கள் என்று எங்கள் தலைவர் நபி[ஸல்]அவர்கள் காட்டித்தரவில்லை. எனவே இல்லாத ஒரு நாளுக்கு விடுமுறையளித்தது முஸ்லீம் சமுதாயத்திற்கு பயனற்றதாகும்.

*அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்.

ஒரு கல்லூரிக்கு எங்கள் சமுதாயத்தலைவரின் பெயர் சூட்டப்பட்டத்தில் எங்கள் சமுதாயத்திற்கு எவ்வித நன்மையுமில்லை. அந்த கல்லூரி மட்டுமன்றி, அனைத்துக்கல்லூரிகளிலும் எங்கள் சமுதாயத்தவர் எத்தனை சதவிகிதம் கற்கிறார்கள் என்பதுதான் பயனளிக்கும்.

*மதுரை வக்பு கல்லூரி நிறுவனங்களை பராமரிக்க ஆறுலட்சம். வக்புவாரிய சொத்துக்களை பராமரிக்க நாற்பது லட்சம் நிதியுதவி.

அவசியமற்ற சிலைகளை நிறுவ கோடிகளை ஒதுக்கும்போது, தமிழில்படத்திற்கு பெயர்வைத்தால் மானியம் வழங்கும்போது, மேற்கண்ட சில லட்சங்கள் பெருந்தொகையன்று.மேலும் வக்பு சொத்துக்கள் ஆங்காங்கே ஆக்கிரமிப்பது தடுக்கப்பட்டாலே அரசு உதவியின்றி வக்புவாரியம் தனது தேவையை நிறைவேற்றும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுவிடும்.

*காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டியது.

இந்த மணிமண்டபம் மட்டுமன்றி, பொதுவாக நினைவிடங்கள் எதற்கு பயன்படுகிறது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. மேலும் இந்த மனிமண்டபத்தால் முஸ்லீம் சமுதாயத்திற்கு எவ்வித பயனுமில்லை. இப்படி கோடிகளை இறைத்து, மணிமண்டபம் கட்டுவதற்கு பதிலாக காயிதே மில்லத் பெயரில் ஒரு கல்விநிலையம் எழுப்பி, அதில் கல்வியில் பின்தங்கியுள்ள எமது சமுதாய மக்களுக்கு ஆரம்ப கல்விமுதல் உயர்கல்விவரை இலவசமாக கற்கும் வாய்ப்பை அரசு செய்திருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அமைச்சரின் பட்டியலில் சமுதாயத்திற்கு பயன்தராத பலவிசயங்கள் இருந்தாலும்,சமுதாயத்திற்கு பலன்தந்த சிலவிசயங்களும் இடம்பெறாமலில்லை.

*விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு.

*ஓய்வூதியம் பெரும் உலமாக்கள் எண்ணிக்கையை உயர்த்தியது.

*உருது முஸ்லிம்களை பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.

*முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு வழங்கியது. இவை போன்ற பாராட்டத்தக்க அம்சங்களும் உண்டு. இதுபோல் முஸ்லீம் சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய சாதனைகளைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது. தி.மு.க. அரசு முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய நாடினால், எங்கள் சமுதாயத்தலைவர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். எங்கள் சமுதாய மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்று பார்த்து அதை நிறைவேற்றுவதன் மூலம்தான் உங்களுக்கும் நற்பெயர் கிடைக்கும்.எங்கள் சமுதாயமும் பயன்பெறும்.

thanks to : நிழல்களும் நிஜங்களும்

கருத்துகள் இல்லை: